Barak Rosenshine கண்டுபிடித்த 10 கோட்பாடுகள் — ஓர் அறிமுகம்
“சிறந்த ஆசிரியர்கள் அப்படி என்னதான் வித்தியாசமாகச் செய்கிறார்கள்?” — கல்வித்துறையில் காலம் காலமாக எதிரொலிக்கும் மிக முக்கியமான கேள்வி இது.
இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக கல்வி உளவியல் பேராசிரியர் பராக் ரோசன்ஷைன் (Barak Rosenshine) ஒரு தனித்துவமான ஆய்வை மேற்கொண்டார்.
அவர் வெறும் தத்துவங்களை மட்டும் அறையில் உட்கார்ந்து எழுதவில்லை; மாறாக, நேரடியாக வகுப்பறைகளைக் கவனித்தார், மாணவர்களின் கற்றல் அடைவுகளை (learning outcomes) அளவிட்டார், அவற்றை அறிவாற்றல் அறிவியலோடு (cognitive science) ஒப்பிட்டுப் பார்த்தார்.
இந்த நெடிய ஆய்வின் இறுதியில், 2012-ஆம் ஆண்டு ‘Principles of Instruction’ என்ற பெயரில் வெறும் 9 பக்கங்கள் கொண்ட ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியானது. “ஆசிரியர் பயிற்சியில் பல வருடங்கள் செலவிட்டுப் படித்ததைவிட, இந்த 9 பக்கங்கள் எனக்குக் கற்பித்தல் பற்றி அதிகம் கற்றுக்கொடுத்தன” என்று அனுபவமிக்க ஆசிரியர்கள் பலர் வியந்து கூறும் அளவுக்கு, அக்கட்டுரை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2010-ல் International Academy of Education வழியாக இக்கட்டுரையின் முதல் வடிவம் வெளிவந்தது. 2012-ல் American Educator இதழில் “Principles of Instruction: Research-based strategies that all teachers should know” என்ற தலைப்பில் முழு வடிவம் வெளியிடப்பட்டது.
கற்பித்தல் கலையை, அறிவியல்பூர்வமான தரவுகளோடு இணைக்கும் ரோசன்ஷைனின் அந்த 10 கோட்பாடுகளின் சுருக்கமான அறிமுகமே இக்கட்டுரை.
மூன்று வேறுபட்ட ஆதாரங்கள், ஒரே முடிவு
இந்த 10 கோட்பாடுகளை வலுவாக்குவது எதுவென்றால் — இவை ஒரேயொரு ஆராய்ச்சித் தளத்திலிருந்து மட்டும் உருவானவை அல்ல. மாறாக, முற்றிலும் வேறுபட்ட மூன்று தளங்களிலிருந்து இவை பெறப்பட்டுள்ளன:
அறிவாற்றல் அறிவியல் (Cognitive Science): மனித மூளையானது புதிய தகவல்களை எவ்வாறு உள்வாங்குகிறது, தக்கவைக்கிறது மற்றும் பயன்படுத்துகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள்.
திறமையான ஆசிரியர்களின் நடைமுறைகள் (Master Teachers’ Practices): மாணவர்களின் வெற்றியோடு தொடர்புடைய, சிறந்த ஆசிரியர்களின் வகுப்பறைச் செயல்பாடுகளை நேரடியாகக் கவனித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.
அறிவாற்றல் ஆதரவு ஆராய்ச்சி (Cognitive Supports): சிக்கலான கற்றல் சூழல்களில், மாணவர்களின் புரிதலுக்கு எந்த வகையான கட்டமைப்புகள் (Structures / Scaffolding) உதவுகின்றன என்பது குறித்த கண்டுபிடிப்புகள்.
ஆச்சரியமூட்டும் வகையில், இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று முரண்படவே இல்லை. மாறாக, ஒரே முடிவுகளைத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தின. மூன்று வேறுபட்ட ஆராய்ச்சி கூறுகளிலிருந்தும் பெற்ற ஒருங்கிணைந்த விடையே இந்தக் கோட்பாடுகள்.
கற்றலை உறுதிசெய்யும் 10 கோட்பாடுகள்
கோட்பாடு 1 — கற்றதை மீட்டெடுத்து வகுப்பைத் தொடங்குங்கள்
(Begin a lesson with a short review of previous learning)
வகுப்பு தொடங்குகிறது. ஆசிரியர் நேரடியாக இன்றைய பாடத்திற்குச் செல்கிறார். நேரம் குறைவு, பாடத்திட்டம் அதிகம் — இது புரிந்துகொள்ளக்கூடியதே.
ஆனால், ரோசென்ஷைனின் ஆராய்ச்சி ஒன்றை மிகத் தெளிவாக உணர்த்துகிறது: பயிற்சி செய்யப்படாத, மீள்பார்வை செய்யப்படாத தகவல்கள் விரைவாகவே மறைந்துவிடும். நேற்றைய பாடம் மறந்துவிட்டால், இன்று புதியதைக் கற்பிப்பதற்கான அடித்தளமே இல்லாமல் போய்விடும்.
தொடக்கநிலைக் கணித வகுப்புகளில் நடந்த ஓர் ஆய்வில், தினமும் வெறும் 8 நிமிடங்களை மட்டும் மீள்பார்வைக்காக ஒதுக்கிய ஆசிரியர்களின் வகுப்புகளில் மாணவர்களின் கற்றல் திறன் வெளிப்படையாகவே உயர்ந்தது. அந்த நேரத்தில் வீட்டுப்பாடங்களைச் சரிபார்க்கலாம், தவறுகளை விளக்கலாம், அடுத்த பாடத்திற்குத் தேவையான வார்த்தைகளையும் கருத்துகளையும் நினைவூட்டலாம்.
இந்தச் சிறிய முதலீடு — அன்றைய முழுப் பாடத்திற்கும் மிக உறுதியான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.
கோட்பாடு 2 — சிறு படிகளாகக் கற்பித்து, உடனுக்குடன் பயிற்சி அளியுங்கள்
(Present new material in small steps with student practice after each step)
ஒரு 40 நிமிட வகுப்பில், குறைவான திறன் கொண்ட ஆசிரியர்கள் புதிய பாடத்தை விளக்குவதற்குச் சராசரியாக 11 நிமிடங்கள் மட்டுமே செலவிட்டார்கள் — அதுவும் பல கருத்துகளை ஒரே நேரத்தில் திணித்துவிட்டு, மீதி நேரத்தைப் பயிற்சித்தாள்களைக் கொடுத்து நிரப்பினார்கள். விளக்கம் போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் நிறைய தவறுகள் செய்தார்கள்; ஆசிரியரோ ஒவ்வொரு மேசையாகச் சென்று மீண்டும் மீண்டும் விளக்க வேண்டியிருந்தது.
திறமையான ஆசிரியர்கள் என்ன செய்தார்கள்? அதே 40 நிமிட வகுப்பில் 23 நிமிடங்களை விளக்கம், எடுத்துக்காட்டுகள், கேள்விகள் மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சிக்காகச் செலவிட்டார்கள்.
மனித மூளையின் செயல்பாட்டு நினைவகம் (Working memory) அளவானது. ஒரே நேரத்தில் அதிக தகவல்களைக் கொடுத்தால் மூளை திணறிவிடும்.
ஒரு கருத்து → பயிற்சி → அடுத்த கருத்து → பயிற்சி.
இந்தச் சங்கிலித் தொடரே கற்றலை உறுதியாக்குகிறது. முதல் படி மனதில் பதியும் முன் அடுத்த படிக்குச் செல்லாதீர்கள் — இதுவே இந்தக் கோட்பாட்டின் சாராம்சம்.
கோட்பாடு 3 — அதிக கேள்விகள் கேட்டு, அனைவரின் புரிதலையும் உறுதிசெய்யுங்கள்
(Ask a large number of questions and check the responses of all students)
வகுப்பில் ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு மாணவன் கை தூக்கி சரியான விடையைச் சொல்கிறான். உடனே, “வகுப்பிற்கு நன்றாகப் புரிந்துவிட்டது” என நாம் உணர்கிறோம்.
ஆனால், மற்ற 39 பேரின் நிலை என்ன?
ரோசென்ஷைனின் ஆய்வறிக்கையில் ஓர் அழுத்தமான வழிகாட்டுதல் உள்ளது: “ஒவ்வொரு மாணவரின் பதிலையும் சரிபாருங்கள்.” இதை எப்படிச் செய்வது? சிறிய காகிதத்தில் எழுதிக் காட்டச் சொல்லலாம்; அருகில் உள்ளவரிடம் விவாதிக்கச் சொல்லலாம்; அல்லது அனைவரையும் ஒன்றாகப் பதிலளிக்கச் சொல்லலாம்.
சிறந்த ஆசிரியர்கள் வெறும் தகவல் சார்ந்த கேள்விகளை மட்டும் கேட்பதில்லை; “இந்த விடையை எப்படிக் கண்டுபிடித்தாய்?” போன்ற சிந்தனை முறை சார்ந்த கேள்விகளையும் (Process questions) கேட்கிறார்கள். இது மாணவனின் சிந்தனை ஓட்டத்தை ஆசிரியருக்குக் காட்டுகிறது. ஆனால், சாதாரண ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்முறை சார்ந்த கேள்விகளைக் கேட்பதே இல்லை என ரோசென்ஷைன் சுட்டிக்காட்டுகிறார். கை தூக்கியவன் மட்டும் வகுப்பல்ல — அமைதியாக உட்கார்ந்திருப்பவர்களின் புரிதலும் ஆசிரியரின் பொறுப்பே.
கோட்பாடு 4 — வழிகாட்டும் மாதிரிகளையும் செய்முறை உதாரணங்களையும் வழங்குங்கள்
(Provide models and worked examples)
ஒரு கணக்கைக் கரும்பலகையில் தீர்க்கும்போது பெரும்பாலும் என்ன நடக்கிறது? ஆசிரியர் செய்கிறார், மாணவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். என்ன நடக்கிறது என்பது புரிகிறது — ஆனால் “ஏன் இந்தப் படி?” என்பது மட்டும் அவர்களுக்குப் புரிவதில்லை.
இதற்கு ரோசென்ஷைன் சொல்லும் தீர்வு: “சிக்கலைத் தீர்க்கும்போதே உங்கள் சிந்தனையைச் சத்தமாக வெளிப்படுத்துங்கள்” (Think Aloud).
“நான் முதலில் இதைச் செய்கிறேன், ஏனென்றால்…”
“இந்த இடத்தில் கவனியுங்கள் — நிறையப் பேர் இங்கேதான் தவறு செய்வார்கள்…”
என்று சொல்லிக்கொண்டே செய்யுங்கள். இந்த “சிந்தனை ஒலிப்பு” முறை, ஒரு நிபுணரின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை மாணவர்களுக்கு நேரடியாகக் காட்டுகிறது. மறைந்திருக்கும் சிந்தனை ஓட்டம் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு சுவாரசியமான ஆய்வும் இதை மெய்ப்பிக்கிறது: மாணவர்களுக்குத் தனியாகக் கணக்குகளைக் கொடுப்பதைவிட, ஒரு தீர்க்கப்பட்ட உதாரணம், அதன்பின் ஒரு கணக்கு என மாற்றி மாற்றிக் கொடுத்தபோது அவர்களின் கற்றல் திறன் பன்மடங்கு அதிகரித்தது. விடையை மட்டும் காட்டாதீர்கள் — விடையை நோக்கிய சிந்தனையையும் காட்டுங்கள்; அதுவே உண்மையான கற்பித்தல்.
கோட்பாடு 5 — படிப்படியான வழிகாட்டுதலுடன் மாணவர்களைப் பயிற்சி செய்ய வையுங்கள்
(Guide student practice)
“ஆசிரியர் விளக்கினார் → மாணவர்கள் செய்தார்கள்” — இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் மிக முக்கியமான ஒரு படி உள்ளது; அதுதான் வழிகாட்டுதலுடனான பயிற்சி (Guided Practice).
ரோசென்ஷைனின் ஆய்வில் ஒரு தெளிவான உண்மை புலப்பட்டது: எந்த ஆசிரியர்கள் இவ்வகைப் பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்கினார்களோ, அவர்களின் வகுப்பில் மாணவர்கள் சுயாதீனமாகப் பயிற்சி செய்யும்போது அதிக ஈடுபாட்டுடன் இருந்தனர்; மிகக் குறைவான தவறுகளையே செய்தனர்.
வழிகாட்டுதலுடனான பயிற்சி என்றால் என்ன? ஆசிரியர் முதல் சில கணக்குகளை ஒவ்வொரு படியாக விளக்கியபடியே கரும்பலகையில் செய்கிறார். பின் மாணவர்களை அழைத்துக் கரும்பலகையில் செய்யச் சொல்கிறார்; மற்றவர்கள் அதைக் கவனிக்கிறார்கள். ஏதேனும் தவறிருந்தால் ஆசிரியர் உடனுக்குடன் திருத்துகிறார். இங்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் மெல்ல மெல்லக் குறைகிறதே தவிர, மாணவர்கள் ஒருபோதும் தடாலடியாகக் கைவிடப்படுவதில்லை.
கோட்பாடு 6 — ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்களின் புரிதலைச் சோதியுங்கள்
(Check for student understanding)
பாடம் முடிகிறது. “எல்லாருக்கும் புரிந்ததா?” என்று நாம் கேட்கிறோம். வகுப்பு முழுவதும் ஒரே குரலில் “புரிந்தது” என்று சொல்கிறது.
ரோசென்ஷைன் இதை நேரடியாகவே விமர்சிக்கிறார்: “குறைவான திறன் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே ‘ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?’ எனக் கேட்டுவிட்டு, பதில் வராததால் மாணவர்களுக்குப் பாடம் புரிந்துவிட்டது என நினைத்துக்கொள்வார்கள்.”
புரிதலைச் சரிபார்த்தல் என்பது பாடத்தின் முடிவில் அல்ல — நடுவிலேயே நிகழ வேண்டும்.
- “இந்தக் கருத்தை உங்கள் சொந்த உதாரணத்தோடு ஒரு வரியில் எழுதுங்கள்”
- “இதை உன் நண்பனுக்கு எப்படி விளக்குவாய்?”
- “இதற்கு நேர்மாறான நிகழ்வு என்னவாக இருக்கும்?”
மாணவர்களின் விடைகளில் தவறுகள் இருந்தால், ஆசிரியர் அடுத்த பாடத்திற்கு நகரக் கூடாது; மீண்டும் விளக்க வேண்டும். ஏனென்றால், திருத்தப்படாத தவறான புரிதல்கள் நீண்டகால நினைவகத்தில் ஆழமாகப் பதிந்துவிடும்; அதைப் பின்னர் மாற்றுவது மிகவும் கடினம். “புரிந்ததா?” என்று கேட்பது கற்பித்தலின் முடிவல்ல — புரிந்தது என்று உறுதிசெய்வதே கற்பித்தலின் நிறைவு.
கோட்பாடு 7 — பயிற்சிகளில் 80% வெற்றி விகிதத்தை உறுதிசெய்யுங்கள்
(Obtain a high success rate)
80% — இந்த ஓர் எண் மிக முக்கியமானது.
ரோசென்ஷைனின் ஆய்வில் இது தெளிவாகத் தெரிந்தது: சிறந்த ஆசிரியர்களின் வகுப்புகளில், வழிகாட்டும் பயிற்சியின்போது மாணவர்களின் சரியான பதில் விகிதம் 82% ஆக இருந்தது. குறைவான செயல்திறன் கொண்ட ஆசிரியர்களின் வகுப்பிலோ அது 73% ஆக இருந்தது.
இந்த 9% வித்தியாசம் ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், 80% என்பதே மிகச் சரியான சமநிலை என்கிறார் ரோசென்ஷைன். வெற்றி விகிதம் இதைவிட அதிகமாக இருந்தால், பாடம் மிக எளிமையாக இருக்கிறது என்று அர்த்தம். குறைவாக இருந்தால், மாணவர்கள் தவறுகளையே மீண்டும் மீண்டும் பயிற்சி செய்கிறார்கள் என்று அர்த்தம். அதனால்தான், வெற்றி விகிதம் குறையும்போது சிறந்த ஆசிரியர்கள் உடனடியாக நிறுத்துகிறார்கள் — தொடர்வதில்லை.
இதை உணர்த்த ஒரு நிகழ்வை அவர் குறிப்பிடுகிறார்: ஒரு திறமையான ஆசிரியர் வகுப்பறையில் சுற்றி வரும்போது, மாணவர்கள் தடுமாறுவதைக் கவனிக்கிறார். உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு, “இன்று வீட்டுப்பாடம் வேண்டாம், நாளை மீண்டும் இதைப் பார்ப்போம்” என்கிறார். ஏனெனில், தவறைப் பயிற்சி செய்வது, அந்தத் தவற்றையே மனதில் நிரந்தரமாக்கிவிடும்.
“பயிற்சி ஒருவரை முழுமையாக்கும்; ஆனால் தவறுகளையே பயிற்சி செய்தால் அது பெரும் விபரீதமாகும்.”
கோட்பாடு 8 — கடினமான கற்றல் சவால்களுக்குத் தற்காலிக ஆதரவு வழங்குங்கள்
(Provide scaffolds for difficult tasks)
“இன்னும் கடினமாக முயற்சி செய்” என்று சொல்வது மாணவர்களுக்கு உற்சாகம் தரலாம் — ஆனால் அது சரியான திசையைக் காட்டுவதில்லை.
தற்காலிக ஆதரவு (Scaffolding) என்பது கற்றலுக்கான ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதல். கட்டிடம் கட்டும்போது சாரக்கட்டுகள் தேவை, கட்டிடம் நிலைத்து நின்றதும் அவை நீக்கப்படும் — கற்றலிலும் இதுவே நிகழ வேண்டும். இதை “அறிவுசார் வழிகாட்டுப் பயிற்சி” (Cognitive Apprenticeship) என ரோசென்ஷைன் அழைக்கிறார்.
இந்த ஆதரவு பல வடிவங்களில் அமையலாம்:
- தூண்டுதல் வார்த்தைகளை (யார், ஏன், எப்படி) கொடுப்பது
- சரிபார்ப்புப் பட்டியல்களை (Checklist) வழங்குவது
- ஒரு சிறந்த முன்மாதிரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்வது
- ஆசிரியரே தன் சிந்தனையைச் சத்தமாக வெளிப்படுத்துவது
ரோசென்ஷைனின் மிக முக்கியமான கவனிப்பு இதுதான்: “மாணவர்கள் எங்கே தவறு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அவர்களை எச்சரிப்பதே சிறந்த ஆசிரியரின் அடையாளம்.” தவறு நடக்கும் முன்பே, “இந்த இடத்தில் நிறையப் பேர் தவறு செய்வார்கள், கவனமாக இருங்கள்” என்று அறிவுறுத்துவதே வழிகாட்டுதலின் மிகச் சக்திவாய்ந்த வடிவமாகும்.
கோட்பாடு 9 — சுயாதீனமான பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கண்காணியுங்கள்
(Require and monitor independent practice)
ரோசென்ஷைனின் ஆய்வறிக்கையில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வார்த்தை — “முழுமையான தேர்ச்சி” (Overlearning). ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது வேறு; அதை எந்தத் தயக்கமுமின்றி இயல்பாகப் பயன்படுத்தும் திறன் பெறுவது வேறு. ஒரு கருத்தை இந்த அளவுக்குக் கற்றுத் தேர்ந்தவர், தேர்வறையின் நேர நெருக்கடியிலும் புதிய சூழல்களிலும் அதை எவ்விதச் சிரமமுமின்றிப் பயன்படுத்துவார். இதன்மூலம், மூளையின் செயல்பாட்டு நினைவகத்தில் (Working memory) ஏற்படும் சுமை குறைந்து, புதிய சிந்தனைகளுக்கும் புரிதலுக்கும் தாராளமாக இடம் கிடைக்கிறது.
சுயாதீனப் பயிற்சி என்பது, ஆசிரியரின் வழிகாட்டுதலோடு நடக்கும் பயிற்சியின் நேரடித் தொடர்ச்சியாகவே அமைய வேண்டும். இதற்கான ஒரு துல்லியமான நடைமுறைக் குறிப்பு இதுதான்: ஆசிரியர் வகுப்பறையில் சுற்றி வந்து மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும்; ஆனால், எந்தவொரு மேசையிலும் 30 வினாடிகளுக்கு மேல் நிற்கக் கூடாது. ஒரு மாணவரிடம் நீங்கள் அதிக நேரம் செலவிட நேர்ந்தால், அதற்கு முந்தைய கட்டமான வழிகாட்டுதல் பயிற்சி இன்னும் முழுமையடையவில்லை என்பதே அதன் அர்த்தம். புரிதல் மட்டும் கற்பித்தலின் இலக்கல்ல — தடையற்ற தேர்ச்சியே அதன் உண்மையான நிறைவு.
கோட்பாடு 10 — வாராந்திர மற்றும் மாதாந்திர மீள்பார்வைகளில் மாணவர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்துங்கள்
(Engage students in weekly and monthly review)
முதல் கோட்பாட்டில் தினசரி மீள்பார்வை செய்வதைப் பார்த்தோம் — இது அதன் விரிவான வடிவமாகும்.
ரோசென்ஷைனின் ஆய்வில் இதற்கான ஒரு நடைமுறை அட்டவணையே உள்ளது:
- ஒவ்வொரு திங்கட்கிழமையும் → கடந்த வாரம் கற்றதை மீள்பார்வை செய்வது
- நான்காவது திங்கட்கிழமையில் → கடந்த மாதம் கற்றதை மீள்பார்வை செய்வது
இந்த இடைவெளிகள் ஏன் இவ்வளவு முக்கியம்? அறிவாற்றல் அறிவியலில் நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மை இதுதான்: ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிப்பதைவிட, இடைவெளிவிட்டுத் திரும்பத் திரும்பப் படிப்பது அறிவை நீண்டகால நினைவகத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது. தேர்வுக்கு முந்தைய இரவு மொத்தமாகப் படிப்பது தேர்வு முடிந்தவுடனேயே மறந்துவிடும்; ஆனால் இடைவெளிவிட்டுப் படிப்பது பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும்.
உயர்நிலை வகுப்புகளிலும் இது அற்புதமாகச் செயல்படுகிறது: வாரம் ஒரு சிறு தேர்வு எழுதிய வகுப்புகளின் இறுதித் தேர்வு மதிப்பெண்கள், அரையாண்டு முழுவதும் ஒன்றிரண்டு தேர்வுகள் மட்டுமே எழுதிய வகுப்புகளைவிட மிக அதிகமாக இருந்தன.
“ஒரு நிபுணராக மாறுவதற்கான சிறந்த வழி பயிற்சி மட்டுமே — பல்லாயிரக்கணக்கான மணிநேரப் பயிற்சி.”
“The best way to become an expert is through practice — thousands of hours of practice.”
— Barak Rosenshine
சூத்திரமல்ல — கட்டமைப்பு
இந்தப் பட்டியலை ஒருமுறை படித்துப் பாருங்கள். “இதில் புதிதாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது?” என்று உங்களுக்குத் தோன்றலாம். இதிலுள்ள சில கோட்பாடுகள் நாம் ஏற்கனவே வகுப்பறையில் அன்றாடம் கடைப்பிடிப்பவையாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு ரோசென்ஷைனின் ஆகச்சிறந்த பங்களிப்பு என்னவென்றால் — இந்தக் குறிப்பிட்ட பத்துக் கோட்பாடுகள் மட்டுமே திரும்பத் திரும்பப் பல்வேறு ஆராய்ச்சிகளால் அறிவியல்ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவை என்பதைத் துல்லியமாக நிரூபித்துக் காட்டியதுதான்.
இந்தக் கோட்பாடுகள் எந்தவொரு வெற்றுச் சூத்திரமும் அல்ல; இயந்திரத்தனமான சரிபார்ப்புப் பட்டியலோ (Checklist), அல்லது ஆய்வு அதிகாரிகளுக்காகத் தயாரிக்கப்படும் சம்பிரதாயமான ஆவணமோ அல்ல. இவை அறிவாற்றல் அறிவியல் (Cognitive Science), நேரடி வகுப்பறைக் கண்காணிப்பு மற்றும் விரிவான கற்பித்தல் ஆராய்ச்சி ஆகிய மூன்று மாபெரும் தளங்களிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட ஒரு முழுமையான கட்டமைப்பு. ஒவ்வொரு ஆசிரியரும் தனது வகுப்பறை, தன் மாணவர்களின் திறன், தான் கற்பிக்கும் பாடம் என்ற தனித்துவமான சூழலுக்கு ஏற்ப இவற்றைப் புரிந்துகொண்டு நெகிழ்வுத்தன்மையோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரோசென்ஷைன் தன் ஆய்வறிக்கையில் மிக முக்கியமான ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார் — இந்தக் கோட்பாடுகளை ஆசிரியர்கள் தங்களின் “தொழில்சார் நுண்ணறிவுடன்” (Professional Judgement) அணுக வேண்டும் என்று. அதாவது, இவை உங்களைக் கட்டுப்படுத்தும் கட்டளைகள் அல்ல; மாறாக, கற்பித்தலை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், வகுப்பறையில் அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டுள்ள ஆற்றல்மிக்க கருவிகள்.
நிறைவாக…
இந்த 10 கோட்பாடுகளையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது ஒரு பேருண்மை தெளிவாகிறது: கற்பித்தல் என்பது வெறும் கலை மட்டுமல்ல — அது ஓர் அறிவியலும்கூட. “நான் இப்படித்தான் கற்பிப்பேன்” என்று ஒரு ஆசிரியர் கொள்ளும் சுதந்திரம் மிகவும் மதிப்புமிக்கது. ஆனால், “ஒரு மாணவனின் மூளை எப்படிப் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது என அறிவியல் என்ன சொல்கிறது?” என்ற தேடல் அதனுடன் இணையும்போது, ஆசிரியரின் அந்தச் சுதந்திரம் இன்னும் ஆழமானதாக, ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.
ஒருமுறை மட்டும் விளக்கிவிட்டு, “எல்லாருக்கும் புரிந்ததா?” என்று கேட்பதும் கற்பித்தல்தான் என்று நாம் நினைக்கலாம். ஆனால், கற்றதை மீட்டெடுத்தல், சிறு சிறு படிகளாகக் கற்பித்தல், பாடத்தின் நடுவே புரிதலைச் சோதித்தல், வழிகாட்டுதலுடனான பயிற்சி — இவை அனைத்தும் வகுப்பறையில் ஒருங்கிணைக்கப்படும்போது மட்டுமே, “மாணவர்கள் உண்மையிலேயே கற்கிறார்கள்” என்பது நிஜமாகிறது.
பராக் ரோசென்ஷைனின் (Barak Rosenshine) இந்த ஆய்வறிக்கை வெறும் 9 பக்கங்கள் மட்டுமே கொண்டது. ஆனால், கல்வித்துறையில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கமும் அதன் முக்கியத்துவமும் பல தசாப்தங்களைத் தாண்டியும் நிலைத்து நிற்கும்!
மேலும் படிக்க
- Rosenshine, B. (2012). Principles of Instruction: Research-based strategies that all teachers should know. American Educator, 36(1), 12–19 — eric.ed.gov
- Tom Sherrington — Rosenshine’s Principles in Action (2019), John Catt Educational
- Deans for Impact (2015) — The Science of Learning — deansforimpact.org
