கேள்விகளால் இயங்கும் வகுப்பறை – DQB

“எவ்வளவு கேட்டாலும் ஒரு கேள்வி கூட கேக்க மாட்டேங்குறாங்க…” — அறிவியல் ஆசிரியர்களின் வழக்கமான ஓர் ஏமாற்றம்.

“இவங்க கேக்கற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டே இருந்தா portion முடியுமா?” — அதே ஆசிரியரின் இன்னொரு ஏமாற்றம்.

இரண்டுமே நிஜம். இரண்டுமே ஒரே வகுப்பறையில் பல நேரங்களில் ஒரே ஆசிரியரிடமிருந்து வரும். ஓர் ஆசிரியராக நாம் சந்திக்கும் இரட்டைக் குறுக்கீடு (double bind) இது. இக்கேள்விக்கு உலகெங்கிலும் பல கல்வியாளர்கள் வழங்கிய ஓர் எளிய ஆனால் வலுவான விடைதான் — Driving Question Board (DQB), அதாவது உந்துகேள்விப் பலகை. அது என்ன? வகுப்பறையில் எப்படிப் பயன்படுத்துவது? பாடநூல் வடிவமைப்பில் எவ்வாறு இணைப்பது? — விரிவாகப் பார்ப்போம்.

உந்துகேள்விப் பலகை — மாணவர்களின் கேள்விகளால் நிறைந்த ஒரு வகுப்பறைச் சுவர்

முதலில், ஒரு முரண்பாடு

ஒருபுறம் — மாணவர்கள் கேள்வி கேட்காமல் மௌனமாக அமர்ந்திருப்பது. மறுபுறம் — கேள்விகள் வந்தால், அவற்றுக்குப் பதிலளிக்கப் போதிய நேரம் இல்லாதது. இந்த முரண்பாட்டை — “மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும், ஆனால் அவை portion-ஐத் தடுக்கக் கூடாது” — எப்படிக் கடப்பது? ஒரு வகுப்பின் கேள்விகளை — அவற்றுக்குச் சரியான பதில் கொடுக்காமலேயே — அலகு முழுவதும் உயிரோடு வைத்திருந்து, ஒவ்வொன்றுக்கும் தக்க தருணத்தில் பதில் வரும்படிச் செய்ய முடியுமா?

DQB — ஒரு பார்வையில்

ஒரு பெரிய chart paper, அல்லது வகுப்பறையின் ஒரு சுவர். அதன் மையத்தில் — ஓர் அலகின் ஆரம்பத்தில் ஆசிரியர் காட்டிய ஒரு புதிரான இயற்கை நிகழ்வு (ஒரு படம், ஒரு காணொளியின் screenshot, அல்லது ஒரு வாக்கியம்). அதைச் சுற்றி — மாணவர்கள் sticky notes-ல் எழுதிய நூற்றுக்கணக்கான கேள்விகள், கருத்துப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு. அலகு முடியும் வரை இது அங்கேயே இருக்கும்.

ஒவ்வொரு உப-பாடத்திற்குப் பிறகும் வகுப்பு இங்கே திரும்பும். ஒரு கேள்விக்கு விடை கிடைக்கும்போது, அது குறிக்கப்படும். புதிய கேள்விகள் வந்தால் சேர்க்கப்படும். அதாவது, DQB ஒரு வரைபடம் அல்ல; அது ஓர் உயிருள்ள கருவி.

DQB ஏன் முக்கியம் — OpenSciEd அறிமுக காணொளி (2.5 நிமிடம்):

ஓர் உதாரணம்

8-ம் வகுப்பு வேதியியல் — “உலோகங்கள்-அலோகங்கள்” அலகின் முதல் நாள். ஆசிரியர் ஒரு பழைய சைக்கிள் சக்கரத்தைக் கொண்டு வருகிறார் — துருப்பிடித்து, பழுப்பு நிறமாகி இருக்கிறது. அதன் அருகில் — ஒரு stainless steel டம்ளர், ஒளிரும் வெள்ளியாக. “இரண்டுமே உலோகம். இரண்டுமே பல வருடங்கள் வீட்டில். ஆனால் ஒன்று வீணாகி விட்டது, ஒன்று வீணாகவில்லை. ஏன்?”

வகுப்பறையின் சுவரில் ஒரு பெரிய chart paper. நடுவில் — அந்த இரண்டு பொருட்களின் புகைப்படம், கீழே ஒரே வாக்கியம்: “ஒன்றில் துரு. ஒன்றில் இல்லை. ஏன்?” ஒவ்வொரு மாணவருக்கும் 3 sticky notes. “உங்கள் கேள்விகளை — உங்கள் மொழியில் — எழுதுங்கள்.”

10 நிமிடம். chart paper நிறைகிறது:

“துரு என்றால் என்ன?” · “எல்லா இரும்பும் துருப்பிடிக்குமா?” · “steel-ல் என்ன கலந்திருக்கு?” · “கடற்கரை ஓரம் சைக்கிள் சீக்கிரம் துருபிடிக்குதே ஏன்?” · “paint அடிச்சா ஏன் துருப்பிடிக்காது?” · “நம்ம ரத்தத்துலயும் இரும்பு இருக்குனு சொன்னாங்க — அதுவும் துருப்பிடிக்குமா?”

இந்தக் கேள்விகள் — அடுத்த நான்கு வாரங்களுக்கு — அந்த chart paper-ல் தங்குகின்றன. ஒவ்வொரு உப-பாடத்திற்குப் பின்னும் (ஆக்சிஜனேற்றம், உலோக கலவைகள், அரிமான தடுப்பு), வகுப்பு திரும்பி வரும். ஒரு கேள்விக்கு பதில் கிடைத்தால் — பச்சை குறி, கீழே சிறிய காகிதத்தில் மாணவர்களே எழுதிய விளக்கம். அலகு முடிய, பெரும்பாலான கேள்விகள் — மாணவர்களின் சொந்த சிந்தனையால் — பதிலளிக்கப்பட்டிருக்கும்.

யோசித்துப் பாருங்கள்… கரும்பலகையில் கேள்விகள் — நிமிடங்களில் அழிகின்றன. notebook-ல் கேள்விகள் — பக்கங்களில் புதைகின்றன. DQB-ல் கேள்விகள் — மாணவர்களின் கண்களுக்கு முன்னே, நான்கு வாரம், உயிர்ப்போடு இருக்கின்றன.

“திறவுகோல் நிகழ்வு” — ஒரு சிறு குறிப்பு

மேலே நாம் பார்த்த “துருப்பிடித்தல்” போன்ற — அலகின் தொடக்கத்தில் காட்டப்படும் ஒரு புதிரான இயற்கை நிகழ்வுக்கு உலகளாவிய அறிவியல் கல்வியில் ஒரு பெயர் உண்டு: திறவுகோல் நிகழ்வு (Anchoring Phenomenon). NGSS, OpenSciEd போன்ற நவீன பாடத்திட்டங்களின் முதுகெலும்பு இது. ஓர் அலகு முழுவதையும் ஒரு நங்கூரத்தைப் போல உறுதியாகப் பற்றி வைத்திருக்கும் ஒரு நிகழ்வு. (இதுபற்றி விரிவாக டீச்சர், இதையெல்லாம் ஏன் படிக்கணும்? கட்டுரையில் பேசியிருக்கிறோம்.)

திறவுகோல் நிகழ்வு கேள்விகளை எழுப்புகிறது. உந்துகேள்விப் பலகை அவற்றை அலகு முழுவதற்குமான வரைபடமாக மாற்றுகிறது.

சிறு வரலாறு

இக்கருத்தாக்கம் 1990-களின் இறுதியில் Michigan பல்கலைக்கழகத்தில் — பேராசிரியர் Joseph Krajcik மற்றும் அவரது சகாக்களின் “திட்ட அடிப்படையிலான அறிவியல்” (Project-Based Science) ஆராய்ச்சியில் பிறந்தது. மாணவர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும்போது, “நாம் ஏன் இதைச் செய்கிறோம்?” என்ற மைய நோக்கத்தை மறந்துவிடும் அபாயத்தைக் களைய — Krajcik-ன் குழு “முதன்மை வினா” (Driving Question) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது. பின்னர் Weizman, Shwartz மற்றும் Fortus (2010) ஆகியோர், அந்த முதன்மை வினாவை மாணவர்களின் சொந்தக் கேள்விகளால் கட்டியெழுப்பும் DQB முறையை விரிவாக்கினர். இன்று இது OpenSciEd, IQWST, ML-PBL உள்ளிட்ட பல உலகளாவிய பாடத்திட்டங்களின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது.

ஏன் DQB வேலை செய்கிறது?

DQB-ஐப் பல ஆசிரியர்கள் முதன்முதலில் பார்க்கும்போது, “இது ஒரு அலங்காரப் பலகைதானே?” என்று நினைப்பதுண்டு. ஆனால் அதன் பின்னணியில் — கல்வி உளவியலின் மூன்று வலுவான தத்துவங்கள் ஒன்றுசேர்ந்து செயல்படுகின்றன.

முதலாவது — கட்டமைப்புவாதம் (Constructivism).

Piaget-ம் Dewey-ம் சொன்னபடி, அறிவு என்பது ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு மாற்றப்படும் ஒரு பொருள் அல்ல; கற்பவரே அதைக் கட்டியெழுப்புகிறார். ஒரு மாணவர் தமது சொந்தக் கேள்வியை உருவாக்கி, அதை வகுப்பின் முன் வைக்கும்போது — அக்கேள்வியின் பின்னால் ஒரு “அறிவாற்றல் முரண்பாடு” (Cognitive Dissonance) இருக்கிறது. அவருக்குத் தெரிந்ததற்கும், கண்கூடாகப் பார்ப்பதற்கும் இடையிலான இடைவெளி. அந்த இடைவெளியை நிரப்ப அவர் முயலும் தருணமே — உண்மையான கற்றல் தொடங்கும் தருணம்.

இரண்டாவது — பொருள் உணர்தல் (Sensemaking).

நவீன அறிவியல் கல்வியின் மிக முக்கியமான கலைச்சொல் இது. “X என்றால் என்ன” என்று மனப்பாடம் செய்வதற்கு பதிலாக, “X எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது” என்று காரண-காரியத் தொடர்புகளை ஆராய்வது. Anchoring கட்டுரையில் நாம் பார்த்த NGSS மேற்கோளை இங்கே நினைவுகூர்வது பொருத்தம் — “learning about → figuring out”. DQB இந்த மாற்றத்திற்கான ஒரு வடிவம்.

மூன்றாவது — அறிவார்ந்த முகமைத்துவம் (Epistemic Agency).

“இந்த அலகில் நாம் என்ன கற்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?” — பாரம்பரிய வகுப்பறையில் இக்கேள்விக்கு பதில் ஒரே ஒன்றுதான்: ஆசிரியர், அல்லது பாடத்திட்டக் குழு. ஆனால் DQB-ஆல் இயங்கும் வகுப்பறையில் — மாணவர்களின் கேள்விகளே, ஆசிரியரின் கற்றல் இலக்குகளுடன் இணைந்து, அலகின் ஓட்டத்தை வழிநடத்துகின்றன. “நான் கேட்ட கேள்விக்கு விடை காண்பதற்காகவே இன்றைய ஆய்வு நடக்கிறது” என்ற உணர்வு — ஒரு மாணவரின் கற்றல் ஈடுபாட்டை அடியோடு மாற்றுகிறது.

வகுப்பறையில் DQB — நான்கு படிகள்

மேலே நாம் பார்த்த துருப்பிடித்தல் உதாரணத்தை ஒரு கட்டமைப்பாக மாற்றி, எந்த அலகுக்கும் பொருந்தும் வகையில் நான்கு படிகளாகப் பார்ப்போம்.

படி 1 — கேள்விகளைச் சேகரித்தல்

ஒவ்வொரு மாணவருக்கும் 2-3 sticky notes (அல்லது சாதாரண காகிதத் துண்டுகள்). திறவுகோல் நிகழ்வைப் பற்றிய அவர்களின் கேள்விகளை — அவர்களின் தாய்மொழியிலேயே — எழுதச் சொல்லுங்கள். இது தனிமையாகச் செய்யவேண்டிய வேலை, இரைச்சலான குழு விவாதம் அல்ல. ஒரு கேள்விக்கு ஒரு sticky note. “ஏன், எப்படி, நடந்தால் என்ன” போன்ற காரண-காரியக் கேள்விகளுக்கு முன்னுரிமை — ஆனால் முதலில் வரும் எந்தக் கேள்வியையும் ஊக்குவிக்க வேண்டும்.

படி 2 — விஞ்ஞானிகளின் வட்டம் (Scientists Circle)

மாணவர்கள் தங்கள் இருக்கையிலேயே அமராமல், வகுப்பறையின் மையத்தில் ஒரு வட்டமாக நிற்கின்றனர் (Scientists Circle — OpenSciEd-ன் தனிச்சிறப்பு). முதல் மாணவர் எழுந்து, தம் கேள்வியை வாசித்து, பெரிய chart paper-ல் ஒட்டுகிறார். பின்னர் கேட்கிறார்: “இதே போன்ற கேள்வி யாருக்காவது இருக்கிறதா?” இரண்டாமவர் வந்து, தம் கேள்வியை — முதலாவதன் அருகிலேயே ஒட்டுகிறார். மூன்றாமவர் வேறொரு கருத்தைச் சார்ந்த கேள்வியைக் கொண்டு வருகிறார் — அவர் வேறு பகுதியில் தொடங்குகிறார்.

இரு வேறு வகுப்பறைகளில் DQB உருவாக்கப்படும் காட்சி (OpenSciEd Montage):

படி 3 — கேள்விகளைக் குழுப்படுத்தல்

அனைத்துக் கேள்விகளும் ஒட்டப்பட்டபின், மாணவர்களின் உதவியோடு அவற்றைப் பெரிய கருத்துப் பிரிவுகளாக ஆசிரியர் வகைப்படுத்துகிறார். உதாரணமாக, ஒளி தொடர்பான ஓர் அலகில்: “ஒளி எப்படிப் பயணிக்கிறது?”, “ஒளி பொருட்களோடு எப்படி வினைபுரிகிறது?”, “நிறங்கள் எப்படி உருவாகின்றன?” — இப்படி.

இங்கே ஆசிரியர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வகைப்பாடு என்பது அலகின் கற்றல் இலக்குகளை நோக்கி கேள்விகளை மெதுவாக நெறிப்படுத்தும் வேலை — ஆனால் மாணவர்களின் சிந்தனையை ஒடுக்கும் வேலை அல்ல. “இந்தக் கேள்வி தவறு” என்று எதையும் ஒதுக்கக்கூடாது. “இந்த இரண்டு கேள்விகளும் ஒரே விஷயத்தைப் பற்றி பேசுகின்றனவா?” என்று கேட்டு, மாணவர்களே வகைப்படுத்த வைப்பதே சிறந்த உத்தி.

படி 4 — DQB-ஐ உயிரோடு வைத்தல்

இதுதான் DQB-ஐ ஓர் வெறும் “தொடக்க நாள் செயல்பாடாக” மட்டும் இருந்துவிடாமல், அலகு முழுவதற்கும் தொடரும் ஓர் உயிரோட்டமான கருவியாக மாற்றும் முக்கியமான படி. ஒவ்வொரு உப-பாடத்தின் தொடக்கத்திலும், ஆசிரியர் DQB-ஐச் சுட்டிக்காட்டி கேட்கிறார்: “நாம் இந்த வாரம் எந்தக் கேள்விக்கு விடை தேடப்போகிறோம்?” உப-பாடத்தின் முடிவில் மீண்டும் — “இன்றைய ஆய்வின் மூலம் DQB-வின் எந்தப் பகுதிக்கு விடை கிடைத்தது?” விடை கிடைத்த கேள்விகளில் ஒரு பச்சைப் புள்ளி, அல்லது அதன் கீழே ஒரு சிறிய காகிதத்தில் கண்டறிந்த விடை. புதிய கேள்விகள் எழுந்தால் — அவை DQB-ல் சேர்க்கப்படுகின்றன.

இது மாணவர்களின் புரிதல் வளர்ச்சியை அலகு முழுவதும் கண்கூடாகக் கண்காணிக்கும் ஒரு வளரறி மதிப்பீட்டுக் (Formative Assessment) கருவி.

DQB நான்கு படிகள் — visual infographic

பாடநூல் வடிவமைப்பாளர்கள் கவனிக்க வேண்டியவை

DQB-ஐ ஒரு வகுப்பறைப் பழக்கமாக மட்டும் வைத்தால் போதாது — பாடநூலே அதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். சில பரிந்துரைகள்:

முதலாவது — அலகின் தொடக்கப் பக்கத்தில் DQB-க்கான இடம். திறவுகோல் நிகழ்வைத் தொடர்ந்து, “இந்த அலகின் உந்துகேள்விப் பலகை” என்ற தலைப்பில் ஒரு வெற்றுப் பெட்டி. அதில் சில மாதிரிக் கேள்விகள் — மாணவர்கள் தங்கள் கேள்விகளை இங்கே சேர்த்துக்கொள்ளலாம் என்ற அழைப்போடு.

இரண்டாவது — “நல்ல கேள்வி எப்படி இருக்கும்?” என்ற பயிற்சிப் பக்கம். “இது என்ன?” (வரையறை சார்ந்த கேள்வி) என்பதற்கும், “இது ஏன் இப்படி நடக்கிறது?” (காரண-காரியக் கேள்வி) என்பதற்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்ப அலகுகளில் இதற்கான சில வழிகாட்டுதல்கள் இருந்தால் — பின்னர் வரும் அலகுகளில் மாணவர்களின் கேள்விகள் ஆழமாக இருக்கும்.

மூன்றாவது — ஒவ்வொரு உப-பாடத்தின் முடிவிலும் ஓர் “திரும்பப் பார்த்தல்” பெட்டி. “இப்போது நாம் கற்றதிலிருந்து, DQB-வின் எந்தக் கேள்விக்கு விடை கிடைத்திருக்கலாம்? இன்னும் என்ன கேள்விகள் மிச்சமுள்ளன?” இது கற்றலைத் துண்டாடாமல், ஓர் தொடர்ச்சியான கதையாக மாற்றுகிறது.

நான்காவது — ஆசிரியர் கையேட்டில் “எதிர்பார்க்கப்படும் கேள்விகள்” பகுதி. Nuffield அறக்கட்டளை 1960-களிலேயே எட்டு இயக்கங்கள் கட்டுரையில் நாம் பார்த்த — “ஆசிரியர் கையேடு” கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தது. இன்று DQB-ஐ இணைத்தால், அந்தக் கையேடு இன்னும் வளமாகும். “இந்த நிகழ்வை மாணவர்கள் பார்த்தால், சாதாரணமாக இவ்வகையான கேள்விகள் வரும்… சில மாணவர்கள் இப்படியும் கேட்கலாம் (சாத்தியமான தவறான புரிதல்கள்)… ஆசிரியர் கவனிக்க வேண்டிய நுட்பமான இடங்கள் இவை.”

ஐந்தாவது — மாணவர் தாய்மொழியில் எழுதும் சுதந்திரம். ஆங்கில வழிப் பள்ளிகளில் கூட — DQB-ல் கேள்வியை ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்ற கட்டாயம் கூடாது. ஒரு மாணவர் தமது சிந்தனையை எந்த மொழியில் தெளிவாக வெளிப்படுத்த முடியுமோ — அந்த மொழியிலேயே அவரது கேள்வி DQB-க்கு வரும். இது அறிவியலையும் மொழியையும் ஒன்றோடொன்று இணைக்கும் ஓர் இயல்பான பாலம்.

DQB-யின் டிஜிட்டல் வடிவங்கள்

இதுவரை நாம் பேசியது chart paper, sticky notes போன்ற பௌதிக DQB பற்றி. ஆனால் DQB என்பது ஒரு கருத்தாக்கம் — அதன் பௌதிக வடிவம் கட்டாயமல்ல. அதே கருவியை ஒரு டிஜிட்டல் பலகையாகவும் உருவாக்க முடியும் — ஒரு Padlet wall, ஒரு Miro board, ஒரு FigJam canvas.

இரண்டுக்கும் இடையே — ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில உள்ளார்ந்த வேறுபாடுகள் உள்ளன.

பௌதிகப் பலகையின் முதல் வலிமை அதன் நிலைத்தன்மை. அது வகுப்பறைச் சுவரில் தொடர்ந்து தெரிகிறது — ஆசிரியரோ மாணவர்களோ தனியாக ஒரு அமர்வு திறந்து பார்க்க வேண்டியதில்லை. வகுப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும், கேள்விகள் கண்களின் முன்னே. மேலும், மாணவர்கள் எழுந்து சென்று காகிதங்களை ஒட்டுவது, விஞ்ஞானிகளின் வட்டத்தில் கூடுவது போன்ற உடல் இயக்கங்கள் — கற்றலில் ஓர் கூடுதல் ஈடுபாட்டையும், சக மாணவர் உறவையும் தருகின்றன. இணையம் தேவையில்லை; சாதனங்கள் தேவையில்லை. எளிமையான வகுப்பறைக்கு chart paper, sticky notes (அல்லது வண்ணக் காகிதத் துண்டுகள் + masking tape) — இவையே போதுமானவை.

இதன் முக்கிய சவால் — இடம். ஒரே வகுப்பறையை A, B, C பிரிவுகள் பகிர்ந்துகொள்ளும்போது, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரே சுவரில் தனித்தனிப் பலகை வைப்பது சாத்தியமில்லை. இதற்கு OpenSciEd ஓர் எளிய தீர்வைப் பரிந்துரைக்கிறது — பல chart papers ஒரு ring clip-ல் தொங்கவிட்டு, பிரிவுக்கு ஏற்றபடி புரட்டிப் பயன்படுத்துவது.

டிஜிட்டல் DQB-ன் வலிமை என்னவெனில், அதற்கான இடம் எல்லையற்றது — பல நூறு கேள்விகள் வந்தாலும் இடமளிக்க முடியும். மாணவர்கள் வீட்டிலிருந்தும் கேள்விகளைச் சேர்க்கலாம். கூச்ச சுபாவம் உள்ள மாணவர்கள் — வகுப்பறையில் பலர் முன்னே மாணவர்கள் எழுந்து செல்ல தயங்குபவர்கள் — டிஜிட்டல் வடிவிலோ அநாமதேயமாக கேள்விகளைப் பதிவு செய்ய முடியும். ஆனால் இதன் பலவீனம் — அந்தப் பலகை கண்களின் முன்னே இல்லை. ஆசிரியர் தினமும் திறந்து காட்டாவிடில் அது மறந்துவிடப்படும். உடல் இயக்கம், சக மாணவர் ஊடாடல் ஆகியவையும் குறையும். இணையம், டிஜிட்டல் சாதனங்கள் — இவையும் தேவை.

தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கருவிகளில் — Padlet மிக எளிமையானது, நடுநிலைப் பள்ளிக்குப் பொருத்தமானது; FigJam கூட்டு வாக்களிப்பு (voting) வசதியுடன் ஓரளவு அதிகக் கட்டமைப்பு கொண்டது.

பொதுவாக — பௌதிகப் பலகையே ideal. டிஜிட்டல் பதிப்பை ஒரு நிரப்பியாக (உதாரணமாக, மாணவர்கள் வீட்டில் இருந்து சேர்க்கும் கேள்விகளை அடுத்த நாள் வகுப்பில் chart paper-ல் ஒட்டுவது) பயன்படுத்தலாம் — ஆனால் முதன்மைக் கருவியாக chart paper-ஐ விட்டு நகர்வது நமது சூழலில் ஓர் தேவையற்ற சிக்கல்.

ஒரு சிறு குறிப்பு

ஆரம்பப் பள்ளிகளில் சிலர் பயன்படுத்தும் KWL Chart (Know / Wonder / Learned) முறையை அறிந்த ஆசிரியர்கள் — DQB-ஐ அதன் ஒரு வடிவமாகக் கருதலாம். வெளிப்பார்வையில் ஒற்றுமை இருந்தாலும், இரண்டும் வேறு கருவிகள். KWL ஒரு பாடத்தின் தொடக்கம், முடிவில் நிரப்பப்படும் ஓர் அட்டவணை. DQB அலகு முழுவதும் தொடர்ந்து வளரும், மாணவர்களின் சொந்த ஆய்வால் உயிர்ப்பு பெறும் ஓர் கருவி

சவால்களும், எச்சரிக்கைகளும்

முதலாவது — அலங்காரக் கண்ணியில் விழாமை.

சில வகுப்பறைகளில் DQB ஒரு “அழகு பலகை” ஆகிவிடுகிறது — sticky notes ஒட்டப்பட்ட பின் யாரும் அதைத் திரும்பப் பார்ப்பதில்லை. DQB-ன் வலிமை அதன் மறுபடியும்-மறுபடியும் பயன்படுத்தும் தன்மையில்தான் இருக்கிறது — அதை ஒவ்வொரு வகுப்பிலும் சுட்டிக்காட்ட வேண்டும், அதைத் திருத்த வேண்டும், அதை வளர்க்க வேண்டும்.

இரண்டாவது — பாடத்திட்ட நேர அழுத்தம்.

ஒரு திறவுகோல் நிகழ்வையும் DQB-யையும் கட்டியெழுப்ப ஒரு முழு வகுப்பு நேரம் தேவைப்படும். “இவ்வளவு நேரத்தைச் செலவிட்டால் portion-ஐ எப்படி முடிப்பது?” என்ற கவலை இயல்பானது. ஆனால் தொடரும் வாரங்களில் கற்றலின் ஆழம் — இந்த ஆரம்ப முதலீட்டுக்கு பல மடங்கு பயன் தரும். Anchoring கட்டுரையில் இது குறித்து விரிவாகப் பார்த்தோம்.

மூன்றாவது — ஆசிரியரின் “எல்லாம் தெரிந்தவர்” அடையாளத்தை விட்டுக்கொடுத்தல்.

இது மிக முக்கியமான மனநிலை மாற்றம். “எனக்கும் இதற்கு உடனடி பதில் தெரியாது — நாம் ஒன்றாகக் கண்டுபிடிப்போம்” என்று சொல்லும் ஆசிரியர், மாணவர்கள் முன் தனது நிலையை இழக்கவில்லை — மாறாக, ஓர் உண்மையான விஞ்ஞானியின் மனநிலையை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கிறார். அறிவியல் பிறப்பதே — “எனக்குத் தெரியவில்லை” என்ற நேர்மையில் இருந்துதான்.

நிறைவாக…

இந்தத் தொடரின் மூன்று கட்டுரைகளும் — அறியாமலேயே — ஒரு பாதையை வரைந்துகொண்டிருக்கின்றன:

ஒரு வகுப்பறையில் ஒரே நேரத்தில் 40 மாணவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் கற்க மாட்டார்கள். ஒரு மாணவர் ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று, மற்றொரு மாணவருக்கு அலகின் கடைசிப் பகுதியில்தான் தெளிவாகும். DQB-ன் அழகு என்னவென்றால் — அது ஒவ்வொரு மாணவரின் வேகத்திற்கும் இடம் கொடுக்கிறது. ஒருவரின் கேள்வி இன்னொருவருக்கு பாதையாக மாறுகிறது.

ஓர் அலகு முடிந்தவுடன், நமது DQB-ஐ ஒரு புகைப்படம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் படத்தில் தெரிவது வெறும் sticky notes அல்ல — அது ஒரு வகுப்பின் கூட்டுச் சிந்தனையின் வரைபடம். யாரோ ஒரு மாணவியின் கேள்வி, யாரோ ஒரு மாணவனின் சிந்தனைக்கு தூண்டுகோலாக மாறிய கதை. ஒரு கேள்வியில் தொடங்கி, பல கேள்விகளால் வளர்ந்த ஒரு கற்றலின் சாட்சி.

ஒரு நல்ல அறிவியல் வகுப்பறை — எல்லா பதில்களும் இருக்கும் இடம் அல்ல; நல்ல கேள்விகள் உயிரோடு இருக்கும் இடம்.

மேலும் படிக்க (Further Reading)


இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளையும், உங்கள் வகுப்பறை அனுபவங்களையும் கீழே பகிருங்கள். தொடர்ந்து பேசுவோம்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top