— அறிவியல் பாடநூல் வடிவமைப்பு குறித்த ஓர் உரையாடல்
ஒரு பாடநூல் என்பது வெறும் தகவல்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு கற்பித்தல் கருவி. ஓர் ஆசிரியர் இல்லாதபோதும், அந்தப் பாடநூல் தனியாகவே ஒரு மாணவருக்குக் கற்பிக்க வேண்டும். அதை சாத்தியமாக்குவது — உள்ளடக்கம் மட்டுமல்ல; உள்ளடக்கம் எப்படிக் காகிதத்தின் மீது வடிவம் கொள்கிறது என்பதுவும் முக்கியம். ஒரு பாடநூல் பக்கத்தின் ஒவ்வொரு சென்டி மீட்டரும் ஒரு கற்பித்தல் முடிவு.
நமது கல்வி உரையாடல் வரிசையில் உள்ள இந்த ஐந்தாவது கட்டுரை பாடநூல் வடிவமைப்பினுள் ஒரு பயணம்.. சற்று நீளமான பயணம்தான். ஆனால் சுவராசியமான பயணம்…
ஒரே உள்ளடக்கம் — இரு பக்கங்கள்
ஒரே உள்ளடக்கம் — இரு பக்கங்கள்
“ஒளிவிலகல்” (Refraction of Light) என்ற ஒரே கருத்தை விளக்கும் இரு வேறு வடிவங்களை ஒப்பிடுவோம். இரண்டிலும் தகவல் ஒன்றுதான், ஆனால் வெளிப்படுத்தும் விதம் வேறு.
- முதல் வடிவம் — தகவல் குவியல்: பக்கத்தின் ஒருபுறம் வரையறை மற்றும் நீண்ட விளக்கம்; மறுபுறம் ஒரு பெரிய படம். மாணவன் உரையையும் படத்தையும் இணைக்கத் தன் கவனத்தை பக்கங்களுக்கிடையே அலைபாய விட வேண்டியிருக்கிறது (Split attention). இது மூளைக்குத் தேவையற்ற சுமையை (Extraneous load) அளித்து கற்றலைத் தாமதப்படுத்துகிறது.
- இரண்டாவது வடிவம் — கற்றல் கருவி: “டம்ளர் தண்ணீருக்குப் பின்னால் இருக்கும் அம்புக்குறி திசை மாறுவது ஏன்?” என்ற புதிரான வினாவோடு தொடங்குகிறது. இதற்கான அறிவியல் விளக்கமும் வரைபடமும் மிக அருகருகே (Integrated) பிணைக்கப்பட்டுள்ளன. இறுதியில் ஒரு எளிய செயல்முறைப் பயிற்சி.
இரண்டு பக்கங்களிலும் உள்ளடக்கம் ஒன்றே; ஆனால், இரண்டாம் வடிவம் மாணவனின் மூளைச் சுமையைக் குறைத்து, அவனோடு கைகோர்த்து நடக்கிறது.
வடிவமைப்பு என்பது வெறும் அலங்காரம் அல்ல; கிட்டத்தட்ட அது ஒரு கற்பித்தல் முறை
ஒரு பாடநூல் எழுத்தாளர் என்ன சொல்ல வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்தால் போதாது — அதை எப்படி, எங்கே, எந்த அளவில், எந்த வடிவத்தில் பக்கத்தில் கொண்டுவருகிறார் என்பதும் மிகவும் முக்கியம்.
இந்தக் கட்டுரையில், உலக ஆராய்ச்சியின் வழியாக நாம் கற்க வேண்டிய அந்த வடிவமைப்புக் கொள்கைகளைப் பார்ப்போம் — Sweller-ன் cognitive load கோட்பாடு, Mayer-ன் 12 multimedia கொள்கைகள், Paivio-ன் dual coding, OpenSciEd-ன் unit-opener/closer அணுகுமுறை, Reiser-ன் storyline கதைப்போக்கு — மற்றும் AI யுகத்தில் பாடநூல் எதிர்காலம் எங்கே செல்கிறது என்பது வரை.

பக்கத்தின் உளவியல் — ஏன் சில பக்கங்கள் சோர்வளிக்கின்றன?
ஒரு மாணவன் ஒரு பாடநூல் பக்கத்தை திறக்கிறான். அந்தப் பக்கத்தில் என்ன இருக்க வேண்டும், என்ன இருக்கக் கூடாது என்று முடிவெடுக்க — நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, அவனுடைய உழைக்கும் நினைவகம் (Working Memory) எப்படிச் செயல்படுகிறது என்பதை.
1988-ல் ஆஸ்திரேலிய கல்வி உளவியலாளர் John Sweller (University of New South Wales) வெளியிட்ட Cognitive Load Theory (CLT) — இன்று உலகெங்கிலும் பாடநூல் வடிவமைப்பின் அறிவியல் அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனிதனின் உழைக்கும் நினைவகம் — ஒரு குறிப்பிட்ட கணத்தில் — 3 முதல் 5 சிந்தனைப் பகுதிகளை மட்டுமே ஒரே நேரத்தில் சமாளிக்க முடியும். இந்த அளவைத் தாண்டினால் — அதிசுமை (overload) ஏற்படுகிறது. கற்றல் நிற்கிறது, என்கிறது அவரது ஆராய்ச்சி
Sweller-ம் அவருடைய ஒத்திசைவாளர்களும் (Sweller, van Merriënboer & Paas, 1998) கூறுவது — ஒரு கற்றல் சூழலில் மூன்று வகையான cognitive load உண்டு:
முதலாவது — இயல்பான சுமை (Intrinsic load). இது தலைப்பின் சொந்தக் கடினத்தன்மை. ”நியூட்டனின் இரண்டாம் விதி” என்பது ”ஆற்றலின் மாற்றுருக்கொள்ளும் தன்மை” என்பதை விட எளிமையானது. இதை வடிவமைப்பால் மாற்ற முடியாது — ஆனால் சிறு கட்டங்களாகப் பிரித்து, படிப்படியாக அறிமுகப்படுத்த முடியும்.
இரண்டாவது — வெளி-சுமை (Extraneous load). இதுதான் முக்கியம். இது தலைப்பின் கடினத்திற்கு வெளியே — வடிவமைப்பின் தவறுகளால் — மாணவன் மீது சுமத்தப்படும் தேவையற்ற சுமை. ”பக்கத்தில் படத்தைப் பார்த்த பிறகு, விளக்கத்தைப் படிக்க வேறு பக்கம் திரும்ப வேண்டியிருப்பது”, ”ஒரே நேரத்தில் மூன்று வண்ணப் பெட்டிகளில் மூன்று வேறு கருத்துகள் வருவது”, ”ஆசிரியர் ஒரு படத்தை விளக்க, அதே நேரம் மாணவன் அந்தப் படத்திற்குக் கீழே இருக்கும் நீண்ட பத்தியையும் படிக்க வேண்டியிருப்பது” — இவை அனைத்தும் extraneous load. நல்ல வடிவமைப்பு செய்யும் முதல் வேலை — இந்தச் சுமையைக் குறைப்பது.
மூன்றாவது — பயனுள்ள சுமை (Germane load). இது நல்ல சுமை — மாணவன் சிந்திக்கப் பயன்படும் சுமை. ”இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன ஒற்றுமை?” என்ற கேள்விக்கு பதில் தேடும்போது அவன் மூளையில் ஏற்படும் சுமை. நல்ல வடிவமைப்பு — extraneous load-ஐக் குறைத்து, அந்த இடத்தில் germane load-க்கு வழிசெய்கிறது.
ஒரு உதாரணம் — நெருக்கமாக வடிவமைக்கப்பட்ட பக்கம்.
ஒரு பாடநூல் பக்கத்தில் — அதிக உள்ளடக்கம் இருக்க வேண்டுமா, குறைவாக இருக்க வேண்டுமா? பல பாடநூல் வடிவமைப்பாளர்கள் கருதுவது — ”அதிக உள்ளடக்கம் = அதிக மதிப்பு”. ஆனால் CLT நமக்குச் சொல்வது நேர்மாறானது. ஒரு பக்கத்தில் ஐந்து கருத்துகளைச் சொல்லும்போது — ஒவ்வொரு கருத்தும் மற்ற நான்கினுடைய பின்னணி இரைச்சலோடு (background noise) போராடி படிக்கும் மாணவனை அடைய வேண்டியிருக்கிறது.
குறைவான உள்ளடக்கம் = ஆழமான புரிதல் — இதையே PSSC-ம் சொன்னது; Sweller இதை ஆராய்ச்சி அளவில் நிரூபித்தார்.
நடைமுறை விளைவு
ஒரு பக்கம் வடிவமைக்கும்போது, இந்த ஒரே கேள்வியை மட்டும் கேட்போம்: ”இந்தப் பக்கத்தில் எது தேவையற்றது? எதை அகற்றினால் கருத்து இன்னும் தெளிவாகும்?” சிறந்த வடிவமைப்பு என்பது — மேலும் சேர்ப்பதல்ல; மேலும் நீக்குவது.
படமும் சொல்லும் — Mayer-ன் 12 கொள்கைகள்
ஒரு பாடப்புத்தகம் — அதன் இயல்பிலேயே — ஒரு multimedia கருவி. அதில் உரை இருக்கிறது. படங்கள் இருக்கின்றன. வரைபடங்கள் இருக்கின்றன. சமன்பாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து எப்படி ஒரு கருத்தைக் கடத்த வேண்டும்?
இந்தக் கேள்விக்கு உலகத் தரமான ஆராய்ச்சி அடிப்படையிலான பதிலை, கடந்த 30 ஆண்டுகளாக, Santa Barbara பல்கலைக்கழகத்தின் கல்வி உளவியலாளர் Richard Mayer கூறி வருகிறார்.
அவருடைய Cognitive Theory of Multimedia Learning — பாடநூல்களுக்கு மட்டுமல்ல, விளக்கக் காணொளிகள், கல்விக் கணினி மென்பொருள், PowerPoint slides, இணைய பாடங்கள் என அனைத்துக்கும் — அடிப்படையான வடிவமைப்புத் தரநிலையாக மாறியுள்ளது.
Mayer-ன் 12 கொள்கைகளில் — பாடநூல் சூழலில் மிகவும் தாக்கம் செலுத்தும் ஆறு கொள்கைகளை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.
1. அருகாமைக் கொள்கை (Spatial Contiguity Principle)
ஒரு படம் தொடர்பான உரை விளக்கம் — அந்தப் படத்திற்கு மிக அருகிலேயே வைக்கப்பட வேண்டும். பக்கத்தின் ஒருபுறம் படம், மறுபுறம் உரை — இது அழகாகத் தோன்றலாம் ஆனால் கற்பித்தல் ரீதியாக மோசம். மாணவன் கண்களை இருபக்கமும் அலைய விட்டு, படத்திலும் உரையிலும் தொடர்பு ஏற்படுத்தத் தனிப் பாடுபட வேண்டியிருக்கிறது (split attention effect).
சிறந்த பாடநூல்களில் வரைபடங்களின் ஒவ்வொரு பாகமும், அதற்கான விளக்கக் குறிப்புகளுடன் (Annotations) அந்தந்தப் பகுதிக்கு அருகிலேயே இடம்பெற்றிருக்கும். OpenStax மற்றும் Cambridge IGCSE பாடப்புத்தகங்கள் இம்முறையை மிகக் கச்சிதமாகப் பின்பற்றுகின்றன
2. ஒற்றை நேரக் கொள்கை (Temporal Contiguity Principle)
தொடர்புள்ள உரையும் படமும் — ஒரே நேரத்தில் மாணவன் முன்னே வர வேண்டும். ஒரு பக்கத்தில் படம், அதற்கான விளக்கம் அடுத்த பக்கத்திற்கு திரும்பினால் கிடைப்பது — இதை மாணவன் இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் புரிந்து, பின்னர் இணைக்க வேண்டியிருக்கிறது. நினைவகச் சுமை அதிகரிக்கிறது. நெறி: ஒரு படமும் அதன் விளக்கமும் ஒரே பக்கத்தில் — ஒற்றை விரிப்பில் (single spread) — இருக்க வேண்டும்.
3. தெளிவுக் கொள்கை (Coherence Principle)
இது அநேக பாடநூல்களில் மிகப் பெரும் தோல்வியாக இருக்கும் இடம். கற்றலுக்கு உதவாத படங்கள், அலங்காரங்கள், சிறு பெட்டிகள், புள்ளி-விவரங்கள், கதைப் பகுதிகள் — இவை அனைத்தும் மாணவனின் கவனத்தைச் சிதறடிக்கின்றன. ”மாணவன் ஈர்ப்பு பெற வேண்டுமே” என்று கருதி, ஒரு வேதியியல் பாடநூல் பக்கத்தில் ஒரு cartoon character-ஐ ஓரத்தில் வைப்பது — அது மாணவனை மகிழ்விக்கலாம், ஆனால் கற்றலை மெதுவாக்குகிறது. Mayer-ன் ஆராய்ச்சிகள் தெளிவாகச் சொல்கின்றன: அழகுக்காக சேர்க்கப்படும் ஒவ்வொரு கூறும் — ஒரு cognitive vampire.
4. மிகைப்பாடற்ற கொள்கை (Redundancy Principle — பாடநூலுக்கு உகந்த விளக்கம்)
Mayer-ன் original redundancy principle — narration + graphics-உடன் on-screen text யை சேர்ப்பது கற்றலைக் குறைக்கும் என்ற கொள்கை multimedia சூழலில் குறிப்பிடப்பட்டது.
அந்த கொள்கையை அப்படியே பாடநூல் சூழலுக்குப் பொருத்தினால் — ஒரு படம் தனியாக ஒரு கருத்தைச் சொல்லத் தகுதியுடையதாக இருக்கும்போது, அதே கருத்தை வார்த்தைகளால் மீண்டும் முழுவதுமாகச் சொல்வது தேவையற்றது.
படம் நேரடியாகச் சொல்லும் கூறுகளை உரையில் மீண்டும் சொல்ல வேண்டாம்; உரையில் இருக்க வேண்டியது — படத்தில் இல்லாத கூடுதல் விளக்கம், காரணம், அல்லது அறிவியல் கொள்கை மட்டுமே.
5. சுட்டிக்காட்டும் கொள்கை (Signaling Principle)
ஒரு பெரிய பத்தியில், அல்லது ஒரு பெரிய படத்தில் — ”முக்கியமான பகுதி எது” என்பதை மாணவனின் கண்களுக்கு முதல் பார்வையிலேயே தெரியும்படி குறிப்பிட வேண்டும். தடித்த எழுத்து, வண்ண அடிக்கோடு, அம்புகள், எண்களிட்ட steps, hierarchy-உடைய headings — இவை சுட்டிக்காட்டிகள் (signals). மாணவன் முழுப் பக்கத்தையும் சமமாகப் படிக்க வேண்டியதில்லை; அவன் கண்கள் தானாகவே முக்கியப் பகுதியை நோக்கி நகரும்.
6. பகுதிப்படுத்தும் கொள்கை (Segmenting Principle)
ஒரு அலகை — ஒரே நீண்ட பகுதியாக இல்லாமல், சிறிய துணைப் பிரிவுகளாக (sections, sub-sections) வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் — ஒரு சிறு check-in கேள்வி, அல்லது ”இந்தப் பகுதியில் நாம் கற்றது…” போன்றவை இருக்கலாம்.
இந்த ஆறு கொள்கைகளும் — ஒரு பாடநூல் எழுத்தாளர் தனது draft-ஐ இறுதிசெய்வதற்கு முன், ஒரு checklist-ஆகச் செயல்படலாம். ஒவ்வொரு பக்கத்தையும் — Mayer-ன் கண்ணோட்டத்தில் — மறுபரிசீலனை செய்தால், பல சிறிய ஆனால் ஆழமான முன்னேற்றங்கள் சாத்தியமாகும்.
இரட்டை குறியீடு — நினைவில் நிற்கும் படங்கள்
1971-ல் கனேடிய உளவியலாளர் Allan Paivio முன்வைத்த Dual Coding Theory (DCT) — மனிதனின் நினைவகம் இரண்டு தனித் தடங்களில் தகவலைப் பதிவு செய்கிறது என்று காட்டியது. ஒன்று — மொழித் தடம் (verbal channel). மற்றொன்று — காட்சித் தடம் (visual channel). இரண்டிலும் ஒரே தகவல் பதிவாகும்போது — அதன் நினைவுத் திறன் இரண்டு மடங்காகிறது.
ஒரு உதாரணம் சொல்லலாம். ”ஒளி மூலத்திலிருந்து வெளிப்பட்டு, பொருளில் பட்டுத் திரும்பி, கண்ணை அடைந்து, பின்னர் மூளையில் பதிவாகிறது” என்ற வாக்கியத்தை மட்டும் ஒரு மாணவன் படித்தால் — அது ஒரு கோட்பாடு, ஒரு வார்த்தைக் கோர்வை. அதே வாக்கியத்துடன், ஒரு படம் — ஒரு பந்து, ஒரு கண், ஒரு மூளை, இடையே ஒளிக்கதிர் — அதே வாக்கியம் இப்போது இரண்டு வடிவங்களில் அவன் மனதில் பதிவாகிறது. காலம் கடந்த பிறகு, அவன் வார்த்தைகளை மறந்துவிட்டாலும் — படத்தை நினைவில் வைத்திருப்பான். படத்தின் வழியாக வார்த்தைகளுக்கு மீண்டும் வழி கிடைக்கும்.
பாடநூலுக்கான குறிப்புகள்
ஒன்று — கருத்துகளை வரைபடமாக மாற்றுங்கள். ஒவ்வொரு புதிய கருத்துக்கும் — அதைச் சித்தரிக்கக்கூடிய ஒரு படத்தை, ஒரு diagram-ஐ, ஒரு flowchart-ஐ உருவாக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும். “இதை எப்படிப் படமாக்குவது?” என்ற கேள்வியே — பல நேரங்களில் — கருத்தை ஆழமாகப் புரிய வைக்கிறது.
இரண்டு — படம் வெறும் அலங்காரமாகாது. Mayer-ன் coherence principle இங்கே ஒன்றுசேர்கிறது.
ஒரு படம் — கருத்தோடு நேரடியாக சம்பந்தப்பட வேண்டும். “ஒளிவிலகல்” பாடப் பக்கத்தில் — ஒரு குழந்தை சிரிப்பதோ, ஒரு பூ பூத்திருப்பதோ — கவனத்தைச் சிதறடிக்கின்றன. ஈர்க்கவில்லை.
சேர்க்கப்படும் ஒவ்வொரு படமும் — “இது இல்லாமல் கருத்தைப் புரியவைக்க முடியுமா? என்ற சோதனையில் தேற வேண்டும்.
மூன்று — தமிழ் Typography-ன் சவால். ஆங்கில எழுத்துக்கள் சீரான Baseline மற்றும் x-height அடிப்படையில் அமைந்தவை; அவற்றின் கிரிட் (Grid) எளிமையானது. ஆனால் தமிழ் அப்படியல்ல. கொ, கோ போன்ற எழுத்துக்களின் கொம்புகள் மேலேயும், வூ, பூ, டூ போன்ற எழுத்துக்களின் காரக் குறிகள் கீழேயும் நீளுபவை. ஒரே வரியில் எழுத்தின் உயரம் பலவாறு மாறுபடுவதால், ஆங்கில வடிவமைப்புக் கொள்கைகளை அப்படியே தமிழுக்கு நகலெடுப்பது பெரும் பிழை.
ஒரு படத்தின் அருகே தமிழ் விளக்கக் குறிப்புகளை (Labels) வைக்கும்போது, மேலிருக்கும் கொம்புகள் முந்தைய வரியோடும், கீழிருக்கும் குறிகள் அடுத்த வரியோடும் மோதி வாசிப்பைக் கடினமாக்கும்.
பாடநூல் வடிவமைப்பாளர்கள் நினைவில் கொள்ள வேண்டிய பொன்விதி: தமிழுக்கு ஆங்கிலத்தை விட 10-15% கூடுதல் வரி-இடைவெளி (Leading) தேவை. ஆங்கிலத்திற்கு 1.4 Leading போதும் என்றால், தமிழுக்கு 1.5–1.6 அவசியம். இந்த கூடுதல் இடைவெளிதான் உயிர்மெய் குறிகள் ‘சுவாசிக்க’ இடம் கொடுத்து, பக்கத்தின் நெருக்கத்தைக் குறைத்து வாசிப்பை எளிதாக்கும்.
அலகின் கதைப்போக்கு
இதுவரை நாம் பேசியது — ஒரு பக்கம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும். இப்போது சற்று பின் நகர்ந்து — ஒரு முழு அலகு — அதன் 15, 20, அல்லது 30 பக்கங்கள் — ஒரு கதையாக எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
NGSS பாடத்திட்டத்திற்கு ஆராய்ச்சி அடிப்படையை உருவாக்கியவர்களில் ஒருவரான Northwestern பல்கலைக்கழகப் பேராசிரியர் Brian Reiser, Coherent Storyline அணுகுமுறையை உருவாக்கினார். அவர் கூறுவது தெளிவானது: ஓர் அறிவியல் அலகு என்பது — ஆசிரியர் சொல்லத் திட்டமிட்ட கருத்துகளின் வரிசை (sequence of concepts) அல்ல. அது மாணவர்களின் அறிதலின் பயணம் — ஒரு புதிரிலிருந்து தொடங்கி, அந்தப் புதிருக்கான விடையை அவர்களே அறிவியல் முறையில் கட்டியெழுப்பும் ஒரு பயணம்.
ஒரு உதாரணம். “வெப்பமும் வெப்பநிலையும்” என்ற ஒரு பாரம்பரியப் பாடநூல் அலகில் — ஒரு வழக்கமான அமைப்பு இப்படி இருக்கும்:
பாரம்பரிய அமைப்பு
- வெப்பம் — வரையறை
- வெப்பநிலை — வரையறை
- வெப்பநிலைமானி — செயல்பாடு
- வெப்பத்தின் அலகுகள் — calorie, joule
- வெப்பநிலைமானிகளின் வகைகள்
- வெப்பக் கடத்துத் திறன்
- பயிற்சிக் கேள்விகள்
இந்த அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் — தனித்தனியாக நிற்கிறது. மாணவன் ஒவ்வொன்றையும் தனியாகப் படிக்கிறான், மனப்பாடம் செய்கிறான். அலகு முடிந்தபின் அவன் வைத்திருப்பது — ஏழு தனிப் பெட்டிகள் — அவற்றுக்குள் என்ன தொடர்பு என்று தெரியாமல்.
இதே அலகை — Storyline அணுகுமுறையில் — மறுவடிவமைப்பு செய்தால் இப்படி இருக்கும்:
Storyline அணுகுமுறை
1. திறவுகோல் நிகழ்வு: “ஒரே வீட்டில் இரு குடங்களில் தண்ணீர் இருக்கிறது. காலையில் தொட்டால் ஒன்று குளிர்ந்தும், மற்றொன்று வெதுவெதுப்பாகவும் தெரிகின்றனது — ஏன்?” → வகுப்பின் DQB உருவாக்கம்.
2. முதல் ஆய்வு: இரு பொருட்களின் “சூடு- குளிர்ச்சி” உணர்வை அவர்களே சோதிக்கின்றனர் → உணர்வு துல்லியமற்றது என்பதை உணர்கின்றனர் → “எப்படி துல்லியமாக அளக்கலாம்?” கேள்வி எழுகிறது.
3. தீர்வு: தெர்மாமீட்டர் அறிமுகம் — அது ஏன் வேலை செய்கிறது (விரிவாக்கம்). இங்கே “வெப்பநிலை” என்ற கருத்து அறிமுகமாகிறது.
4. இரண்டாம் கேள்வி: “வெப்பநிலை ஒரே அளவில் இருந்தாலும், ஒரு குடத்தின் நீர் வேகமாக குளிர்கிறது, மற்றொன்று மெதுவாக. ஏன்?” → வெப்பக் கடத்துத் திறன், பொருளின் வெப்பக் கொள்கை ஆகியவை இங்கே அறிமுகமாகின்றன.
5. முடிவு: ஆரம்பத்தில் கேட்ட திறவுகோல் நிகழ்வை — மாணவர்களே — முழுமையாக விளக்கும் திறமை பெறுகின்றனர். DQB-ல் தொடங்கிய கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்கள் கிடைத்திருக்கும்.
6. பயன்பாடு: இந்தக் கருத்துகளை வீட்டில் — குளிர்சாதனம், thermos flask, சமையல் — எங்கே காண்கிறோம்? மாணவர்களே உதாரணங்கள் தருகின்றனர்.
இரண்டாம் அமைப்பில் — ஒவ்வொரு பகுதியும் முந்தைய பகுதியிலிருந்து இயற்கையாக எழுகிறது. ஒரு கேள்வியின் விடை — அடுத்த கேள்வியை எழுப்புகிறது. மாணவன் வைத்திருப்பது ஏழு தனிப் பெட்டிகள் அல்ல — ஒரே சங்கிலி. ஒன்றை இழுத்தால், மற்றவை அதனோடு வருகின்றன.
பாடநூல் வடிவமைப்புக்கு இதன் பொருள்
முதலில் — அலகின் முதல் இரண்டு பக்கங்கள் மிக முக்கியம். இங்கேதான் திறவுகோல் நிகழ்வு வைக்கப்படுகிறது. வரையறையோடு தொடங்கும் அலகு — அதன் முதல் பக்கத்திலேயே மாணவனின் ஆர்வத்தை இழந்துவிடுகிறது. தொடரின் மூன்றாவது கட்டுரையில் நாம் விரிவாகப் பார்த்தபடி — ஒரு புதிரான நிகழ்வோடு தொடங்கி, “இதை விளக்க முடியுமா?” என்ற சவாலை மாணவன் முன் வைக்க வேண்டும்.

இரண்டாவது — ஒவ்வொரு உப-தலைப்பும் முந்தையதன் இயற்கையான தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு பாடநூல் உப-தலைப்புகளை — ஆசிரியர் என்ன கற்பிக்க விரும்புகிறார் என்பதன் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் போதாது; மாணவன் என்ன கேள்வி கேட்கப் போகிறான் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். “X என்றால் என்ன?” என்ற headings-ஐ விட — “ஏன் X இப்படி நடக்கிறது?” அல்லது “X-ஐ எப்படிக் கண்டறிவது?” போன்ற headings — கதைப்போக்கை இயக்குகின்றன.
மூன்றாவது — ஒவ்வொரு உப-பகுதியின் முடிவிலும் ஓர் இணைப்புப் பெட்டி. “இந்தப் பகுதியில் நாம் கற்றது இது. ஆனால், இது இன்னொரு கேள்வியை எழுப்புகிறது…” — இப்படி, அடுத்த பகுதிக்கான வாயிலை திறந்துவைக்க வேண்டும். மாணவன் ஒரு பகுதியை முடித்தபின், அடுத்த பகுதியைப் படிக்க — ஒரு உள்ளார்ந்த உந்துதல் இருக்க வேண்டும்.
நான்காவது — அலகின் இறுதியில் — திரும்பப் பார்த்தல். முதல் பக்கத்தில் கேட்ட திறவுகோல் கேள்விக்கு — இப்போது நீங்களே என்ன பதில் சொல்வீர்கள்? என்று மாணவனிடம் கேட்கும் ஒரு செயல்திட்டத்துடன் அலகு முடிய வேண்டும். கதையின் நிறைவு என்பது — மாணவன் கதையின் கதாநாயகனாக மாறும் தருணம்.
Openers & Closers — அலகின் வாயில்கள்
ஒரு பாடநூல் அலகின் — முதல் இரு பக்கங்கள் (opener) மற்றும் கடைசி இரு பக்கங்கள் (closer) — மற்ற பக்கங்களைப் போல வடிவமைக்கப்படக் கூடாது. அவை — அலகின் வாயில்கள். வாயிலை வடிவமைக்கும் வழிமுறை, அறையை வடிவமைக்கும் வழிமுறையிலிருந்து வேறுபட்டது.
இதை இன்று நடைமுறையில் மிகச் சிறப்பாகக் கையாள்வது — OpenSciEd பாடத்திட்டம். ஒவ்வொரு அலகையும் — “Anchoring Phenomenon Lesson”, பல “Investigation Lessons”, இறுதியில் ஒரு “Putting the Pieces Together Lesson” — என ஒரு கதையமைப்பாக அவர்கள் கட்டியெழுப்புகின்றனர்.
ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் இந்தச் சிறப்புப் பகுதிகளின் வடிவமைப்பு — மற்ற investigation பக்கங்களின் வடிவமைப்பிலிருந்து வேறுபடுகிறது. இவற்றிலிருந்து நாம் கற்கக்கூடிய கொள்கைகளைப் பார்ப்போம்.
Opener — அலகின் வாயில்
ஒரு நல்ல opener-ன் கூறுகள்:
முதலாவது — காட்சி முதன்மை. Opener பக்கத்தில் உரை குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெரிய, கவர்ச்சிகரமான படம் — அல்லது ஒரு திகைக்கவைக்கும் காட்சி — மாணவன் கண்களைப் பிடித்து வைக்க வேண்டும். உரை — ஒரே ஒரு கேள்வி, அல்லது மிகச் சிறு பத்தி.
இரண்டாவது — “இதைக் கற்க விரும்புகிறீர்களா?” என்ற அழைப்பு. பாரம்பரியப் பாடநூலின் opener-ல் — “இந்த அலகில் நீங்கள் கற்கப்போவன…” என்ற பட்டியல் இருக்கும். இது அதிகாரம் சார்ந்த அழைப்பு (“நீ இவற்றைக் கற்க வேண்டும்”). OpenSciEd அணுகுமுறையில் — “இக்கேள்விகளை நாம் ஒன்றாக ஆராய்ந்து பார்ப்போமா?” என்ற அழைப்பு (”இதை ஒன்றாகக் கண்டறிவோம்”). வேறுபாடு நுட்பமானது — ஆனால் கற்றலின் தொனியை அடியோடு மாற்றுகிறது.
மூன்றாவது — DQB-க்கான இடம். நான்காவது கட்டுரையில் நாம் விரிவாகப் பார்த்தபடி — மாணவர்களின் கேள்விகளை அலகின் தொடக்கத்தில் வரவேற்க, opener-ல் ஒரு வெற்றுப் பக்கம் / பெட்டி தனியாக ஒதுக்கப்பட வேண்டும். “இக்கேள்விகள் உங்களுக்கு எந்தக் கேள்விகளைத் தூண்டுகின்றன? எழுதி வைப்போம்.”
Closer — அலகின் நிறைவு
ஒரு நல்ல closer-ன் கூறுகள்:
முதலாவது — பின்னோக்கிய பயணம். “ஆரம்பத்தில் நாம் கேட்ட கேள்வி இது. இப்போது அதற்கு என்ன பதில்?” — மாணவன் தனது சொந்த அறிதலில் இருந்து பதிலளிக்க வேண்டும். இது வெறும் ஒரு “மீள்பார்வை” பகுதி அல்ல — ”நான் எங்கே இருந்து எங்கே வந்தேன்?” என்ற மெய்-உணர்விற்கான இடம் (meta-cognitive reflection). OpenSciEd-ன் “Putting the Pieces Together” பகுதி இதை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது.
இரண்டாவது — “இனி என்ன?” என்ற வாயில். ஒரு அலகின் முடிவில் — அந்த அலகு பதிலளிக்காத சில கேள்விகள் — அடுத்த அலகிற்கான அல்லது வாழ்நாள் கற்றலுக்கான வாயிலாக — திறந்தே வைக்கப்பட வேண்டும். ”இந்தக் கேள்விக்கு — விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்கின்றனர். நீங்களும் ஒரு நாள் ஆராயலாம்.” இது — அறிவியல் ஒரு எழுதி முடிக்கப்பட்ட புத்தகம் அல்ல, ஒரு தொடரும் உரையாடல் என்பதை மாணவன் உணர வைக்கும்.
மூன்றாவது — செயல்படுத்தும் சவால். ஒரு சாதாரண வீட்டுப் பயிற்சி அல்ல — ஒரு திட்டப்பணி (mini-project). ”அடுத்த ஒரு வாரத்தில், உங்கள் வீட்டில் இக்கருத்தை எங்கே காண்கிறீர்கள் என்பதை கண்டறிந்து, அதை ஒரு படமாகவோ காணொளியாகவோ பதிவு செய்து, வகுப்பில் பகிர்வீர்களா?” — இவை அறிவியலை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டுசெல்லும் பாலங்கள்.
நான்காவது — ஒரு சிந்தனைத் தூண்டி. ஒரு மேற்கோள், ஒரு கவிதை வரி, ஒரு கேள்வி — பாடத்தை இத்தோடு முடித்து வைக்க வேண்டியதில்லை, அதை மாணவனின் மனதில் வாழவிட வேண்டும். OpenStax-ன் சில பாடங்கள், Cambridge IGCSE-ன் சில பகுதிகள் — இதை வெகு கச்சிதமாகச் செய்கின்றன.
Opener மற்றும் closer-ஐ — மற்ற பக்கங்களின் அதே வடிவமைப்புத் தரத்தில் வடிவமைத்தால் ஓர் அற்புதமான வாய்ப்பை இழக்கிறோம். இவை வேறு வகையான இடங்கள் — வடிவமைப்பும் வேறு வகையாக இருக்க வேண்டும்.
அழகான சாட்சிகள் — PSSC, OpenStax, OpenSciEd
இதுவரை நாம் பேசியது — கொள்கைகள். இக்கொள்கைகள் — உலகின் சிறந்த அறிவியல் பாடநூல்களில் — எப்படிச் செயல்பாட்டில் வந்துள்ளன?
எட்டு இயக்கங்கள் கட்டுரையில் நாம் வரலாற்று ரீதியாகப் பார்த்த PSSC, OpenStax, OpenSciEd — இவை மூன்றையும் வடிவமைப்பு ரீதியாக ஒரு சிறு கண்ணோட்டத்தில் காண்போம்.
PSSC Physics (1960)
PSSC-ன் வடிவமைப்பு — அதன் காலத்தில் ஒரு புரட்சி. முந்தைய பாடநூல்களில் இல்லாதது — photographic strobe images. ஒரு பந்து தரையில் குதிக்கும்போது, அதன் ஒவ்வொரு கணமும் — ஒரே படத்தில் — strobe light-ஆல் பதிவாகிறது. ஒரே படத்தில் — இயக்கத்தின் முழுக் கதை. இது Dual Coding-ன் வலிமை — காட்சி வடிவில், கால-வெளி தொடர்பு, கணித முடிவுகள் — ஒரே framing-ல். archive.org-ல் இலவசமாகக் கிடைக்கும் PSSC பதிப்பை ஒரு முறை பார்த்தாலே — 60 ஆண்டுகளுக்கு பிறகும் — அதன் வடிவமைப்பு நம்மை வியக்க வைக்கிறது.
OpenStax (2012-)
Rice பல்கலைக்கழகத்தின் OpenStax — இலவசமாக, Creative Commons உரிமத்தின் கீழ், கல்லூரி அளவிலான பாடப்புத்தகங்களை வழங்குகிறது. அதன் வடிவமைப்புத் தனிச்சிறப்புகள்:
- ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் — “Check Your Understanding” சிறு கேள்வி.
- கருத்துகள் — மாணவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வடிவில் தலைப்பிடப்படுகின்றன: “How does the eye see colors?”.
- ஒவ்வொரு படத்திற்கும் — விரிவான, அதே நேரம் தெளிவான caption. படத்தைப் புரிய — மட்டும் — captionஐப் படித்தாலே போதும்.
- “Real-world applications” — ஒவ்வொரு அலகின் ஒரு பகுதி, அந்த கருத்தின் தற்கால-உலகு பயன்பாட்டுக்கு. சமீபத்திய புதுமைகள், புத்தாக்கங்கள் — அறிவியலை “உயிரோடு” வைக்கின்றன.
OpenSciEd (2018-)
OpenSciEd பாடப்புத்தகங்கள் — பாரம்பரிய பாடநூல்கள் அல்ல; அவை student notebook + teacher guide + handouts என்ற ஒரு ecosystem. வடிவமைப்பு ரீதியாக:
- ஒவ்வொரு அலகும் ஒரு திறவுகோல் நிகழ்வோடு தொடங்கி, மாணவர்களின் DQB சுவரில் வளர்கிறது.
- Sense-making notebook — ஒரு வழக்கமான text-book-ஐ விட, மாணவர்கள் தங்கள் சொந்த கருத்துகளை எழுதி, படமாக்கி, மாற்றிக்கொள்ளும் ஒரு வேலைப்பகுதி.
- ஒவ்வொரு பகுதியிலும் — “What we figured out” (நாம் கண்டறிந்தது) மற்றும் “What we still want to know” (இன்னும் தெரிய விரும்புவது) — இரு பகுதிகள். இரண்டாவது பகுதி — அறிவியலின் தொடர்-தன்மையை, கேள்விகளின் வாழ்வை, மாணவன் மனதில் வாழவிடுகிறது.
இம்மூன்றும் கொடுக்கும் பாடம் — உலகதர பாடநூல்கள் என்பது வடிவமைப்பின் கைவினையை அறிவியல் கல்வியோடு இணைத்தவை.
AI யுகத்தில் பாடநூல் — ஒரு குறிப்பு
இக்கட்டுரையை முடிக்கும் முன், 2026-ல் ஒரு பாடநூல் கட்டுரை எழுதும்போது புறக்கணிக்க முடியாத ஒரு வளர்ச்சியைப் பற்றியும் பேசுவது அவசியம்.
சமீபத்தில் Google உருவாக்கிய Learn Your Way — ஒரு பாரம்பரியப் பாடநூல் உள்ளடக்கத்தை, ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் கற்றல் முறைக்கும் ஏற்ப — காணொளி, கதை, செயல்திட்டம், interactive simulation என — பல வடிவங்களில் மாற்றியமைத்துக் கொடுக்கும் சோதனை.
LearnLM (இன்று Gemini 2.5-உடன் இணைக்கப்பட்ட Google-ன் கற்றல்-நோக்குடைய மாதிரி), Khanmigo என்ற Khan Academy-ன் AI tutor — இவை யாவும் ஒரே திசையில் பயணிக்கின்றன. ஒரு பாடநூல் — இனி நிலையான ஒரு ஆவணம் அல்ல; ஒவ்வொரு வாசகருக்கும் ஏற்ப உருமாறக் கூடியது.
பாடநூல்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட ஆவணமாகவே இருக்குமா? — அல்லது adaptive ஆவணமாக மாறுமா? அச்சு வடிவ பாடநூல்கள் இரண்டாம் இடம் பெற்று — ஒரு AI tutor முதன்மையாகுமா? இக்கேள்விகள் சுவாரசியமானவை. ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய இரு உண்மைகள்:
முதலாவது — அடிப்படை வடிவமைப்புக் கொள்கைகள் மாறவில்லை. Cognitive load, Dual coding, Coherence — இக்கொள்கைகள் காகிதத்துக்கு என உருவானவை அல்ல; அவை மனிதனின் கற்றல் முறைக்கென உருவானவை. AI பாடநூல்கள் என்றாலும், adaptive textbook என்றாலும், interactive simulation என்றாலும் — இந்த அடிப்படைகளை மீறும் ஒரு வடிவம் கற்பித்தலில் தோல்விகாணும். Mayer-ன் ஆராய்ச்சிகள் — அனைத்து ஊடக வடிவங்களிலும், அதே பழைய principles வேலை செய்வதைக் காட்டுகின்றன.
இரண்டாவது — காகிதப் பாடநூல் இன்னும் முக்கியத்துவம் இழக்கவில்லை. AI கருவிகளை — பாடநூலின் மாற்றாக அல்ல — அதன் துணை (companion) ஆக நாம் கருதலாம். ஒரு மாணவன் வீட்டில் ஒரு கருத்தைப் புரியாமல் போராடும் போது — காகிதப் பாடநூலின் QR code-ஐ ஸ்கேன் செய்து, ஒரு AI tutor-உடன் உரையாடி, புரிந்துகொள்ளும் வாய்ப்பு — மிக சக்தி வாய்ந்தது.
ஒரு பாடநூல் வடிவமைப்பாளர் இன்று — காகிதம், டிஜிட்டல், AI — மூன்றையும் இணைந்து சிந்தித்து வடிவமைக்க வேண்டியுள்ளது. ஆனால் — அடிப்படை மாறவில்லை. நல்ல வடிவமைப்பு என்பது — மனிதனின் மூளைக்கு உண்மையாக இருப்பது.
ஒரு எழுத்தாளரின் checklist
இக்கட்டுரையில் பேசிய அனைத்தையும் — ஒரு பாடநூல் எழுத்தாளர் / வடிவமைப்பாளர் — தனது வேலையில் எப்படிச் செயல்படுத்த முடியும்? ஒரு draft-ஐ இறுதிசெய்வதற்கு முன், இந்தக் கேள்விகளை — ஒவ்வொரு பக்கத்திற்கும் — நாம் கேட்போம்:
பக்க அளவில்:
- இந்தப் பக்கத்தில் — நீக்க முடிந்தது எது? (Coherence)
- ஒவ்வொரு படமும் — அதன் விளக்கமும் அதே பக்கத்தில், அருகிலேயே — உள்ளனவா? (Contiguity)
- படம் சொல்வதை — உரையில் மீண்டும் சொல்லியிருக்கிறோமா? (Redundancy)
- பக்கத்தின் முக்கியமான பகுதி — கண்களின் முதல் பார்வையிலேயே தெரிகிறதா? (Signaling)
- ஒரு பெரிய பத்தியை — சிறு பகுதிகளாகப் பிரிக்க முடியுமா? (Segmenting)
அலகு அளவில்:
- அலகின் முதல் பக்கம் — ஒரு திறவுகோல் நிகழ்வோடு தொடங்குகிறதா? (Anchoring)
- ஒவ்வொரு உப-தலைப்பும் — முந்தையதிலிருந்து இயற்கையாக எழுகிறதா? (Storyline)
- மாணவர்களின் சொந்தக் கேள்விகளுக்கு — பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? (DQB)
- அலகின் முடிவில் — ஆரம்பத்தின் திறவுகோல் கேள்விக்குத் திரும்பும் தருணம் உள்ளதா?
- அலகின் முடிவு — ஒரு “புதிய கேள்வியோடு” திறந்தே வைக்கப்படுகிறதா?
தமிழ் சூழலுக்கு:
- தமிழ் உரையின் வரி-இடைவெளி — போதுமானதா?
- பயன்படுத்தப்படும் உதாரணங்கள் — நமது சூழலில் — மாணவர்களின் வாழ்க்கையில் இருக்கிறதா?
- கலைச்சொற்கள் — மொழிபெயர்ப்பு கடினமான இடங்களில் — தமிழ் (English) என இரு வடிவங்களிலும் கொடுக்கப்படுகின்றனவா?
மொத்தத் தரம்:
- ஓர் ஆசிரியர் இல்லாமல் — மாணவன் தனியாக இந்தப் பக்கத்தைப் படித்தால் — கருத்து புரியுமா?
- பக்கம் மாணவன் சிந்திக்கத் தூண்டுகிறதா — அல்லது மனப்பாடம் செய்யத் தூண்டுகிறதா?
இக்கேள்விகள் — வடிவமைப்பு என்பது கலையாகவே இருந்தாலும், அதை அறிவியல் கண்ணோட்டத்தில் சோதிக்கும் வழிமுறை.
நிறைவாக — பக்கம் என்பது ஒரு கைகுலுக்கல்
ஒரு பாடநூலின் ஒவ்வொரு பக்கமும் — அதை எழுதிய ஆசிரியருக்கும், அதைப் படிக்கப்போகும் மாணவருக்கும் — இடையேயான ஒரு கைகுலுக்கல். அந்தக் கைகுலுக்கல் — மென்மையாக, தெளிவாக, மரியாதையோடு — இருந்தால், மாணவன் அதை திரும்பத் திரும்ப தேடுவான், விரும்புவான். அந்தக் கைகுலுக்கல் — கடினமாக, குழப்பமாக, அதிகார தொனியோடு — இருந்தால், அந்தப் பாடநூல் அலமாரியில் தூங்கும்.
ஒரு பாடநூலின் முதல் வாசகர் — அதன் வடிவமைப்பாளர். ஒரு பக்கம் வடிவமைக்கப்படும்போதே ”இது ஒரு மாணவனின் தோளில் கை வைத்து தோழமையாக நிற்கிறதா, அவன் தோளில் பெரும் சுமையைத் திணிக்கிறதா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்பவர் — அந்த வடிவமைப்பாளர். அந்த ஒரு கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்கும் ஒவ்வொரு வடிவமைப்பாளரும் — ஒரு தலைமுறையின் கற்றலை வடிவமைக்கிறார்.
தொடர்ந்து பேசுவோம் — சாக்பீஸ்டைரி.
மேலும் படிக்க (Further Reading)
📘 அடிப்படை ஆராய்ச்சி
- Sweller, J. (1988). Cognitive Load During Problem Solving: Effects on Learning. Cognitive Science, 12(2), 257-285.
- Mayer, R. E. (2014). The Cambridge Handbook of Multimedia Learning (2nd ed.). Cambridge University Press.
- Paivio, A. (1986). Mental Representations: A Dual Coding Approach. Oxford University Press.
- Bezemer, J., & Kress, G. (2008). Writing in Multimodal Texts: A Social Semiotic Account of Designs for Learning. Written Communication, 25(2), 166-195.
📐 பாடநூல் வடிவமைப்பு & பாடத்திட்ட கட்டமைப்பு
- Sweller, J., van Merriënboer, J. J. G., & Paas, F. G. W. C. (1998). Cognitive Architecture and Instructional Design. Educational Psychology Review, 10(3), 251-296.
- Davis, E. A., & Krajcik, J. S. (2005). Designing Educative Curriculum Materials to Promote Teacher Learning. Educational Researcher, 34(3), 3-14.
- Reiser, B. J., Novak, M., & McGill, T. A. W. (2017). Coherence from the Students’ Perspective: Why the Vision of the Framework for K-12 Science Requires More than Simply “Combining” Three Dimensions of Science Learning. Commissioned paper for the National Academies of Sciences.
- Nordine, J., Krajcik, J., & Fortus, D. (2019). Using Storylines to Support Three-Dimensional Learning in Project-Based Science. Science Scope, NSTA.
- OpenSciEd Design Specifications (2022) — openscied.org
📂 மாதிரிப் பாடநூல்கள் (இலவசம்)
- PSSC Physics (1965) — archive.org/details/pssc-physics
- OpenStax Free Textbooks — openstax.org
- OpenSciEd Curriculum — openscied.org/curriculum
- Siyavula Open Textbooks — siyavula.com/read
🤖 AI யுகத்தின் பாடநூல்கள்
- Google Learn Your Way — learnyourway.withgoogle.com
- Google Research blog on Learn Your Way — research.google/blog/learn-your-way-reimagining-textbooks-with-generative-ai
- Google LearnLM (இப்போது Gemini 2.5-உடன் இணைக்கப்பட்டது) — cloud.google.com/solutions/learnlm
- Khan Academy Khanmigo — khanmigo.ai
🔗 ChalkPieceDiary “கல்வி உரையாடல்கள்” தொடர்
- ஜான்ஸ்டோன் முக்கோணம்
- டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்? — Anchoring Phenomenon
- அறிவியல் கல்வியை மாற்றிய எட்டு இயக்கங்கள்
- கேள்விகளால் இயங்கும் வகுப்பறை — DQB
இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளையும், உங்கள் பாடநூல் எழுத்து / வடிவமைப்பு அனுபவங்களையும் கீழே பகிருங்கள்.
