மதிப்பீட்டியல் கண்ணோட்டத்தில் ஒரு பார்வை…
தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும்போது ஒரு விதமான மரத்துப்போன உணர்வோடு வெளியே வந்த அனுபவம் இருக்கிறதா?
“படித்தேன். தயாரானேன். ஆனால் எதிலிருந்து கேட்டார்கள்? என்ன கேட்டார்கள்?”
அந்த உணர்வு தோல்வியின் உணர்வு அல்ல. தன்னம்பிக்கை சரிந்துபோவதன் உணர்வு. மாதக்கணக்கில் உழைத்து தயாரான ஒருவர், தான் படித்தவற்றில் இல்லாத கேள்விகளை வினாத்தாளில் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு — அதை வார்த்தைகளில் சொல்வது கடினம்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது:
தேர்வு தோற்கடித்தது உங்களையல்ல. அது தன்னையே தோற்கடித்துக்கொண்டது.
தேர்வு என்றால் என்ன? — ஓர் அடிப்படைக் கேள்வி
மதிப்பீட்டியல் (Educational Measurement) ஒரு தேர்வை எப்படி வரையறுக்கிறது என்றால் — “ஒரு குறிப்பிட்ட திறனை, குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட மக்களிடம் அளவிடுவதற்கான கருவி” என்று.
இந்த வரையறையில் மூன்று வார்த்தைகள் முக்கியமானவை: குறிப்பிட்ட திறன், குறிப்பிட்ட சூழல், குறிப்பிட்ட மக்கள்.
ஒரு குறிப்பிட்ட பணிக்கான தகுதியை சோதிக்க வடிவமைக்கப்படும் தேர்வு — அந்தப் பணிக்கு தேவையான அறிவையும் திறனையும் மட்டுமே அளவிட வேண்டும். வேறு எதையும் அல்ல. இது தர்க்கம் மட்டுமல்ல — அறிவியல்பூர்வமான கட்டாயம்.
இதற்கு “உள்ளடக்கச் செல்லுபடித்தன்மை” (Content Validity) என்று பெயர். தேர்வு வடிவமைப்பில் இது முதல் நிபந்தனை.
சிலபஸ் ஒரு ஒப்பந்தம்
தேர்வுக்கு முன்னர் வெளியிடப்படும் சிலபஸ் — வெறும் தகவல் அறிவிப்பு அல்ல. அது ஓர் ஒப்பந்தம்.
“இந்த எல்லைக்குள் தயாராகுங்கள், இந்த எல்லைக்குள்ளேயே கேட்கிறோம்” என்ற வாக்குறுதி.
“உயர் வகுப்பிலிருந்து கேள்விகள் கேட்டோம் — வினாத்தாள் தரமானது” என்ற வாதம் பரவலாக நிலவுகிறது. இந்த வாதம் ஓர் உண்மையை மறைக்கிறது: கடினமான வினா என்பதும், தரமான வினா என்பதும் ஒரே விஷயமில்லை.
சிலபஸிற்க்கு உள்ளே நின்றுகொண்டே ஒரு வினாவை மிகக் கடினமாக, ஆழமாக, உயர்சிந்தனைத்திறனை சோதிக்கும் வகையில் கேட்கலாம் — அது தரமான வினா. சிலபஸிற்க்கு வெளியே சென்று, உயர் வகுப்பிலிருந்து வினா கேட்பது — அது கடினமான வினா மட்டுமே; தரமான வினா அல்ல.
இந்த வேறுபாட்டை மழுங்கடிக்கவே, சில தேர்வு வாரியங்கள் “உயர் வகுப்பிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம்” என்ற ஒரு வரியை அறிவிப்பின் எங்காவது ஒரு மூலையில் பதித்துவைக்கின்றன. அந்த ஒற்றை வரி — சிலபஸ் மீறலுக்கான கேடயமாக மாறுகிறது.
ஆனால் மதிப்பீட்டியல் இதை ஏற்காது. “சோதிக்கப்படுவோருக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்” என்று தேர்வுக்கு முன்பே தெளிவாக வரையறுக்கப்படாத எந்த வினாவும் — செல்லுபடியாகாது (Invalid). அது எந்த வகுப்பிலிருந்து வந்தாலும் சரியே.
இதன் விளைவுகள் மிகக் கடுமையானவை. ஒரு தேர்வர் பல மாதங்கள் அறிவிக்கப்பட்ட சிலபஸின்படி ஆழமாகத் தயாராகிறார். குடும்பத்தை, தூக்கத்தை, ஓய்வை தியாகம் செய்கிறார். தேர்வு அறையில் நுழையும்போது வினாத்தாள் வேறொரு கதையைச் சொல்கிறது.
அந்த தருணத்தில் அவர் உணர்வது தோல்வியின் வலி மட்டுமல்ல — ஒரு நம்பிக்கை காட்டி வஞ்சிக்கப்பட்டதன் வலி. இந்த இரண்டும் வேறு வேறானவை. தோல்வியின் வலியை ஏற்கலாம், மீண்டெழலாம். ஆனால் நம்பிக்கை வஞ்சிக்கப்பட்டதன் வலி — அது வேறு வகையான காயம்.
ஒரு பொருத்தமான உதாரணம் சொல்வதென்றால்: “நீந்தத் தெரிந்தவர்களை மட்டும் தேர்வு செய்கிறோம்” என்று அறிவித்துவிட்டு, தேர்வில் சுறாவுடன் போராட வைப்பது — நியாயமான தேர்வல்ல; வேட்டையாடுதல்.
கூற்று-காரண வினாக்கள் — கருவி சரி, பயன்பாடு தவறு
Assertion-Reason (கூற்று-காரண) வினாக்கள் உண்மையில் ஒரு அருமையான கருவி. கொடுக்கப்பட்ட கூற்று உண்மையா? காரணம் கூற்றை சரியாக விளக்குகிறதா? என்ற இரட்டை மட்டத்தில் சிந்திக்க வேண்டும் — இதுவே இந்த வினாவகையின் அடிப்படை அழகு. காரண-காரிய சிந்தனையை, தர்க்கத்திறனை சோதிக்கும் சரியான கருவி.
ஆனால் நடைமுறையில் இந்த வகை வினாக்கள் இரண்டு வழிகளில் திசைமாறுகின்றன.
முதல் திசைமாறல் — கூற்று-காரணம் என்ற அமைப்பிலேயே மாற்றம் வருகிறது. “காரணம்” என்ற இடத்தில் உண்மையான காரணம் இருக்காது; அதற்குப் பதிலாக இன்னொரு கூற்று வரும். அல்லது காரணத்திலேயே நுணுக்கமான எண்கள், ஆண்டுகள், அரிதாக நினைவில் நிற்கும் தகவல்கள் திணிக்கப்படும்.
- கூற்று: இரும்பு துருப்பிடிக்கும்போது எடை அதிகரிக்கிறது.
- காரணம்: இரும்பு + ஆக்சிஜன் → Fe₂O₃ என்ற வினையில் மோலார் நிறை 159.69 g/mol ஆகும்.
இங்கே காரண-காரிய தர்க்கம் சோதிக்கப்படவில்லை — ஒரு நுணுக்கமான எண்ணை மனனம் செய்திருக்கிறீர்களா என்று சோதிக்கப்படுகிறது. கூற்று-காரண வினா என்ற போர்வையில் மனனச் சோதனை நடக்கிறது.
இரண்டாம் திசைமாறல் — எண்ணிக்கையில். மொத்தம் 100 வினாக்களில் 10 அல்லது 15 வினாக்கள் இந்த வகையில் வருவது இயல்பானது. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் இந்த வடிவத்தில் வரும்போது என்னாகிறது?
ஒவ்வொரு கூற்று-காரண வினாவும் சாதாரண வினாவைவிட அதிக நேரம் எடுக்கும். இந்த வினாக்கள் கூட்டமாக வரும்போது தேர்வர்களின் நேர மேலாண்மை சிக்கலுறுகிறது. அழுத்தம் அதிகரிக்கிறது. கடைசி வினாக்களை படிக்கவே நேரமிருக்காது.
இப்போது தேர்வு எதை அளவிடுகிறது? பாட அறிவையா? இல்லை — விரைவாக வாசிக்கும் திறனையும், அழுத்தத்தைத் தாங்கும் திறனையும் அளவிடுகிறது.
உண்மையான கூற்று-காரண வினா என்றால் — கூற்றும் காரணமும் இரண்டுமே உண்மையாக இருக்கும், ஆனால் காரணம் கூற்றை உண்மையில் விளக்குகிறதா இல்லையா என்ற ஒரே ஒரு தர்க்கச் சிக்கல் மட்டுமே மையத்தில் இருக்கும். அதை தீர்மானிக்க சிந்திக்க வேண்டும்.
“உயர்சிந்தனைத்திறன் = கூற்று-காரண வினா” என்று நம்பி, அந்த வகை வினாக்களை அளவுக்கதிகமாக திணிப்பது — உயர்சிந்தனையை சோதிக்கும் முயற்சியல்ல; நேர மேலாண்மையையும் மன அழுத்த சகிப்புத்திறனையும் சோதிக்கும் வஞ்சகம்.
பொருத்துக வினாக்கள் — ஐந்து வினாக்கள் ஒரே கூட்டில்…
“Match the following” என்ற வகை வினாக்களை “உயர்சிந்தனை வினா” என்று வகைப்படுத்துவதில் ஒரு அடிப்படை நேர்மையின்மை உள்ளது.
ஒரு பொருத்துக வினாவை உற்றுப் பாருங்கள்:
பின்வரும் விஞ்ஞானிகளை அவர்கள் கண்டுபிடித்த ஆண்டுகளோடு பொருத்துக:
| விஞ்ஞானி — கண்டுபிடிப்பு | ஆண்டு |
|---|---|
| ரூதர்போர்டு — அணுவின் உட்கரு | (i) 1938 |
| சாட்விக் — நியூட்ரான் | (ii) 1911 |
| ஹான் & ஸ்ட்ராஸ்மன் — அணுப்பிளவு | (iii) 1897 |
| தாம்சன் — எலக்ட்ரான் | (iv) 1932 |
| போர் — அணு மாதிரி | (v) 1913 |
இதில் என்ன சோதிக்கப்படுகிறது?
ஐந்து கண்டுபிடிப்புகளின் துல்லியமான ஆண்டுகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா? என்பது மட்டுமே. இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அணு அறிவியலை எப்படி மாற்றின, ஒன்று மற்றொன்றை எப்படி பாதித்தது என்று எந்தக் கேள்வியும் இல்லை. சிந்தனை தேவையில்லை — 1897, 1911, 1913, 1932, 1938 என்ற ஐந்து எண்களை மட்டும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும்.
உயர்சிந்தனைத்திறனை சோதிக்கும் முயற்சியல்ல இது — ஐந்து நினைவுக்கூர் வினாக்களை ஒரே கூட்டில் அடைக்கும் முயற்சியன்றி வேறல்ல.
இதோடு நில்லாமல், இந்த வினாவின் விடைத்தெரிவு அமைப்பும் சிக்கலானது. ஐந்தை ஐந்தோடு பொருத்தும்போது, ஒரே ஒரு இணை மட்டும் தவறாக அறிந்திருந்தாலும் — மொத்த வினாவும் தவறாகும். ஆனால் மாறாக, ஐந்தில் மூன்று இணைகள் தெரிந்திருந்தாலே — விடைத்தெரிவுகளை வடிகட்டி, மீதமிருப்பவற்றை ஊகித்து சரியான விடையை அடையலாம்.
நன்கு தேர்வுக்கு தயார் செய்தவர் கூட ஒரே ஓர் இணை தவறினால் விடை தவறாகும். மூன்று மட்டும் அறிந்தவர்கூட ஊகத்தால் சரியான விடையை அடையலாம்.
ஆழமான அறிவு தண்டிக்கப்படலாம்; புத்திசாலித்தனமான ஊகம் பலனளிக்கலாம்.
இது திறனை அளவிடுகிறதா? அல்லது அளவிடுவது போல் தோற்றமளிக்கிறதா?
மனப்பாடம் vs. சிந்தனை — ப்ளூம் சொன்னது
ப்ளூமின் வகைப்பாட்டியல் (Bloom’s Taxonomy) ஒரு மிக எளிய படிநிலையை சொல்கிறது:
நினைவு → புரிதல் → பயன்பாடு → பகுப்பாய்வு → மதிப்பீடு → படைப்பாற்றல்
“எந்த ஆண்டில் நடந்தது?”, “இந்த விஞ்ஞானி எந்த நாட்டினர்?” — இவை முதல் படியில் — நினைவில் — நிற்கின்றன. இவை அவசியமற்றவை என்று அர்த்தமில்லை. ஆனால் ஒரு தேர்வு முழுவதும் இந்த அளவிலேயே மட்டும் நடப்பதென்றால்?
“ஏன் நடந்தது?”, “இது எந்தச் சூழலில் பொருந்தும்?”, “இந்த முரண்பாட்டை எப்படி தீர்ப்பாய்?” என்ற கேள்விகள் மேல் படிகளில் உள்ளவை — இவற்றை MCQ மூலமும் கேட்கலாம். ஆனால் அதற்கு வடிவமைப்பாளருக்கு பாடம் ஆழமாகத் தெரிய வேண்டும்; எதை கேட்பதைவிட கேட்காமல் விடுவது அறிவுடையது என்று தெரிய வேண்டும்.
பாகுபாட்டுக் குறியீடு — தேர்வின் கண்ணாடி
ஒரு வினாத்தாள் நல்லதா கெட்டதா என்பதை அறிவதற்கு மதிப்பீட்டியல் ஒரு எளிய அளவுகோல் தருகிறது: பாகுபாட்டுக் குறியீடு (Discrimination Index).
அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் ஒரு வினாவை சரியாக விடையளித்தார்களா? குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தவறாக விடையளித்தார்களா?
இந்த இரண்டும் நடந்தால் — அந்த வினா நல்ல வினா.
மாறாக, திறமையானவர்கள் தவறாக விடையளித்து, திறமை குறைந்தவர்கள் சரியாக விடையளித்தால் — அந்த வினா திறனை அளவிடவில்லை; வேறு ஏதோ ஒன்றை — ஊகத்தை, அதிர்ஷ்டத்தை, அல்லது வினாவின் சொல்லாட்சி தந்திரத்தை — அளவிட்டிருக்கிறது.
இதை“கட்டமைப்புத் தொடர்பற்ற கடினத்தன்மை” (Construct-Irrelevant Difficulty) என்று அழைக்கிறார்கள். சோதிக்கப்பட வேண்டிய திறனுக்கு தொடர்பில்லாத காரணி தேர்வரின் மதிப்பெண்ணை தீர்மானிக்கும்போது — தேர்வு தன் நோக்கத்தை இழந்துவிடுகிறது.
சமவிரிப்பின்மை — யாரும் பேசாத குறை
ஒரு தேர்வின் வினாக்கள் பாடத்திட்டம் முழுவதும் சமநிலையாக பரவியிருக்க வேண்டும். இதை மதிப்பீட்டுவியலில் “Blue Print” என்று சொல்வார்கள் — எந்தப் பகுதியிலிருந்து எத்தனை வினாக்கள் என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வினா வரைபடம்.
இந்த வரைபடம் இல்லாமல் போகும்போது என்னாகிறது?
ஒரு தேர்வர் பாடத்திட்டம் முழுவதையும் சமமாக படிக்கிறார். ஆனால் வினாத்தாளில் குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்து மட்டும் வினாக்கள் குவிந்திருக்கின்றன. மற்ற பகுதிகளை ஆழமாகப் படித்தது வீணாகிறது. அந்த உழைப்பு தேர்வில் எங்கும் பிரதிபலிக்கவில்லை.
இது தேர்வரின் தவறா? இல்லை — வினாத்தாளின் தவறு.
ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் மண் பரிசோதனை செய்யும்போது, வயலின் ஒரே ஒரு மூலையில் மட்டும் மண்ணை எடுத்துச் சோதனை செய்ய மாட்டார்கள். வயல் முழுவதும் ‘W’ அல்லது ‘Z’ வடிவில் பல இடங்களில் மாதிரி (Sample) எடுத்து, அதை ஒன்றாகக் கலந்துதான் பரிசோதிப்பார்கள். ஒரு மூலையில் மட்டும் மண்ணை எடுத்து “இந்த நிலம் முழுவதும் வளமானது” அல்லது “வளமற்றது” எனச் சொல்வது எவ்வளவு அறிவியலற்றதோ, அதே போலத்தான் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் வைத்து தேர்வரின் ஒட்டுமொத்தத் திறனை எடைபோடுவதும்.
சமவிரிப்பற்ற வினாத்தாள் அதையே செய்கிறது. பாடத்திட்டத்தின் ஒரு மூலையை மட்டும் அளவிட்டுவிட்டு, “இந்தத் தேர்வர் தகுதியானவரா இல்லையா” என்று தீர்மானிக்கிறது. இது “நம்பகமற்ற சாம்பிள்” (Unreliable Sample) — மதிப்பீட்டுவியலில் இது மிகக் கடுமையான குறைபாடு.
படித்தவர் தோற்கிறார். படிக்காதவர் வெல்கிறார். தேர்வு யாரையும் அளவிடவில்லை — அது வெறும் சூதாட்டமாகிவிடுகிறது.
வாஷ்பேக் — நாளை வகுப்பறையில் என்ன நடக்கும்?
தேர்வு எப்படி இருக்கிறதோ, கற்பித்தல் அப்படி திரும்பும் — இதை “வாஷ்பேக் விளைவு” (Washback Effect) என்று சொல்கிறார்கள். தேர்வு வடிவமைப்பின் மறைமுகமான, ஆனால் மிக ஆழமான விளைவு இது.
யோசித்துப் பாருங்கள்.
தேர்வில் ஆண்டுகளும் எண்களும் கேட்கப்படுகின்றன என்று தெரிந்தால் — வகுப்பறையில் என்ன நடக்கும்? ஆசிரியர் கரும்பலகையில் ஆண்டுகளை எழுதுவார். மாணவர்கள் அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதுவார்கள். வீட்டில் திரும்பத் திரும்ப மனனம் செய்வார்கள். “ஏன் இந்த ஆண்டு முக்கியம்? அதற்கு முன் என்ன நடந்தது? அதன் விளைவு என்ன?” என்ற கேள்விகளுக்கு இடமே இருக்காது.
தேர்வில் பொருத்துக வினாக்கள் அதிகமாக வருகின்றன என்று தெரிந்தால் — கற்பித்தல் பட்டியல்களாக மாறும். யார் என்ன கண்டுபிடித்தார்கள், எந்த ஆண்டில் என்ன நடந்தது — இவை மட்டுமே பாடமாகும். தொடர்புகளும் காரணங்களும் விளைவுகளும் வகுப்பறையிலிருந்து மெல்ல மறைந்துவிடும்.
தேர்வு மாணவர்களை மட்டும் வடிவமைப்பதில்லை — கற்பித்தலையும் வடிவமைக்கிறது. ஆசிரியர்களையும் வடிவமைக்கிறது. இன்று தவறாக வடிவமைக்கப்படும் ஒரு தேர்வு — நாளை ஒரு தலைமுறையின் சிந்திக்கும் திறனை நிர்ணயிக்கிறது.
இதனால்தான் மதிப்பீட்டியல் “தேர்வு வடிவமைப்பு அறிவியல்” என்று வலியுறுத்துகிறது — கலையல்ல, அறிவியல். ஒரு தவறான தேர்வு வடிவமைப்பு வெறும் ஒரு வினாத்தாளை மட்டும் பாதிக்கவில்லை — தலைமுறைகளை பாதிக்கிறது.
இறுதியில் — தோற்றது தேர்வாகவும் இருக்கலாம்.
தயாரிப்பு இருந்தது. அர்ப்பணிப்பு இருந்தது. அறிவு இருந்தது. என்கிறீர்களா?
ஆனால் சில நேரங்களில் வினாத்தாள் அந்த அறிவை அளவிடுவதில்லை — வேறு ஏதோ சிலவற்றை அளவிடுகிறது. அல்லது அளவிட முயன்று தோற்றுவிடுகிறது.
அப்படி நடக்கும்போது, அது வெளிப்படுத்துவது தேர்வர்களின் திறனின்மையை அல்ல — வினாத்தாள் வடிவமைப்பின் தரத்தை மட்டுமே.
சிலபஸை மீறும் வினாக்கள், மனனத்தை மட்டுமே சோதிக்கும் கூற்று-காரண வினாக்கள், ஐந்து நினைவுக்கூர் வினாக்களை ஒரே கூட்டில் அடைக்கும் பொருத்துக வினாக்கள், சமவிரிப்பற்ற வினா அமைப்பு — இவையெல்லாம் இருக்கும்போது தேர்வு திறனை அளவிடுவதில்லை; திறனை மறைக்கிறது.
தேர்வு வடிவமைப்பு என்பது வெறும் வினாக்கள் தொகுக்கும் பணியல்ல — அது ஒரு அறிவியல். மதிப்பீட்டியல் இதை மிகத் தெளிவாகச் சொல்கிறது:
“தேர்வின் செல்லுபடித்தன்மை (Validity) இல்லாமல், மதிப்பெண் வெறும் எண்ணே.”
உண்மையான அறிவையும், திறனையும் அளவிடத் தவறும் தேர்வு, தன்னையே அளவிட்டுக்கொள்கிறது.

Good information
மிகச் சரியான பகுப்பாய்வு.
Good
தங்களது அன்புக்கு மிக்க நன்றி சார்…