அறிவியலை எப்படிக் கற்பிக்க வேண்டும்? — இக்கேள்விக்கு உலகம் கடந்த 70 ஆண்டுகளில் கொடுத்த எட்டு முக்கியமான பதில்கள் PSSC, BSCS, Nuffield, Hoshangabad, SEPUP, IB MYP, Siyavula, OpenSciEd. இவை வெறும் பாடநூல் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு கல்வித் தத்துவம், ஒரு கற்பித்தல் புரட்சி. அறிவியல் கல்வியை அக்கறையோடு அணுகும் எவரும் இந்த வரலாற்றை அவசியம் அறிய வேண்டும்.
ஒரு செயற்கைக்கோள், உலகின் அறிவியல் கல்வியை மாற்றிய கதை
1957 அக்டோபர் 4-ம் தேதி இரவு. சோவியத் ருஷ்யா விண்வெளியில் சுமார் இரண்டு அடி விட்டமுள்ள (58 செ.மீ) ஓர் உலோகக் கோளத்தை — Sputnik-ஐ — ஏவியது. அதிலிருந்து வெளிப்பட்ட “பீப்… பீப்…” என்ற ரேடியோ சமிக்ஞை அமெரிக்காவில் கேட்டது. ஒரே இரவில் தாம் ஒரு அறிவியல் வல்லரசு என்ற அமெரிக்காவின் எண்ணம் விழுந்துவிட்டது. “நாம் எங்கே தவறிவிட்டோம்? நமது கல்விமுறை எங்கே தவறுகிறது?” என்ற கேள்வி அமெரிக்காவை உலுக்கியது. பள்ளிக்கல்வியை அதிகமாக உலுக்கியது.
அடுத்த 70 ஆண்டுகளில், அமெரிக்காவைப் போல, பல நாடுகளிலிருந்தும் இக்கேள்விக்குப் பல பதில்கள் வந்தன. ஒவ்வொரு பதிலும் ஓர் இயக்கமாக, ஒரு பாடநூல் சீர்திருத்தமாக, ஒரு கல்வித் தத்துவமாக உருப்பெற்றது. நமது அறிவியல் பாடப்புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்தின் வடிவமைப்பிலும் இந்த வரலாறும், தத்துவங்களும் மறைந்து நிற்கின்றன.

Sputnik போட்ட விதை: பாடநூல் என்பது ஒரு கல்வித் தத்துவம்
1. PSSC (1956) — அமெரிக்காவின் பதில்
உண்மையில், Sputnik-க்கு ஓராண்டுக்கு முன்பே — 1956-ல் — MIT பேராசிரியர்கள் Jerrold Zacharias மற்றும் Francis Friedman ஓர் அதிரடி கேள்வியை எழுப்பியிருந்தனர்: “இயற்பியல் என்பது சமன்பாடுகளின் தொகுப்பல்ல — அது இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தொடர் முயற்சி. அதை ஏன் பாடநூல்கள் ஒரு வரலாற்றுப் பாடம் போல மனப்பாடம் செய்விக்கின்றன?”
Sputnik அதிர்ச்சிக்குப் பிறகு, அமெரிக்க அரசு (NSF) PSSC திட்டத்திற்கு பெருமளவில் நிதியளித்தது. பல்வேறு விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள் — அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு பாடநூலை எழுதினர். செய்முறை வீடியோக்கள் (instructional movies), ஆய்வகப் பயிற்சிகள், ஆசிரியர் வழிகாட்டிகள் அனைத்தும் அதனோடு இணைந்து வந்தன. 1960-களின் தொடக்கத்தில், அமெரிக்காவின் இயற்பியல் ஆசிரியர்களில் 20%-க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர்.
PSSC-ன் கல்வித் தத்துவம் இந்த ஒற்றை வாக்கியத்தில் சுருங்கும்: “குறைவான தலைப்புகள், ஆழமான புரிதல்.” மனப்பாடம் செய்ய வேண்டிய சமன்பாடுகளுக்குப் பதிலாக — ஆற்றல் அழிவின்வை விதி போன்ற பரந்த அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டது. இன்றும் இந்த அருங்கொடை archive.org-ல் இலவசமாகக் கிடைக்கிறது.
2. BSCS (1958) — உயிரியலின் “மூன்று வண்ணப் பதிப்புகள்”
PSSC இயற்பியலில் தொடங்கியதை, BSCS (Biological Sciences Curriculum Study) உயிரியலுக்குக் கொண்டுவந்தது. 1958-ல் கொலராடோவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ஒரு ஆச்சரியமான முடிவை எடுத்தது — “உயிரியலுக்கு ஒரே ஒரு பாடநூல் போதாது.” ஏன்? உயிரியலை அணுகுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன.
எனவே, அவர்கள் மூன்று பதிப்புகளை ஒரே நேரத்தில் எழுதினார்கள்:
- Blue version — மூலக்கூறு (molecular) அடிப்படையில் உயிரியல்
- Green version — சுற்றுச்சூழல் (ecological) அடிப்படையில் உயிரியல்
- Yellow version — செல் (cellular) அடிப்படையில் உயிரியல்
ஒவ்வொரு பள்ளியும் தங்களின் வளங்கள், ஆசிரியரின் ஆர்வம், மாணவர்களின் தேவைக்கேற்ப ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இது உலக அறிவியல் கல்வியில் முதன்முதலில் “customizable curriculum” என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. 1970-களின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் 50% உயர்நிலைப் பள்ளிகள் ஏதேனும் ஒரு BSCS பாடநூலையே பயன்படுத்தினர்.
ஆனால் BSCS-ன் மிகப்பெரிய பங்களிப்பு இந்த மூன்று பாடநூல்களும் அல்ல. 1987-ல் Rodger Bybee தலைமையிலான குழு உருவாக்கிய 5E கற்பித்தல் மாதிரிதான் — அது உலகளாவிய தரநிலையாக மாறியது.
Engage → Explore → Explain → Elaborate → Evaluate — இந்த ஐந்து படிகள் இன்று NGSS, IB MYP, NCERT உள்ளிட்ட உலகெங்கிலுமுள்ள பாடத்திட்டங்களில், மற்றும் நமது பாடநூல்களின் பல பகுதிகள் வரை தாக்கம் செலுத்தியுள்ளது. (5E மாதிரியைப் பற்றி தனியாக பேசுவோம்.)

3. Nuffield (1962) — இங்கிலாந்தின் கண்டறி வழிக் கற்றல்
அமெரிக்காவின் PSSC வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் Nuffield அறக்கட்டளை தனது சொந்த விடையை உருவாக்கியது. PSSC-க்கும் Nuffield-க்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே மனப்பாடக் கல்விக்கு எதிராக நின்றன — ஆனால் கொள்கை வேறு:
- PSSC சொல்கிறது: “அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளை மையமாக வைப்போம். குறைவான தலைப்புகள், ஆழமான புரிதல்.”
- Nuffield சொல்கிறது: “மாணவர்களே கண்டறியட்டும் (discovery learning). ஆசிரியர் ஒரு வழிகாட்டியே, விடைகளைச் சொல்பவர் அல்ல.”
Nuffield ஒரு பாடப்புத்தகம் அல்ல — அது ஒரு கற்பித்தல் தத்துவம். மூன்று இணை-திட்டங்களாக (இயற்பியல், வேதியியல், உயிரியல்) தொடங்கி, பின்னர் Junior Science (தொடக்கப்பள்ளி), Combined Science (11–13 வயது), A-level என்று விரிவடைந்தது.
1960-களில் Nuffield அறக்கட்டளை இந்தப் பணிக்காக மட்டும் £1 மில்லியனுக்கும் (இன்றைய மதிப்பில் £30 மில்லியன்) மேலாகச் செலவழித்தது. ஒரு கல்வித் திட்டத்திற்கு அந்தக் காலத்தில் கிடைத்த மிகப்பெரிய முதலீடு. பொதுவாக கல்வியில் ஒரு புதிய திட்டத்திற்கு அரசு அனுமதி கொடுப்பதே கடினம்; ஆனால் ஓர் அரசுசாரா அறக்கட்டளை (NGO) மட்டுமே இந்த அளவு மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை Nuffield தந்தது.
Nuffield-ன் மூன்று கொள்கைகள் இவை:
- கண்டறிதல் வழிக் கற்றல் (Discovery Learning): மாணவர்களுக்கு உடனே விடைகளைச் சொல்லாமல், சிறு பரிசோதனைகள் மூலம் அவர்களே பதிலைக் கண்டறிய வைப்பது.
- நேரடிச் செய்முறைப் பயிற்சிகள் (Hands-on Experiments): விலையுயர்ந்த ஆய்வகங்கள் தேவையில்லை. அன்றாடப் பொருட்களைக் கொண்டே பெரிய அறிவியல் கருத்துகளை விளக்கலாம்.
- ஆசிரியர் கையேடுகள் (Teacher Guides): பாடநூலுக்கு இணையாக, “என்ன கேள்வி கேட்க வேண்டும், என்ன பரிசோதனை செய்ய வேண்டும், மாணவர்களின் சாத்தியமான தவறான புரிதல்கள் என்ன” என்பதை விரிவாக விளக்கும் ஆசிரியர் வழிகாட்டிகள்.
இந்த மூன்றாவது புதுமை — “Teacher Guide” என்ற கருத்து — பாடநூல் வரலாற்றை மாற்றியது. “பாடநூல் ஆசிரியருக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை மட்டும் சொல்லாது; எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும்” என்ற கொள்கை இங்கேதான் முதலில் வந்தது.
4. இந்தியாவில் ஓர் அமைதியான புரட்சி — HSTP (1972)
இந்த எட்டு இயக்கங்களில் ஒன்று இந்திய மண்ணில், இந்தியக் கிராமப்புற மாணவர்களுக்காக நிகழ்ந்தது என்பது. Nuffield-ன் கல்வித் தத்துவத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்த ஓர் அமைதியான புரட்சி, 1972-ல் மத்தியப் பிரதேசத்தின் ஒரு பழங்குடியின மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. அதன் பெயர் — Hoshangabad Science Teaching Programme (HSTP).
1972-ம் ஆண்டு, ஹோசங்காபாத் (இப்போது நர்மதாபுரம்) மாவட்டத்தில் இரண்டு சிறிய தன்னார்வ அமைப்புகள் — Friends Rural Centre (Rasulia) மற்றும் Kishore Bharati — அரசுப் பள்ளிகளில் அறிவியலைக் கற்பிக்கும் முறையை மாற்ற முடிவுசெய்தன. மத்தியப் பிரதேச அரசு அனுமதி கொடுத்தது. 16 கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் ஓர் சோதனை.
“கிராமப்புற மாணவன், எவ்வித ஆய்வகமும் இல்லாமல், அன்றாடப் பொருட்களைக் கொண்டே — நகரத்து மாணவனைப் போலவே, அல்லது அவனைவிட சிறப்பாக — அறிவியலைக் கற்க முடியும்.” என நாம் HSTP-ன் தத்துவத்தை ஒற்றை வாக்கியத்தில் கூறிவிடலாம்.
இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. Delhi University, IIT-களிலிருந்து விஞ்ஞானிகள் கிராமங்களுக்கு வந்து ஆசிரியர்களுடன் தொடர்ந்து பணியாற்றினர். 1982-ல் Eklavya அறக்கட்டளை இதற்கான நிறுவன அடிப்படையாக உருவானது. பின்னர் HSTP மத்தியப் பிரதேசத்தின் 14 மாவட்டங்களுக்கு — சுமார் 1,000 பள்ளிகளுக்கு — விரிவடைந்தது.
இந்த இயக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் — IIT கான்பூர் முன்னாள் மாணவரும், புகழ்பெற்ற அறிவியல் தொடர்பாளருமான அரவிந்த் குப்தா (Arvind Gupta). “குப்பையிலிருந்து அறிவியல்” (Toys from Trash) என்ற கருத்தாக்கத்தை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர். இவருடைய arvindguptatoys.com தளம் இன்று ஓர் உலகளாவிய அறிவியல் கல்வி நூலகமாகச் செயல்படுகிறது — Nuffield பாடநூல்கள் உட்பட நூற்றுக்கணக்கான திறந்தமூல அறிவியல் புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஓர் அறிவியல் ஆசிரியர் முதலில் சந்திக்க வேண்டிய தளம் இது.
2002-ல் HSTP மூடப்பட்டது — அது ஒரு வேறு கதை. ஆனால் அதன் தாக்கம் இன்றும் NCERT பாடநூல்களில், NCF 2005 கொள்கை ஆவணத்தில், மற்றும் இந்தியாவின் பல மாநில அறிவியல் பாடநூல்களில் தொடர்கிறது. நமது பாடநூல்களின் புதிய அணுகுமுறைகளின் ஓர் முக்கியமான கிளை — Nuffield → HSTP → NCERT → பல்வேறு மாநிலப் பாடநூல்கள்.
5. “பிரச்சினையில் தொடங்குங்கள், கருத்தில் அல்ல” — SEPUP (1987)
1980-களின் இறுதியில் இன்னொரு கேள்வி எழுந்தது: “அறிவியலை வெறும் கோட்பாடாக மட்டும் கற்பித்தால் போதுமா? அது மாணவர்களின் வாழ்விலும், சமூகத்திலும் உள்ள உண்மையான பிரச்சினைகளுடன் இணைக்கப்பட வேண்டாமா?”
1987-ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் Lawrence Hall of Science-ல் தொடங்கப்பட்ட SEPUP (Science Education for Public Understanding Program) இதற்கான பதில். தொடக்கத்தில் இது CEPUP (Chemical Education for Public Understanding) என்ற பெயரில், வேதிப்பொருட்கள் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை மட்டுமே கையாண்டது. பின்னர் அனைத்து அறிவியல் துறைகளுக்கும் விரிவடைந்து SEPUP ஆனது.
இதன் கருத்தாக்கம் ஒற்றை வாக்கியத்தில்: “பாடம் ஒரு கருத்துடன் தொடங்காது — ஒரு பிரச்சினையுடன் தொடங்கும்.”
உதாரணமாக:
- “உங்கள் பழைய கணினியைக் குப்பையில் வீசலாமா?” — இதிலிருந்து கனரக உலோகங்கள், மின்னணுக் கழிவு, மறுசுழற்சி வேதியியல் பாடம் தொடங்கும்.
- “உணவு நச்சினால் ஏற்படும் ஆபத்தை எப்படிக் குறைக்கலாம்?” — இதிலிருந்து நுண்ணுயிரியல், வெப்பநிலை, pH பாடம் தொடங்கும்.
- “செல்லப்பிராணியை காட்டில் விட்டுவிட்டால் சுற்றுச்சூழலுக்கு என்ன ஆகும்?” — இதிலிருந்து உயிர்-பல்வகைமை, ecosystem disruption பாடம் தொடங்கும்.
SEPUP-ன் ஒரு தனித்தன்மை — பாடநூல் எந்தப் பிரச்சினைக்கும் ஒரு பதிலை வலியுறுத்தாது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை சான்றுகளால் ஆதரிக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்துகிறது. இது ஓர் அரிய கல்வித் தத்துவம் — PISA-வின் scientific literacy framework, NGSS-ன் “Argument from evidence” போன்ற நவீன மதிப்பீட்டுச் சட்டகங்களின் வேர் இங்கேதான் உள்ளது.
6. IB MYP Sciences (1994) — அறிவியல் கல்வியின் சர்வதேசத் தரநிலை
International Baccalaureate-ன் Middle Years Programme (MYP) ஓர் தனிச்சிறப்பான திட்டம். இது ஒரு பாடநூல் அல்ல — ஒரு கட்டமைப்பு (framework). எந்தப் பாடநூலையும், எந்த நாட்டின் பாடத்திட்டத்தையும் இதனுள் பொருத்திக் கொள்ளலாம். அதாவது, ஒரு பள்ளி தனது தற்போதைய பாடப்புத்தகத்தைப் பயன்படுத்திக் கொண்டே, IB MYP-ன் கட்டமைப்பில் கற்பிக்க முடியும்.
IB MYP-ன் தனிச்சிறப்பு என்ன? அது அறிவியலை நான்கு “Criteria”-களாகப் பிரிக்கிறது:
- Criterion A — Knowing & Understanding (அறிவு): பாடச் செய்திகளைப் புரிதல்
- Criterion B — Inquiring & Designing (விசாரணை): சோதனைகளைத் திட்டமிடுதல்
- Criterion C — Processing & Evaluating (பகுப்பாய்வு): தரவை ஆய்தல், முடிவுகளை எடுத்தல்
- Criterion D — Reflecting on the impacts of science (பிரதிபலிப்பு): அறிவியலின் சமூக, நெறிமுறை, சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளுதல்
இந்த நான்காவது criterion-தான் IB MYP-ன் மிகப்பெரிய பங்களிப்பு. “அறிவியலின் சமூகத் தாக்கத்தை மாணவன் சிந்திக்க வேண்டும்” — இது முதன்முறையாக ஓர் அதிகாரபூர்வ மதிப்பீட்டுக் கூறாக ஆக்கப்பட்டது. மாணவன் பாடத்தில் வெற்றி பெற — அவனுக்கு செய்திகள் தெரிந்திருந்தால் மட்டும் போதாது; அறிவியல் சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பதையும் அவன் சிந்திக்க வேண்டும்.
திறந்தமூல யுகம் — அறிவியல் கல்வி அனைவருக்கும் சொந்தம்
இணையம் வந்தது. கல்வியின் வரையறை மாறியது.
PSSC, Nuffield காலத்தில் — பாடநூல்கள் அச்சகங்களில் அச்சிடப்பட்டன. பாடநூல்களைப் பணம் செலுத்தி வாங்க வேண்டியிருந்தது. ஆனால் இணையம் வந்த பிறகு, ஒரு புதிய கேள்வி எழுந்தது: “தரமான கல்வி பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும்தானா? இலவசமாக, அனைவருக்கும் கிடைக்க முடியாதா?”
இந்தக் கேள்விக்கான பதிலாக உருவானவை — Open Educational Resources (OER). UNESCO 2019-ல் OER-ஐ ஒரு உலகளாவிய கல்விக் கொள்கையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.
7. Siyavula (2002) — தென்னாப்பிரிக்காவின் கொடை
OER வரலாற்றின் முதல் முக்கிய மைல்கல் — தென்னாப்பிரிக்காவின் Siyavula. 2002-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், Shuttleworth Foundation-ன் ஆதரவில் — ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் கூட்டாக எழுதிய இலவச அறிவியல், கணிதப் பாடநூல்கள்.
இதன் சிறப்பம்சங்கள்:
- எளிமையான மொழிநடை — பல்வேறு பின்னணியிலிருந்து வரும் ஆப்பிரிக்க மாணவர்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
- உள்ளூர் சூழல் — Newton இன் ஆப்பிள் விழுந்த கதை மட்டுமல்ல, கேப் டவுன் கடற்கரை, காளஹாரி பாலைவனம், ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கங்களும் உதாரணங்கள்.
- முழுமையான Creative Commons — யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம், அச்சிடலாம், மொழிபெயர்க்கலாம், தங்கள் தேவைக்கேற்ப மாற்றலாம். மூலத்தைக் குறிப்பிட்டால் போதும்.
ஒரு தமிழ் ஆசிரியர் Siyavula-வின் 11-ம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தை இறக்கி, மொழிபெயர்த்து, தனது வகுப்பில் பயன்படுத்த முடியும். இது சட்ட ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் முற்றிலும் சரி.
CK-12 FlexBooks (2007) — “தனிப்பயன் பாடநூல்” என்ற புதுமை
CK-12 Foundation ஒரு புதுமையான கருத்தை அறிமுகப்படுத்தியது — “FlexBook”. ஒரு பாடநூல் ஒரு நிலையான ஆவணம் அல்ல; ஆசிரியர் தனக்குத் தேவையான அத்தியாயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றை மறுவரிசைப்படுத்தி, தன்னுடைய சொந்த உள்ளடக்கத்தையும் சேர்த்து, தனக்கான ஒரு தனிப்பயன் பாடநூலாக உருவாக்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக, “9-ம் வகுப்பு மாணவர்களுக்கு — இயற்பியலின் இயக்கவியல் அத்தியாயம், வேதியியலின் அணு அமைப்பு அத்தியாயம், உயிரியலின் செல் அத்தியாயம் — இவற்றை மட்டும் ஒரே PDF-ஆகச் சேர்த்து கொடு” என்று ஆசிரியர் கேட்டால், CK-12 அதைச் செய்து தரும். டிஜிட்டல் கல்விப் பணிகளுக்கு இந்தப் பாதை ஓர் உலகளாவிய முன்னோடி.
8. OpenSciEd (2018) — நிகழ்வு சார்ந்த கற்றலின் வடிவம்
முந்தைய OER-களைப் போலல்லாமல், OpenSciEd ஒரு “முழுமையான பாடத்திட்டம்” — ஆசிரியர் ஒவ்வொரு நாளும் என்ன கற்பிக்க வேண்டும், என்ன கேள்வி கேட்க வேண்டும், எந்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை விளக்கும் ஒரு complete package. Carnegie Corporation, Hewlett Foundation போன்ற முன்னணி அமைப்புகளின் கூட்டுத் திட்டம்.
OpenSciEd-ன் கல்வித் தத்துவம் — “நிகழ்வு சார்ந்த கற்றல்” (Phenomenon-based Learning). ஒவ்வொரு அலகும் ஒரு புதிரான இயற்கை நிகழ்வோடு தொடங்கும். உதாரணமாக, “ஏன் பனிக்கட்டி நீரில் மிதக்கிறது, ஆனால் வேறெந்த திட வடிவமும் தனது திரவ வடிவில் மிதப்பதில்லை?” என்று தொடங்கி, அதிலிருந்து மூலக்கூறு அமைப்பு, அடர்த்தி, hydrogen bonding என்று பாடம் விரியும்.
இந்த அணுகுமுறையைப் பற்றி நாம் ஏற்கனவே “டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்?” கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம். OpenSciEd-தான் இந்த Anchoring Phenomenon கருத்தை ஓர் உலகளாவிய தரநிலையாக மாற்றியது.
எட்டு இயக்கங்கள் — ஒரு பார்வையில்
| திட்டம் | ஆண்டு | நாடு | முக்கிய பங்களிப்பு |
|---|---|---|---|
| PSSC | 1956 | USA (MIT) | “குறைவான தலைப்புகள், ஆழமான புரிதல்”. அடிப்படைக் கொள்கை அணுகுமுறை. |
| BSCS | 1958 | USA | உயிரியலின் மூன்று பதிப்புகள் (Blue/Green/Yellow). 1987-ல் 5E மாதிரி. |
| Nuffield | 1962 | UK | கண்டறி வழி கற்றல், ஆசிரியர் கையேடு கலாச்சாரம். |
| HSTP | 1972 | இந்தியா (MP) | கிராமப்புற மாணவருக்கு Nuffield தத்துவம். Eklavya-வின் தோற்றம். |
| SEPUP | 1987 | USA (Berkeley) | பிரச்சினையில் தொடங்குங்கள், கருத்தில் அல்ல. |
| IB MYP | 1994 | சர்வதேச அளவில் | நான்கு Criteria. அறிவியலின் சமூகத் தாக்கத்தை மதிப்பீடு. |
| Siyavula | 2002 | தென்னாப்பிரிக்கா | முற்றிலும் இலவச OER, Creative Commons. |
| OpenSciEd | 2018 | USA | நிகழ்வு சார்ந்த கற்றல், NGSS-aligned, complete curriculum. |

இந்த எட்டு இயக்கங்களும் ஒரு பாடநூலுக்குச் சொல்வது
இவ்வளவு கல்வித் தத்துவங்களையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது, சில பொதுவான விஷயங்கள் வெளிப்படுகின்றன — ஒரு சிறந்த அறிவியல் பாடநூல் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள் என்னவென்று இந்த இயக்கங்கள் கூட்டாக நமக்குச் சொல்கின்றன.
முதலாவது — அலகின் கட்டமைப்பு. BSCS-ன் 5E (Engage → Explore → Explain → Elaborate → Evaluate) ஓர் உலகளாவிய தரநிலை. வரையறையில் தொடங்கும் பாரம்பரிய கட்டமைப்பை விட, ஓர் ஈர்ப்பு நிகழ்வில் தொடங்கி மாணவர்களே ஆராய்ந்து, பின்னர் விளக்கம் வரும் கட்டமைப்பு — அறிதலின் இயல்பான பாதைக்கு நெருக்கமானது.
இரண்டாவது — அலகுக்கான திறவுகோல் நிகழ்வு. OpenSciEd கொண்டுவந்த Anchoring Phenomenon — ஒரு புதிரான நிகழ்வை அலகின் தொடக்கத்தில் வைத்து, அந்த அலகு முழுவதும் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது. இதைப் பற்றி விரிவான கட்டுரை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாவது — உள்ளூர் சூழலுடன் இணைப்பு. SEPUP-ன் பாடம் என்பது சமூகப் பிரச்சினையில் தொடங்கும் ஒரு கற்றல் பயணம். “நம் ஊர் ஏரி ஏன் வற்றுகிறது?”, “கடற்கரை அரிப்பு ஏன் அதிகமாகிறது?” — இப்படிப்பட்ட உள்ளூர் கேள்விகள் அறிவியலின் கருத்துகளுக்கு ஓர் வாயிலாகச் செயல்படுகின்றன. Siyavula போன்றவை ஆப்பிரிக்க சூழலுக்கு ஏற்ப எவ்வாறு உதாரணங்களை மாற்றியமைத்துள்ளன என்பது நம் சூழலுக்கு ஓர் தெளிவான முன்மாதிரி.
நான்காவது — அறிவியலின் சமூகத் தாக்கம். IB MYP-ன் Criterion D (Reflecting on the impacts of science) ஓர் தனித்துவமான கூறு. ஒரு பாடம் வெறும் கருத்துகளை விளக்கிவிட்டு முடிந்துவிட வேண்டியதில்லை — “இந்த அறிவியல் தத்துவம் சமூகத்திற்கு என்ன பயன் தருகிறது? என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?” என்ற பகுதி, அறிவியலை மதிப்பீடுகளுக்குள் கொண்டுவருகிறது.
ஐந்தாவது — ஆசிரியர் கையேடு. Nuffield-ன் முதன்மை பங்களிப்பாக இதைக் கருதலாம். பாடநூல் என்பது மாணவருக்கான ஆவணம்; ஆசிரியர் கையேடு என்பது அதன் இரட்டை. வகுப்பறையில் என்ன கேள்வி எழ முடியும், எந்தச் சோதனையை எவ்வாறு வழிநடத்த வேண்டும், மாணவர்களின் சாத்தியமான தவறான புரிதல்கள் என்ன — இவை அனைத்தையும் தனியாக ஆவணப்படுத்தும் கலாச்சாரத்தை Nuffield தொடங்கி வைத்தது.
ஆறாவது — திறந்தமூல உரிமை. Siyavula, OpenSciEd, CK-12 — இவை அனைத்தும் Creative Commons-ல் வெளியிடப்பட்டுள்ளன. அறிவு என்பது ஒரு வணிகப் பொருள் அல்ல, ஒரு பொதுவளம் என்ற கொள்கை — இணைய காலத்தின் கல்வி தத்துவத்தின் அடிப்படை.
இந்தப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதி தேவையா?
Siyavula, OpenSciEd, CK-12 — இவை அனைத்தும் Creative Commons (CC BY அல்லது CC BY-NC) உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. மொழிபெயர்க்க, மாற்றியமைக்க, அச்சிட — யாவற்றுக்கும் அனுமதி உள்ளது. மூலத்தைக் குறிப்பிடவேண்டும் (attribution) என்பது மட்டுமே நிபந்தனை. PSSC பழைய பதிப்புகள் இப்போது Public Domain-க்கு வந்துள்ளன. Nuffield-ன் சில resources STEM Learning தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன, ஆனால் வணிக ரீதியாக மறு-வெளியீடு செய்ய அனுமதி தேவை. Arvind Gupta தளத்தில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை — அவரது பெயரைக் குறிப்பிட்டால் — இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இந்திய மாநில அறிவியல் பாடநூல்கள் இவற்றில் எதைப் பின்பற்றுகின்றன?
NCF 2005-ஐத் தொடர்ந்து உருவான NCERT பாடநூல்களும், அதன் வழியாக பல மாநில பாடநூல்களும் BSCS-ன் 5E மாதிரியின் தளர்வான வடிவத்தை பின்பற்றுகின்றன — “செய்து பார்ப்போம்”, “சிந்திப்போம்” போன்ற பகுதிகள் இதன் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இதனோடு HSTP → NCERT வழியாக Nuffield-ன் கண்டறி வழிக் கற்றல் தத்துவமும் தாக்கம் செலுத்தியுள்ளது. SEPUP, OpenSciEd-ஐப் போன்ற முழுமையான பிரச்சினை-சார்ந்த அல்லது நிகழ்வு-சார்ந்த அணுகுமுறை — உலகளாவிய அளவில் ஒப்பீட்டளவில் சமீபத்திய புதுமை. இந்த அணுகுமுறைகளை எவ்வாறு உள்ளூர் சூழலுக்கு ஏற்ப பொருத்துவது என்பது அடுத்த தலைமுறை பாடநூல்களுக்கான சுவாரஸ்யமான அடித்தளம்.
நிறைவாக…
1956-ல் MIT-ல் Jerrold Zacharias எழுப்பிய ஒற்றை கேள்வி — “இயற்பியலை ஏன் சமன்பாடுகளின் தொகுப்பாக மட்டும் கற்பிக்கிறோம்?” — 70 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பயணித்து, இன்று நம் வீட்டின் வாசலிலேயே வந்து நிற்கிறது.
PSSC நமக்குச் சொன்னது: “குறைவான தலைப்புகள், ஆழமான புரிதல்.”
Nuffield சொன்னது: “மாணவர்களே கண்டறியட்டும்.”
BSCS சொன்னது: “ஐந்து படிகளில் கற்பித்தலை அமைப்போம்.”
HSTP சொன்னது: “கிராமப்புற மாணவனுக்கும் இது சொந்தம்.”
SEPUP சொன்னது: “பாடம் ஒரு பிரச்சினையில் தொடங்கும், கருத்தில் அல்ல.”
IB MYP சொன்னது: “அறிவியலின் சமூகத் தாக்கத்தையும் மதிப்பீடு செய்ய முடியும்.”
Siyavula சொன்னது: “தரமான கல்வி அனைவருக்கும் இலவசம்.”
OpenSciEd சொல்கிறது: “ஒரு புதிரான நிகழ்வு — ஒரு முழு அலகு.”
Sputnik உலுக்கிய ஓர் இரவிலிருந்து இன்று வரை — 70 ஆண்டுகள். அமெரிக்காவில் ஓர் பேராசிரியர், இங்கிலாந்தில் ஓர் அறக்கட்டளை, மத்தியப் பிரதேசத்தின் ஓர் கிராமத்தில் ஒரு சில தன்னார்வலர்கள், கலிபோர்னியாவில் ஓர் ஆராய்ச்சிக் குழு, தென்னாப்பிரிக்காவில் ஒரு சில ஆசிரியர்கள் — ஒவ்வொருவரும் தங்களின் காலத்தில், தங்களின் சூழலில், ஒரே கேள்விக்கான தங்கள் பதில்களைச் சேர்த்தனர்.
இவை எட்டும் தனித்தனிக் கதைகள் அல்ல — ஒரே நீண்ட உரையாடலின் எட்டு குரல்கள். அறிவியல் கல்வி என்பது கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டுமானம் அல்ல; அது தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் ஒன்று. ஒவ்வொரு தலைமுறையும், ஒவ்வொரு பண்பாடும், ஒவ்வொரு வகுப்பறையும் — தனக்கான பதிலை இதில் இணைக்கிறது.
இந்த எட்டு குரல்களையும் கேட்பதன் பயன் — அவற்றை அப்படியே பின்பற்றுவதோ, மொழிபெயர்ப்பதோ அல்ல. மாறாக, ஒரு கேள்வி எவ்வாறு பல திசைகளில் பயணிக்கிறது, ஒரு பிரச்சினை எவ்வாறு பல வழிகளில் தீர்க்கப்படுகிறது என்பதை அறிவது. அந்த அறிதலே — நமது வகுப்பறைகளில், நமது பாடநூல்களில், நமது மாணவர்களின் கேள்விகளில் — ஒன்பதாவது குரலை எழுப்புவதற்கான முதல் படி.
மேலும் படிக்க (Further Reading)
📘 PSSC, BSCS, Nuffield (Sputnik யுகம்)
- PSSC Physics — முழுப் பதிப்பு (1965), இலவசப் பதிவிறக்கம் — archive.org/details/pssc-physics
- Haber-Schaim, U. (2006). PSSC 50 Years Later — மூல ஆராய்ச்சிக் கட்டுரை — compadre.org (PDF)
- Bybee, R. W. et al. (2006). The BSCS 5E Instructional Model: Origins and Effectiveness — bscs.org (PDF)
- BSCS — Our History (1958 முதல் இன்று வரை) — bscs.org/about/our-story
- Nuffield Foundation — A short history of curriculum development — nuffieldfoundation.org
- Nuffield resources @ STEM Learning UK — stem.org.uk
- Nuffield Science Project — Wikipedia கண்ணோட்டம் — en.wikipedia.org
🇮🇳 இந்திய பின்னணி — HSTP, NCF, NCERT
- Arvind Gupta Toys & Books (Nuffield, UNESCO Source Book உட்பட 700+ இலவச அறிவியல் புத்தகங்கள்) — arvindguptatoys.com
- Hoshangabad Science Teaching Programme (HSTP) — Eklavya Foundation — eklavya.in
- HSTP 30 Years Review (2007) — விரிவான மதிப்பீடு — eklavya.in (PDF)
- National Curriculum Framework (NCF) 2005 — Wikipedia overview — en.wikipedia.org
- NCERT Science Textbook (Class X, 2024–25) — ncert.nic.in (PDF)
🌍 SEPUP, IB MYP (பிரச்சினை-சார் & சர்வதேசம்)
- SEPUP Curriculum Programs — Lawrence Hall of Science, UC Berkeley — lawrencehallofscience.org
- SEPUP About — பிரச்சினை-சார்ந்த அறிவியல் கொள்கை விளக்கம் — sepup.lawrencehallofscience.org
- IB Middle Years Programme (MYP) — அதிகாரப்பூர்வத் தளம் — ibo.org/programmes/middle-years-programme
📂 OER & திறந்தமூல யுகம்
- Siyavula Open Textbooks — அனைத்து பதிப்புகள் இலவசம் — siyavula.com/read
- OpenSciEd Curriculum (இலவசம், NGSS-aligned) — openscied.org/curriculum
- CK-12 FlexBooks — customizable digital textbooks — ck12.org
- UNESCO 2019 — Recommendation on OER — உலகளாவிய கொள்கை — unesco.org
🌟 UNESCO Source Book for Science Teaching (1956)
இது அனைத்து அறிவியல் ஆசிரியர்களுக்கும் “Bible” போன்றது — 1956-ல் UNESCO வெளியிட்ட இந்த நூல், 30+ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. அன்றாடப் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய 700-க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள்.
- Source Book for Science Teaching — ஆங்கில முழுப் பதிப்பு — archive.org (English)
- Arvind Gupta-வின் mirror — arvindguptatoys.com (PDF)
- 700 Science Experiments for Everyone (மறுவெளியீடு, Doubleday பதிப்பு) — archive.org
🔗 ChalkPieceDiary “கல்வி உரையாடல்கள்” தொடர்
- ஜான்ஸ்டோன் முக்கோணம் — அறிவியல் கற்றலின் மூன்று நிலைகள்
- டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்? — Anchoring Phenomenon
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளையும், உங்கள் வகுப்பறை அனுபவங்களையும் கீழே பகிருங்கள். தொடர்ந்து பேசுவோம்.
