— திருகாணிக்கு சுத்தியல் எதற்கு? ஒரு வினாத்தொகுப்பின் அறிவியல் பற்றிய உரையாடல்
ஒரு பாடம் முடிந்தபின் வரும் “பயிற்சி” பக்கம் — பாடநூலின் மிக முக்கியமான பக்கம். ஏன்? ஏனென்றால் அதுதான் மாணவனின் மூளையிடம் “நீ எதை மறக்கக் கூடாது, எதை யோசிக்கத் தொடங்க வேண்டும்” என்று திரும்பச் சொல்லும் முக்கியமான இடம்.

நமது கல்வி உரையாடல் வரிசையில் இஃது ஆறாவது கட்டுரை. ஓர் அறிவியல் பாடநூலில் இடம்பெறும், ஒரு நல்ல வினாத்தொகுப்பு எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும் என்று இங்கு பேசலாம்.
இருபது கேள்விகள், ஒரே ஒரு பதில் விதம்
“அணுவின் அமைப்பு” பாடத்தை முடித்துவிட்டு பயிற்சி வினாக்களை எழுதத் தொடங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். எழுதுகிறோம் — இருபது வினாக்கள் தயார். ஆனால் ஒரு நிமிடம் நிறுத்திப் படித்துப் பாருங்கள்:
“எலக்ட்ரானின் மின்சுமை என்ன? புரோட்டானின் நிறை என்ன? நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?…”
இருபதும் ஒரே ஆழத்தில் இருக்கின்றன. மாணவன் பாடப்புத்தகத்தின் அதே வரிகளை மனப்பாடம் செய்து எழுதுவான். வினாத்தொகுப்பை முடித்ததும், அவனிடம் இருப்பது — இருபது தனித்த நினைவுத் துணுக்குகள். அவற்றுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை. நாளை எளிதாக மறந்துவிடும் இருபது துண்டுகள்.
மதிப்பீட்டு வினாக்களில் “எத்தனை வினாக்கள் வேண்டும், என்ன ஆழத்தில் கேட்க வேண்டும்” என்பதற்கு ஒரு தெளிவான வழிகாட்டி இருக்கிறதா? குறிப்பாக நடுநிலைப்பள்ளி அறிவியலுக்கு..
இருக்கிறது… அதற்கு ஒரு பெயர் உண்டு — TIMSS 35-35-30 விதி.
மதிப்பீடு என்பது தேர்வு அல்ல, ஒரு திசைகாட்டி
இந்த விதியைப் பார்க்கும் முன், ஒரு அடிப்படை மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த தசாப்தத்தின் மிக முக்கியமான சிந்தனைப் போக்கு இதுதான் — “மதிப்பீடு என்பது கற்றலின் முடிவில் நடக்கும் ஒன்றல்ல; அது கற்றல் செயல்முறையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும்..” அதாவது, ஒரு வினாத்தொகுப்பு வெறும் மதிப்பெண் கொடுப்பதற்கான கருவி அல்ல; அது ஆசிரியருக்கும் மாணவனுக்கும் ஒரு பின்னூட்ட அமைப்பு.
கல்வியாளர்களான பிளாக் மற்றும் வில்லியம் இதை மூன்று எளிய கேள்விகளாகச் சுருக்குகிறார்கள்:
- மாணவன் எங்கு செல்ல முயற்சிக்கிறான்?
- அவன் இப்போது எங்கு இருக்கிறான்?
- அங்கிருந்து அங்கு எப்படிச் செல்வது?
ஒரு வினாத்தொகுப்பு இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லும்போதுதான் — அது வெறும் தேர்வுக் கருவியாக இல்லாமல், கற்றலின் ஓர் உயிரோட்டமான பகுதியாக மாறுகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு, இப்போது 35-35-30 விதியைப் பார்ப்போம்.
ஒரே கருத்து, மூன்று ஆழங்கள்
TIMSS ஆய்வு ஒரு எளிய, ஆழமான யோசனையை முன்வைக்கிறது: ஒரே கருத்தை மூன்று வெவ்வேறு ஆழங்களில் கேட்கலாம்.
35% வினாக்கள் — உண்மைகளையும், வரையறைகளையும் நினைவில் வைத்திருக்கிறானா என்று சோதிக்கும். “காந்தத்தின் இரு துருவங்கள் யாவை?” போன்றவை. இது அடித்தளம் — புறக்கணிக்கக் கூடாது, ஆனால் இது மட்டும் போதாது.
இன்னொரு 35% — கற்றதை ஒரு புதிய சூழலில் பயன்படுத்த வைக்கும். “ஒரு காந்தத் தண்டை நடுவே உடைத்தால், கிடைக்கும் இரு துண்டுகளும் தனித்தனி காந்தங்களாக மாறுமா?” இங்கே மாணவன் பாடப்புத்தகத்தின் வரியை மீண்டும் எழுதவில்லை — தானே கருத்தை மறுகட்டமைக்கிறான்.
கடைசி 30% — உச்ச நிலை. பரிச்சயமில்லாத ஒரு சூழலை எதிர்கொள்ள வைக்கும். “சந்திரனில் ஒரு திசைகாட்டி (Compass) சரியாக வேலை செய்யுமா? ஏன்?” இதற்கு பாடப்புத்தகத்தில் நேரடி பதில் இருக்காது. இதுவே இந்த அடுக்கின் உரைகல் — இந்த வினாவின் பதிலை பாடப்புத்தகத்தில் தேட முடிந்தால், அது reasoning வினா இல்லை; ஒரு recall வினா, கொஞ்சம் நீளமான வாக்கியத்தில் மறைந்திருக்கிறது, அவ்வளவுதான்.
ஏன் இந்த மூன்று எண்களும் சமமாக இல்லை அல்லவா? உச்சம் எப்போதும் ஒரு பரந்த அடித்தளத்தின் மேல்தான் நிற்க முடியும். அறிதலும் பயன்பாடும் இல்லாமல், ஒரு மாணவனால் நேரடியாக யோசிக்க முடியாது. ஒரு பிரமிடு நினைவிற்கு வருகிறதா? அடிப்பகுதி அகலமானது, உச்சி குறுகியது — ஆனாலும் உச்சிதான் பிரமிடின் இலக்குப்புள்ளி.
இந்த மூன்று ஆழங்களையும் எந்த வினா வடிவத்தில் கேட்பது என்பதும் ஒரு முக்கிய முடிவுதான். ஒரு தச்சர் திருகாணிக்கு சுத்தியலைப் பயன்படுத்த மாட்டார் — வேலை செய்யும், ஆனால் மோசமாக, மரத்தையும் சேதப்படுத்தி. அதேபோல “அறிதலை” ஒரு MCQ-ஆகக் கேட்பதும், “தர்க்கத்தை” ஒரு திறந்த வினாவாக் கேட்பதும் — ஒவ்வொரு அடுக்குக்கும் அதற்கே உரிய கருவி தேவை. வடிவத்தைத் தேர்ந்தெடுப்பது கடைசி முடிவாக இருக்க வேண்டும், முதல் முடிவாக அல்ல.
நமது இலக்கு — ஒரு வினாத்தொகுப்பை, இருபது தனித் தகவல்களாக இல்லாமல், ஒரு படிக்கட்டாக மாற்றுவதே.
இந்த மூன்று ஆழங்களையும் பாடத்தின் ஒரே இடத்தில் திணிக்கக் கூடாது. ஒரு பாடம் ஆரம்பிக்கும்போதே ஒரு ஆர்வம் தூண்டும் திறந்த வினாவை வைக்கலாம், பாடம் நடக்கும்போதே ஒவ்வொரு உப-தலைப்புக்குப் பின்னும் ஓரிரு எளிய அறிதல் வினாக்களை வைக்கலாம், இறுதியாக பாடம் முடிந்தபின் வரும் பெரிய பயிற்சித் தொகுப்பில் — 35-35-30 விதிப்படி பயன்பாடு, தர்க்க வினாக்களை குவிக்கலாம்.
வழிகாட்டப்பட்ட பொறுப்பு மாற்றம் — ஒரு படிப்படியான விடுதலை
இந்த “எங்கு வைப்பது” என்ற கேள்விக்கு ஒரு இன்னும் நுட்பமான பதிலும் உண்டு — ‘வழிகாட்டப்பட்ட பொறுப்பு மாற்றம்’ (Gradual Release of Responsibility). ஒரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் — வினாக்கள் ஆசிரியரின் நேரடி வழிகாட்டுதலுடன் தொடங்கலாம்: ஒரு worked-example கொடுத்து, அதே மாதிரியில் ஒரு எளிய வினாவைக் கேட்பது. அத்தியாயம் முன்னேற முன்னேற, அந்த ஆதரவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இறுதி வினாத்தொகுப்பில் மாணவன் முழு சுதந்திரத்துடன் தானே சிந்தித்து, தர்க்கரீதியான பதில்களை உருவாக்க வேண்டும்.
இதைத் தூண்டும் ஒரு practical கருவியும் இருக்கிறது — GRASPS வடிவமைப்பு (Goal, Role, Audience, Situation, Product, Standards). ஒரு தர்க்க வினாவை வெறும் “விளக்கு” என்று கேட்பதற்குப் பதிலாக, ஒரு இலக்கு (Goal), ஒரு பாத்திரம் (Role — “நீ ஒரு விஞ்ஞானி என்று வைத்துக்கொள்”), ஒரு பார்வையாளர் (Audience), ஒரு யதார்த்த சூழல் (Situation) கொடுத்தால் — அதே கருத்தை மாணவன் இன்னும் ஆழமாக, இன்னும் தன்னார்வத்துடன் அணுகுவான்.
இதை அறிவாற்றல் ஆழத்தின் நான்கு நிலைகளுடன் (Depth of Knowledge — DOK) இணைத்தால், 35-35-30 விதி இன்னும் துல்லியமான ஒரு structure பெறுகிறது: DOK 1 (நினைவு) மற்றும் DOK 2 (திறன்/கருத்து) — “அறிதல்” மற்றும் “பயன்பாடு” அடுக்குகளுக்கு பொருந்தும்; DOK 3 (மூலோபாய சிந்தனை) மற்றும் DOK 4 (நீட்டிக்கப்பட்ட சிந்தனை) — “தர்க்க” அடுக்கை இன்னும் கூர்மையாக்குகின்றன.
இதை இன்னும் தெளிவாகக் கட்டமைக்க ஒரு சுருக்கமான வழிகாட்டியும் உண்டு — 5E மாதிரி (Engage, Explore, Explain, Elaborate, Evaluate). பாடம் ஆரம்பிக்கும் Engage கட்டத்தில் ஆர்வம் தூண்டும் திறந்த வினா வர வேண்டும்; Explore/Explain கட்டங்களில் நடுத்தர அறிதல்-பயன்பாட்டு வினாக்கள் வரலாம்; இறுதி Evaluate கட்டத்தில்தான் — 35-35-30 விதிப்படி கட்டமைக்கப்பட்ட, உச்ச தர்க்க வினாக்கள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு கட்டமும் மாணவனை முந்தையதை விட ஒரு படி மேலே இட்டுச் செல்ல வேண்டும்.
அத்தியாயங்கள் தனித் தீவுகள் அல்ல
பொதுவாக பின்பற்றப்படும் பாடநூல் பாரம்பரியத்தில் — ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனித் தீவு. இயற்பியல் பாடம் ஒரு பிரிவு, உயிரியல் பாடம் இன்னொரு பிரிவு, வேதியியல் பாடம் வேறொரு பிரிவு — மூன்றும் மூன்று தனி உலகங்கள் போல மாணவனுக்குத் தெரியும்.
ஆனால் யோசித்துப் பாருங்கள் — “சுவாசம்” (உயிரியல் அத்தியாயம்) ஒரு பாடம். “எரிதல் மற்றும் ஆக்சிஜனேற்றம்” (வேதியியல் அத்தியாயம்) இன்னொரு பாடம். “வெப்ப ஆற்றல்” (இயற்பியல் அத்தியாயம்) வேறொரு பாடம். மூன்றையும் தனித்தனியாகக் கற்ற ஒரு மாணவனிடம் — இவை மூன்று தொடர்பில்லாத தீவுகளாகவே இருக்கும். ஒரு இணைப்பு வினா இந்தத் தீவுகளுக்கிடையே ஒரு பாலம் கட்டுகிறது:
“நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் சென்று ஆற்றலாக மாறும்போது, அதே நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி எரியும்போதும் ஆற்றல் உருவாகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பொதுவாக என்ன நடக்கிறது? உடலின் சுவாசத்தையும், மெழுகுவர்த்தியின் எரிதலையும் ஒப்பிட்டு, ஏன் இரண்டையும் ‘ஆக்சிஜனேற்ற வினை’ என்று அழைக்கலாம் என்று விளக்கு.”
ஒரே ஒரு வினா — மூன்று அத்தியாயங்களின் கருத்துகளையும் ஒரே நேரத்தில் கோருகிறது. மாணவன் “சுவாசம்” (உயிரியல்), “ஆக்சிஜனேற்ற வினை” (வேதியியல்), “ஆற்றல் வெளியீடு” (இயற்பியல்) — இந்த மூன்றையும் தானே இணைத்து ஒரு புதிய புரிதலைக் கட்டமைக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் இந்த மூன்று அத்தியாயங்களையும் இணைக்கும் வரி எங்கும் இருக்காது; அந்த இணைப்பை மாணவனே கண்டுபிடிக்க வேண்டும்.
இதுவே பாடப்பிரிவுகளைத் தாண்டிய integration-ன் உண்மையான சக்தி.
மேலும் ஒரு எளிய செயல்முறையும் உண்டு — முந்தைய அத்தியாயத்தின் ஒரு தனி வினாவை, புதிய அத்தியாயத்தின் இறுதிப் பட்டியலில் அப்படியே மீண்டும் கேட்பது (interleaving). மனித மூளை ஒரு தகவலை இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும்போது, அதை நீண்டகால நினைவகத்தில் நன்றாகப் பதிக்கிறது.
ஒரு பாடநூல் எழுத்தாளர் — ஒரு அத்தியாயத்தை எழுதி முடிக்கும்போதே, “இந்தக் கருத்தை, வேறு எந்தப் பாடப்பிரிவின் அத்தியாயத்துடன் இணைத்துக் கேட்கலாம்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த integration-ஐ இன்னும் ஆழமாக்கும் ஒரு நுட்பமான உத்தியும் பாடநூல்களில் காணப்படுகிறது — விளக்கக் குறிப்புடனான வரைபடங்கள் (Annotated Drawings). ஒரு அணை கட்டப்பட்டதால் ஒரு பள்ளத்தாக்கு எவ்வாறு நீரில் மூழ்கியது என்பதை மாணவனே ஒரு வரைபடமாக வரைந்து, அதில் ஆற்றின் ஓட்டம், மலைகளின் அமைப்பு, நீர் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடச் சொன்னால் — வார்த்தைகளை விட படங்கள் மூலம் சிந்திக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான வெளிப்பாட்டு வழியாக அமையும். இது integration வினாவின் இன்னொரு வடிவம்தான் — நிலவியலும், இயற்பியலும், நீரியலும் ஒரே காட்சிக்குள் இணைகின்றன.
உலகெங்கும் ஒரே திசையில்
இந்த அணுகுமுறை வெறும் தத்துவமல்ல; உலகின் பல்வேறு நாடுகளின் அறிவியல் கல்வி முறைமைகள் — ஒவ்வொன்றும் தன் சொந்த பண்பாட்டு முத்திரையுடன் — இதே திசையில் நகர்ந்துகொண்டிருக்கின்றன.
சிங்கப்பூர் தன் பாடநூல்களில் அடிப்படை நினைவூட்டல் வினாக்களில் தொடங்கி, படிப்படியாக பரிச்சயமில்லாத சூழல்களுக்கு மாணவனை அழைத்துச் செல்கிறது. மாற்று எரிசக்தி போன்ற சிக்கலான தலைப்புகளை மதிப்பிட “உண்மையா அல்லது புனைகதையா” என்ற ஒரு விளையாட்டு அடிப்படையிலான உத்தியைப் பயன்படுத்துகிறது — அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் புகை கதிரியக்கக் கழிவா அல்லது வெறும் நீராவியா என்ற பொதுவான தவறான எண்ணத்தை, மாணவர்கள் ஜோடிகளாக விவாதித்துக் களைகிறார்கள்.
அமெரிக்காவின் நவீன பாடத்திட்டங்கள் ஒவ்வொரு வினாவையும் ஒரு உண்மையான நிகழ்வோடு இணைக்கின்றன. Amplify Science போன்ற பாடத்திட்டங்கள் ஒவ்வொரு அலகின் நடுவிலும் “விமர்சனக் கட்ட மதிப்பீடுகளை” (Critical Juncture Assessments) வழங்கி, மாணவரின் புரிதலில் உள்ள இடைவெளிகளை உடனடியாகக் கண்டறிந்து, கற்பித்தலை மாற்றியமைக்க ஆசிரியர்களுக்கு உதவுகின்றன.
பின்லாந்து ஒரு படி மேலே சென்று — ஒரு வினாவே இயற்பியலையும், சூழலியலையும், சமூகவியலையும் ஒரே நேரத்தில் தொடும் வகையில் வடிவமைக்கிறது.
ஜப்பானின் பாடநூல்கள் “இயற்கை மற்றும் மனிதர்கள்” என்ற கருப்பொருளின் கீழ் மதிப்பீடுகளை அமைக்கின்றன — உதாரணமாக, பாராலிம்பிக் வீரர்களுக்கான சிறப்புச் சக்கர நாற்காலிகளின் கண்டுபிடிப்பு குறித்த பகுப்பாய்வை ஒரு வினாவாகக் கொடுத்து, தொழில்நுட்பம் எப்படி ஒரு உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க முடியும் என்று மாணவனை சிந்திக்க வைக்கின்றன.
இந்த மாற்றம் எல்லா இடங்களிலும் சமமான வேகத்தில் நடக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். துருக்கி, கிரேக்கம் போன்ற நாடுகளின் பாடநூல்களை ஆராய்ந்த ஆய்வுகள் — அங்குள்ள விசாரணை வினாக்கள் இன்னும் பெரும்பாலும் “உறுதிப்படுத்தும் நிலையிலேயே” (ஏற்கனவே தெரிந்த ஒரு விடையை உறுதி செய்வது) உள்ளதாகவும், உண்மையான அறிவியல் விசாரணையின் தன்மை இன்னும் முழுமையாக வினாக்களில் பிரதிபலிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றன.
இது நமக்கு ஒரு எச்சரிக்கை — புதிய கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது எளிது, ஆனால் அவற்றை ஒவ்வொரு வினாவிலும் நேர்மையாகச் செயல்படுத்துவதே கடினமான வேலை.
மூன்று-நான்கு வெவ்வேறு பாதைகள், ஆனால் ஒரே சிகரம் — மாணவனை மனனத்திலிருந்து புரிதலுக்கு அழைத்துச் செல்வது.
வெங்காயமும் காலணியும் — ஒரு WhatsApp செய்தி கற்பிக்கும் பாடம்
இன்றைய மாணவன் — பாடநூலிலிருந்து மட்டும் தகவல் பெறுவதில்லை. YouTube, WhatsApp, AI chatbots, சமூக ஊடகங்கள் என பல மூலங்களிலிருந்து அறிவியல்-போன்ற கூற்றுகள் தினமும் அவனை வந்தடைகின்றன.
“வெங்காயத்தை காலணிக்குள் வைத்துத் தூங்கினால் காய்ச்சல் குணமாகும்” என்று ஒரு WhatsApp செய்தி சொன்னால் — உங்கள் மாணவன் என்ன செய்வான்?
இதுவே PISA 2025-ன் மிகப் புதிய, மிக முக்கியமான திறன் — வெளியில் காணப்படும் அறிவியல் தகவல்களை ஆராய்ந்து, மதிப்பிட்டு, முடிவெடுக்கும் திறன். இது “வெங்காயம் காய்ச்சலைக் குணப்படுத்துமா இல்லையா” என்ற உண்மையைச் சோதிக்கவில்லை. அது உண்மையை எப்படிக் கண்டறிவது என்ற செயல்முறையைச் சோதிக்கிறது:
- இது வெறும் கருத்தா, நிரூபிக்கப்பட்ட உண்மையா?
- இதற்கான அறிவியல் சான்று எங்கே உள்ளது?
- இதைச் சோதித்துப் பார்த்தவர்கள் யார்?
“ஒளிச்சேர்க்கை என்றால் என்ன” என்று கேட்பது ஒரு தளம். “இந்தக் கூற்று உண்மையா என்று எப்படிச் சோதிப்பாய்” என்று கேட்பது முற்றிலும் வேறு தளம். முதலாவது — அறிவியலின் உள்ளடக்கத்தை சோதிக்கிறது. இரண்டாவது — அறிவியலின் முறையை சோதிக்கிறது. நவீன தரநிலைகள் இதற்கு ஒரு பெயரும் கொடுத்திருக்கின்றன — மாணவன் ஒரு கூற்றை முன்வைத்து, அதற்கான தரவு ஆதாரங்களை வழங்கி, அந்த ஆதாரங்கள் எவ்வாறு கூற்றை நிரூபிக்கின்றன என்பதற்கான தர்க்கரீதியான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதே இன்றைய பல மதிப்பீடுகளின் அடிப்படை விதியாகியுள்ளது.
பாடநூல் இனி வெறும் உண்மைகளைச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது — மாணவனுக்கு நாளை ஒரு போலியான தகவலை எதிர்கொள்ளும்போது, அதை மதிப்பிடக்கூடிய ஒரு உள்ளார்ந்த திறனை இன்றே கொடுக்க வேண்டும்.
“தெரிவது” போதாது, “செயல்படுவது” வேண்டும் — Agency in the Anthropocene
இதுவரை பேசப்பட்ட அனைத்தும் — மாணவனின் அறிதலை சோதிப்பது பற்றியது. TIMSS-ன் மூன்று அடுக்குகளும், மேலே பார்த்த Epistemic திறனும் கூட — இறுதியில் “மாணவன் என்ன தெரிந்துகொண்டான், எதை நம்பலாம் என்று அவனால் மதிப்பிட முடிகிறதா” என்பதையே அளவிடுகின்றன. ஆனால் PISA 2025-ன் ஒரு கட்டமைப்பு இதைத் தாண்டி ஒரு அடி முன்னே செல்கிறது — “Agency in the Anthropocene.”
“Anthropocene” என்பது — மனிதனின் செயல்பாடுகளால் பூமியின் சூழலியல் அமைப்பே மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திற்கு விஞ்ஞானிகள் கொடுத்த பெயர். காலநிலை மாற்றம், நீர்ப் பற்றாக்குறை, மாசுபாடு, உயிரின பன்முகத்தன்மை இழப்பு — இவை இனி “சூழலியல்” எனும் ஒரு தனிப் பாடமாக மட்டும் ஒரு மூலையில் கற்பிக்கப்பட வேண்டியவை அல்ல. ஒளிச்சேர்க்கை பாடத்திலும், மின்சாரம் பாடத்திலும், இரசாயன மாற்றங்கள் பாடத்திலும் — ஒவ்வொரு அறிவியல் கருத்திலும் இந்த மானுடக் காலகட்டத்தின் நிழல் படிந்திருக்க வேண்டும் என்பதே இந்த கட்டமைப்பின் அடிப்படை. மனிதச் செயல்பாடுகளால் புவியின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொண்டு, தரவுகளை விமர்சனரீதியாகப் பகுப்பாய்வு செய்து, சாத்தியமான தீர்வுகளை வடிவமைக்கும் திறனையே இது மதிப்பிடுகிறது.
“Agency” (செயலாற்றுதிறன்) என்ற சொல்லே இங்கே முக்கியம். ஒரு மாணவன் காலநிலை மாற்றத்தைப் பற்றி எத்தனை உண்மைகள் தெரிந்திருந்தாலும் — அவனால் அந்த அறிவை வைத்து ஒரு சிறிய, நடைமுறையான முடிவை எடுக்க முடியவில்லை என்றால், அது வெறும் தகவல்தான், திறன் அல்ல. எனவே PISA-சார்ந்த ஒரு வினா ஒருபோதும் “காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை எழுது” என்று நிற்காது. அது இப்படி நகரும்:
“ஒரு குடும்பம் தினமும் மசாலா அரைப்பதற்குப் பதிலாக, தயார்நிலை மசாலா பொடிகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவு அதிகரிக்கிறது, மின்சாரப் பயன்பாடு குறைகிறது. இந்த மாற்றத்தின் சூழலியல் நன்மை-தீமைகளை எடைபோட்டு, உன் குடும்பத்திற்கு ஒரு பரிந்துரையை வழங்கு.”
இங்கே மாணவன் மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செய்கிறான் — தரவை பகுப்பாய்வு செய்கிறான், இரண்டு எதிரெதிர் விளைவுகளையும் எடைபோடுகிறான், இறுதியில் ஒரு நடைமுறை முடிவை எடுக்கிறான். இது ஒரு தேர்வு அறையில் மட்டும் பயன்படும் பதில் அல்ல — அவன் வீட்டிலேயே, தன் அம்மாவிடம் சொல்லக்கூடிய ஒரு பரிந்துரை.
பாரம்பரிய அறிவியல் வினா — “நீ படித்ததை நினைவில் வைத்திருக்கிறாயா?” என்று கேட்கிறது. Agency-அடிப்படையிலான வினா — “நீ படித்ததை வைத்து, நாளை உன் வீட்டில், உன் ஊரில் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியுமா?” என்று கேட்கிறது. முதலாவது — தேர்வு அறைக்குள் மட்டும் பயன்படும் திறன், தேர்வு முடிந்த மறுநிமிடமே மறக்கப்படக்கூடியது. இரண்டாவது — வாழ்நாள் முழுக்கப் பயன்படும் திறன், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சூழலில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடியது.
இதுவே இக்கட்டமைப்பை புரட்சிகரமாக்குகிறது — இது கேள்வி கேட்கும் அடிப்படை நோக்கத்தையே மாற்றுகிறது. பாடநூல் இனி “என்ன தெரியும்” என்று மட்டும் கேட்காமல், “என்ன செய்வாய்” என்று கேட்கத் தொடங்குகிறது.
ஒரு புதிய சவால் — AI-யுகத்தில் ஒரு வினா எப்படி நேர்மையாக இருக்க முடியும்?
இந்த எல்லா அணுகுமுறைகளுக்கும் நடுவே, இன்று ஒரு புதிய, யாரும் எதிர்பார்க்காத சவால் எழுந்திருக்கிறது. ஒரு தர்க்க வினாவை — “சந்திரனில் ஒரு திசைகாட்டி வேலை செய்யுமா, ஏன்?” போன்றதை — ஒரு மாணவன் இப்போது எந்த ஜெனரேட்டிவ் AI கருவியிடமும் கேட்டு, விநாடிகளில் ஒரு நேர்த்தியான பதிலைப் பெற்றுவிட முடியும். வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்படும் ஒரு integration வினா, அல்லது ஒரு Agency-அடிப்படையிலான வினா — இவை எல்லாமே இந்த சவாலை எதிர்கொள்கின்றன.
இதற்கான பதில் வினாக்களை இன்னும் கடினமாக்குவது அல்ல; வினாக்களை மாணவனுக்கே உரித்தானதாக ஆக்குவதுதான். “உன் குடும்பத்திற்கு ஒரு பரிந்துரையை வழங்கு” என்ற வினாவை ஒரு AI கருவியால் பொதுவாக பதிலளிக்க முடியும், ஆனால் “உன் குடும்பம் மசாலா அரைக்கும் விதம் என்ன, அதை மாற்றினால் என்ன நடக்கும்” என்று மாணவனின் சொந்த வீட்டு அனுபவத்தை நேரடியாகக் கேட்கும்போது — அந்தப் பதிலை AI உருவாக்க முடியாது, ஏனெனில் அது ஒரு தனிப்பட்ட அவதானிப்பைக் கோருகிறது. உலகளாவிய அளவில் இதற்கான தீர்வுகளாக, மாணவனின் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு முடிவெடுக்கும் கட்டத்தையும் நேரடியாகக் கண்காணிக்கக்கூடிய ஊடாடும் மதிப்பீட்டுச் சூழல்களும் இன்று உருவாகி வருகின்றன. ஆனால் நம்மைப் பொறுத்தவரை — ஒரு எளிய, மலிவான தீர்வு இருக்கிறது: வினாவை பொதுத்தன்மையிலிருந்து விலக்கி, மாணவனின் சொந்த சூழலுக்குள் இறக்குவதே.
அனைத்து நிலைகளிலும்…
அலகுத் தேர்வோ, பருவத் தேர்வோ — ஆசிரியர் தனது சொந்த வினாத்தாளை வடிவமைக்கும்போது இதே விகிதத்தைப் பயன்படுத்தலாம். 20 மதிப்பெண் தேர்வில் — 7 மதிப்பெண் அறிதலுக்கு, 7 மதிப்பெண் பயன்பாட்டுக்கு, 6 மதிப்பெண்ணுக்காவது தர்க்க வினாக்களுக்கு என்று ஒதுக்கினால் போதும். இந்த ஒரு சிறிய மாற்றம் — “எல்லாம் நினைவில் வைத்திரு” என்ற பழக்கத்தை வகுப்பறையிலேயே உடைக்கத் தொடங்கும்.
நிறைவாக — வினாத் தொகுப்பு ஒரு படிக்கட்டு
ஒரு பாடநூலின் பயிற்சிப் பக்கம் என்பது, ஒரே தளத்தில் தேங்கி நிற்கும் இருபது வினாக்களின் குவியல் அல்ல; அது அறிவாற்றலை நோக்கி மாணவனை உயர்த்திச் செல்லும் ஒரு நேர்த்தியான படிக்கட்டு. இதிலுள்ள ஒவ்வொரு படியும், முந்தைய படியிலிருந்து கற்பவர் எளிதாக மேலேறக் கூடிய சரியான உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.
அறிதல் 35%, பயன்படுத்துதல் 35%, பகுத்தறிதல் 30% — என்பவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. அவை, மாணவனின் சிந்தனையை எந்த ஆழத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும் அளவீடுகள். அதற்கு மேல் — வேறு பாடப்பிரிவுகளை இணைக்கும் ஒரு வினா, வெளியில் கேட்ட ஒரு கூற்றை மதிப்பிடும் ஒரு வினா, தன் அறிவை வீட்டுக்குள் கொண்டு செல்லும் ஒரு வினா — இவை மூன்றும் சேரும்போதுதான், ஒரு பயிற்சிப் பக்கம் முழுமையடைகிறது.
“இந்த இருபது கேள்விகளையும் எழுதி முடிக்கும்போது, என் குழந்தையிடம் என்ன எஞ்சியிருக்கும்? விடைத்தாளில் கரையும் வெறும் நினைவாற்றலா, அல்லது அவன் சிந்தனையில் உதித்த ஒரு புதிய வெளிச்சமா?” — ஒரு வினாத்தொகுப்பை உருவாக்கும்போது, ஒரு தாயின் அக்கறையோடு இந்தக் கேள்வியை நம்முள் கேட்டுக்கொள்வோம்.
தொடர்ந்து பேசுவோம் — சாக்பீஸ்டைரி.
