NCERT Curiosity Assessment Section Analysis — ஒரு தேசியப் பாடநூலின் 378 வினாக்களைப் பின்னோக்கிப் படித்து, அதன் மூலக்குறிப்புகளை மீட்டெடுத்தபோது…
ஒரு பாடநூலின் மதிப்பீட்டுப் பகுதி பொதுவாக என்ன செய்கிறது?
கேட்கிறது.
ஆம். கேட்கிறது…
முப்பது வினாக்களைப் பட்டியலிட்டுக் குழந்தையின் முன் வைக்கிறது. நூல் வினவுகிறது; குழந்தை பதிலளிக்கிறது. குழந்தையின் வேலை விடை தருவது மட்டுமே.
இது ஓர் உரையாடல் அல்ல; ஒரு விசாரணை.
ஆனால் NCERT 2025 இல் வெளியிட்ட எட்டாம் வகுப்பு கியூரியாசிட்டி (அறிவியல் பாட) நூலின் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் ஒரு சிறிய கட்டம் இருக்கிறது. அதில் வினா இல்லை. வெற்று கோடுகள் மட்டும். மேலே ஒரு வாக்கியம்: “இதுவரை நீ கற்றவற்றின் அடிப்படையில் சில கேள்விகளைத் தயாரிக்க…”

இந்த தருணத்தில் இதுவரையிலான பயணத்தின் திசை தலைகீழாகிறது.
ஒரு நிமிடம் அக்கட்டத்தின் முன் நிற்போம். ஒரு குழந்தை அதை நிரப்ப வேண்டுமெனில் என்னென்ன செய்திருக்க வேண்டும்?
பாடத்தை மனதில் மீண்டும் ஓட்டிப் பார்க்க வேண்டும். அதில் எவை முக்கியக் கருத்துக்கள் என்று தானே முடிவு செய்ய வேண்டும். மேலும் – கேட்பதற்காக கேள்விகள் மனதில் எழ வேண்டும்.
மனப்பாடம் செய்த குழந்தையால் இக்கட்டத்தை நிரப்ப முடியாது. மனனம் செய்யும் குழந்தையிடம் முப்பது தகவல்கள் இருக்கின்றனவே தவிர, ஒரு கேள்விகூட இல்லை.
ஓர் உரையாடல் என்பது என்ன? இரு தரப்பும் கேட்க வேண்டும். ஒருவர் மட்டும் கேட்டு மற்றவர் பதிலளித்தால் அது வேறு ஏதோ ஒன்று – வகுப்பறையில் நாம் அதைத் தினமும் பார்க்கிறோம்.
நமது கேள்விகளுடன் குழந்தையின் கேள்விகளும் கலக்கும்போதுதான் அது உரையாடலாகிறது.
இதை ஒரு கொள்கை வாக்கியமாகச் சொல்வது எளிது. ஆனால் இந்நூல்கள் அதைச் சொல்லவில்லை; அதற்கு அச்சில் ஓர் இடத்தை ஒதுக்கியிருக்கின்றன. ஒரு பாடத்தில் அல்ல – பன்னிரண்டு பாடங்களிலும், ஒரே வடிவத்தில், ஒரே இடத்தில்.
அக்கட்டத்திற்கு மதிப்பெண் இல்லை. இதுவும் ஒரு முடிவு, மேலும் மிகக் கவனமான ஒன்று. மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டால், மறுகணம் குழந்தை வேறொரு கேள்வியைக் கேட்கத் தொடங்கும் – எது நமக்கு அதிக மதிப்பெண் பெற்றுத் தரும்? ஆசிரியர் எதிர்பார்க்கும் கேள்வி எது? அத்தருணத்தில் உரையாடல் முடிந்து, மீண்டும் விசாரணை தொடங்கிவிடும்.
வகுப்பு 8-ல் இன்னொன்றும் மாறுகிறது. வகுப்பு 6, 7-ல் மதிப்பீட்டுப் பகுதியின் பெயர் Let us enhance our learning – நமது கற்றலை மேம்படுத்துவோம். வகுப்பு 8-ல் அது Keep the curiosity alive – ஆர்வத்தை உயிர்ப்புடன் வையுங்கள்.
நடுநிலைப் பள்ளியின் கடைசி ஆண்டு. அடுத்து உயர்நிலையில் பாடம் கனக்கிறது, மதிப்பெண் முக்கியமாகிறது, “எனக்கு அறிவியல் ஒத்துவராது” என்று சொல்லக் கற்றுக்கொள்ளும் காலமும் அதுவே.
அவ்விடத்தில் ஒரு பாடநூல் “அடுத்த வகுப்புக்குத் தயாராகு” என்று சொல்லியிருக்கலாம். அது வேறொன்றைச் சொல்கிறது.
ஒரு சொல் மாறுவதும், ஒரு கட்டம் காலியாக இருப்பதும் சிறு விஷயங்கள் போலத் தோன்றலாம். ஆனால் அதற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டும்.
எங்கோ ஓர் இடத்தில் இந்த வழிகாட்டுதல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஏதோ ஒரு காகிதத்தில் இவை எழுதப்பட்டு அல்லது தட்டச்சு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அக்காகிதம் வெளியிடப்படவில்லை; அது பொது வெளிக்கானதில்லை… நாம் அதைப் பார்க்கவில்லை.
ஆனால் ஊகிப்பதற்குப் போதுமான தடயங்கள் நம் முன்னால் திறந்து கிடக்கின்றன.
இக்கட்டுரையில் வரும் “விதிகள்” அக்காகிதத்திலிருந்து நகலெடுக்கப்பட்டவை அல்ல – அந்த வழிகாட்டுதல்கள் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. இவை நூலின் அமைப்பிலிருந்து ஊகிக்கப்பட்டவை. அதை முதலிலேயே சொல்லிவிடுவது நேர்மை.

இந்த ஆய்வு எப்படிச் செய்யப்பட்டது
NCERT-ன் Curiosity வகுப்பு 6, 7, 8 நூல்களின் 34 பாடமுடிவு மதிப்பீட்டுப் பகுதிகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டன.
அலகு: நூலின் சொந்த எண்ணிடலின்படி ஒரு வினா. மொத்தம் 378. (உருப்படி முறையில் – ஒவ்வொரு வெற்றிடமும், ஒவ்வொரு பொருத்துக ஜோடியும் தனியாக — எண்ணினால் எண்கள் முற்றிலும் வேறாக இருக்கும்.)
சேர்க்கப்படாதவை: பாடத்திற்குள் வரும் வினாக்கள், செயல்பாட்டுப் பெட்டிகள்.
தனியாக: மதிப்பீட்டுக்குப் பின் வரும் 160 நீட்சிப் பணிகள்.
ஒவ்வொரு வினாவும் அதன் அடிப்படையில் குறியிடப்பட்டது. புளூமின் வகைப்பாட்டின் படியும், TIMSS, PARAKH வழிகாட்டுதல்களின் படியும் வகைப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.
முதல் தடயம்
ஒரு பாடத்தில் எத்தனை வினாக்கள்? மிகவும் எளிமையான, அப்பாவியான கேள்வி. மூன்று வகுப்புகளையும் தனித்தனியே அடுக்கியபோது:
| வகுப்பு | வரம்பு | சிதறல் |
|---|---|---|
| 6 | 9 – 16 | 2.06 |
| 7 | 10 – 12 | 0.90 |
| 8 | 9 – 13 | 1.26 |
வகுப்பு 7-ன் பதினொரு பாடங்களிலும் வினா எண்ணிக்கை பத்து, பதினொன்று அல்லது பன்னிரண்டு. வேறெதுவும் இல்லை.
வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு நகரங்களில் எழுதிய பதினொரு பாடங்கள் தற்செயலாக மூன்று எண்களுக்குள் நின்றுவிட வாய்ப்பில்லை அல்லவா?. நிச்சயமாக ஏதோ வழிகாட்டுதல்கள் இருந்திருக்க வேண்டும்.
எங்கோ இந்த எண்ணிக்கை எழுதப்பட்டிருக்கிறது. அது முதல் வரியாகக் கூட இருக்கலாம்.
ஒரு வரி கிடைத்துவிட்டது. மீதியைத் தேடலாம். ஆனால் தேடுவதற்கு முன் ஒரு கேள்வி: எண்ணிக்கை ஒரு புறமிருக்கட்டும்…. அந்தக் காகிதத்தில் இருப்பவை சரியானவையா? சிறப்பானவையா? என்று எப்படித் தீர்மானிப்பது?
அளவுகோல்
அதற்கு ஓர் எண்ணிக்கையும் அளவுகோலும் இருக்கிறது.
NEP 2020-ன் அடிப்படையில் NCERT-இல் உருவாக்கப்பட்ட PARAKH ( Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development ),அறிவியல் வினாத்தாளுக்கு ஓர் ஒதுக்கீட்டைத் தருகிறது:
Know 17.5%, Understand 17.5%, Apply 35%, Analyse 22%, Evaluate 4%, Create 4%.
இவற்றை மூன்றாகக் கூட்டினால் 35 : 35 : 30 = இது சர்வதேச அளவிலான கணித மற்றும் அறிவியல் கல்வி மதிப்பீட்டு முறையான TIMSS-இன் Knowing : Applying : Reasoning விகிதம்.
இது வெறும் ஏதேச்சையான ஒற்றுமை அல்ல; இரண்டும் ஒரே அறிவாற்றல் சமநிலையை நோக்கி வடிவமைக்கப்பட்டவையாக உள்ளன. அதாவது நமது தேசியத் தரநிலையான PARAKH வேண்டுமென்றே, சர்வதேச தரநிலைக்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடநூல் குழுவுக்கு இதன் பொருள் நேரடியானது: தேசியத் தரத்திற்கும் சர்வதேசத் தரத்திற்கும் இடையே தேர்ந்தெடுப்புக் குழப்பமேதுமில்லை. இரண்டும் ஒன்றே…
மேலும், இரு ஆவணங்களும் இதே திசையில்தான் பயணிக்கின்றன.
முழுமை முன்னேற்ற அட்டை: வகுப்புகள் 6, 7 மற்றும் 8-க்கு முறையே 37, 47, 56 எனத் தரப் புள்ளிகளை இது ஒதுக்குகிறது; அதாவது மொத்த மதிப்பீட்டில் 70%. ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த ஆண்டுச் சாதனையில், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலானவை இனி தேர்வு அறைகளில் அளக்கப்படப் போவதில்லை என்பதே இதன் பொருள்.
CBSE வினாத்தாள் அமைப்பு: 50% திறன் அடிப்படை, 20% கொள்குறி வகை (MCQ), 30% விவரணம் (Descriptive) என இதன் கட்டமைப்பு மாறியுள்ளது. CBSE-இல் இது 9-ஆம் வகுப்பு முதலும், பல மாநிலங்களில் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்விலும் தொடங்குகிறது. செயல்பாட்டிற்குக் கொண்டுவரும் காலவரிசை வெவ்வேறாக இருக்கலாம்; ஆயினும் பயணத்தின் திசை ஒன்றே — மனப்பாடத்தை மையமாகக் கொண்ட மதிப்பீட்டிலிருந்து, கருத்துப் புரிதல், பயன்பாடு மற்றும் திறன்களை மையமாகக் கொண்ட மதிப்பீட்டை நோக்கி கல்வி முறை வேகமாக நகர்கிறது.
இப்போது அப்பக்கத்திற்குத் திரும்புவோம். ஆனால் இப்போது ஒரு வேறுபட்ட கேள்வியுடன்: இப்பக்கம் அந்தக் குழந்தையை எப்படி எதிர்கொள்கிறது?
குழந்தை இருக்கும் இடத்திலேயே குழந்தையைச் சந்திக்கிறது
ஒவ்வொரு மதிப்பீட்டுப் பகுதியையும் மூன்று சம பகுதிகளாகப் பிரித்தோம். மரபு வடிவ வினாக்கள் (அதாவது சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடங்கள், பொருத்துக, சரியா தவறா போன்ற வினாக்கள்) முதல் மூன்றில் ஒரு பகுகியில் 30%; அதன் பிறகு 4%. படைப்பு வினாக்கள் தொடக்கத்தில் பூஜ்யம்; இறுதியில் 10%.
இவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மாறுதல் நமக்குச் சொல்வதென்ன? . வகுப்பில் மிகவும் பின்தங்கிய குழந்தைகூட முதல் வினாவை எழுதி முடிக்க வேண்டும். காலியான விடைத்தாளுடனும், அழுத மனதுடனும் ஒரு குழந்தை அப்பாடத்திலிருந்து வெளியேறக் கூடாது. அதே சமயம், வேகமாக முடிக்கும் குழந்தைக்கு இறுதியில் ஒரு சுவர் இருக்க வேண்டும்; ஏற முடியாத ஒன்று அல்ல, ஏற வேண்டிய ஒன்று.
மதிப்பீட்டுப் பக்கம் எல்லாக் குழந்தைகளையும் ஒரே இடத்தில் சந்திக்கவில்லை.
குழந்தைக்கு ஒரு முகம் கிடைக்கிறது
முப்பத்து நான்கு பாடங்களில் முப்பதில் பெயருடன் கூடிய குழந்தைகள் வருகின்றன. நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள்: மனு, ரேஷ்மா, கௌரவ், ஆனந்தி, வைஷ்ணவி, அதர்வ், வித்யுத், ஜோதி, நந்தினி, தஸ்னீம், மேரி, பேட்ரிக், காஸிமா.
ஒளியியல் பாடத்தில் ஒரு குழாய் வழியாக மெழுகுவர்த்தியைப் பார்க்க முயல்பவர்கள் நால்வர்: சாஹில், ரேகா, பேட்ரிக், காஸிமா. ஒரு வினாவின் நான்கு பெயர்கள் ஒரு நாட்டின் பன்முக்தன்மையையே ஒரு வினாவினுள் காண்பிக்க முயற்சிக்கப்பட்டிருக்கிறது.
வகுப்பு 7-ன் வளரிளம் பருவ பாடத்தில் ஒரு வினா:
மேரிக்கும் மனோஜுக்கும் ஒரே வகுப்பு. பதினொரு வயதில் மேரியின் கழுத்தின் முன்பகுதியில் ஒரு சிறு வீக்கம். மருத்துவர் மருந்து கொடுத்து, அயோடின் நிறைந்த உணவு உண்ணச் சொல்கிறார். பன்னிரண்டு வயதில் மனோஜுக்கும் அதே இடத்தில் ஒரு புடைப்பு. ஆனால் மருத்துவர் அது வளர்ச்சியின் ஒரு பகுதி என்கிறார். ஏன் இரு வேறு அறிவுரை?
ஒரே அறிகுறி, இரு வேறு காரணங்கள். குழந்தை வேறுபடுத்தி அறிய வேண்டும். “தைராய்டு சுரப்பியின் பணி என்ன?” என்ற வினாவும் இதே கருத்தையே தொடுகிறது. ஆனால் இங்கே இரு உண்மையான குழந்தைகள், இரு மருத்துவர்களின் அறைகளில்.
வகுப்பு 6-ன் “உணவும் உடல்நலமும்” பாடத்தில் பதின்மூன்று வினாக்கள் உள்ளன. ஒரு விருப்பத் தேர்வோ, கோடிட்ட இடமோ, பொருத்துகவோ கூட இல்லை.
அதற்குப் பதிலாக மேது காய்கறி சாப்பிடுவதில்லை; அவனுக்கு வயிற்று உபாதை. ரேஷ்மாவுக்கு மங்கிய வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமம். கௌரவின் காலில் எலும்பு முறிவு; முதல் நாள் கால்சியம், இரண்டாம் நாள் வைட்டமின் D. ஏன்?
வார்த்தைகளைத் தாண்டி பேசும் வழி
378 வினாக்களில் 75 வினாக்கள் ஒரு படத்தையோ, வரைபடத்தையோ தாங்கியிருக்கின்றன.
வார்த்தைகளால் சிந்திக்கும் குழந்தையும் உண்டு; படங்களால் சிந்திக்கும் குழந்தையும் உண்டு. ஒரு மதிப்பீட்டுப் பகுதி முழுவதும் உரைநடையாக மட்டும் இருந்தால், அது ஒரு வகைக் குழந்தையை அமைதியாக வெளியே நிறுத்துகிறது.
அக்குழந்தை “எனக்குப் புரியவில்லை” என்று சொல்வதில்லை; மெதுவாகப் பின்வாங்குகிறது. சில ஆண்டுகளில் “எனக்கு அறிவியல் ஒத்துவராது” என்று சொல்லவும் கற்றுக்கொள்கிறது. அக்குழந்தைக்கு அறிவியல் ஒத்துவராமல் இல்லை; பக்கங்கள் அக்குழந்தைக்கான மொழியில் பேசவில்லை.
கருவி இல்லா சூழலில்…
இது ஒரு சிறிய வடிவம், ஆனால் மிக அழகானது. ஆறு வினாக்கள், நான்கு பாடங்களில். ஒவ்வொன்றிலும் ஒரு கருவி வேண்டுமென்றே பறிக்கப்படுகிறது.
- ரேஷ்மா மூன்று ஒரே மாதிரியான உலோகக் கம்பிகளை வாங்குகிறாள். இரண்டு காந்தங்கள், ஒன்று வெறும் இரும்பு. வேறெந்தப் பொருளையும் பயன்படுத்தாமல் எப்படிக் கண்டறிவாள்?
- ஒரு சட்டக் காந்தத்தில் துருவக் குறியீடுகள் இல்லை. இன்னொரு காந்தம் இல்லாமல் வடதுருவம் எது என எவ்வாறு கண்டறிவாய்?
- வினிகர், சமையல் சோடா, சர்க்கரைக் கரைசல் மூன்றும் தரப்படுகின்றன. மஞ்சள் தடவிய காகிதத்தை மட்டும் வைத்து இவற்றை அடையாளம் காண முடியுமா?
- தஸ்னீம் ஒரு மீட்டர் அளவுகோல் செய்ய விரும்புகிறாள். பிளைவுட், காகிதம், துணி, இழுவைத் தன்மையுள்ள ரப்பர், எஃகு. இவற்றுள் எதை அவள் பயன்படுத்தக் கூடாது, ஏன்?
- இந்த விலங்குகளை இரு குழுக்களாகப் பிரி. ஆனால் பாடத்தில் விவாதிக்கப்பட்ட பண்புகளைத் தவிர வேறு ஏதேனுமொரு பண்பின் அடிப்படையில்.
அக்கடைசி வினாவை மீண்டும் படியுங்கள். பாடநூல் தன் சொந்த வகைப்பாடுகளையே மாணவனைப் பின்பற்றாதே எனக் கூறும் போது, நினைவுகூர்தல் அங்கே பயனற்றது.
தஸ்னீமின் வினாவும் தலைகீழானது. “எதைப் பயன்படுத்துவாய்?” அல்ல, “எதைப் பயன்படுத்தக் கூடாது?” இழுவைத் தன்மையுள்ள ரப்பர் என்ற ஒரு சொல்லில்தான் முழு விடையும் இருக்கிறது. அளவுகோல் என்பது நீளத்தை அளப்பது அல்ல; நீளம் மாறாமல் இருப்பது.
மூச்சு விடுவதற்கு ஓர் இடம்
வானியல் பாடத்தின் இரண்டாவது வினா:
என் முதல் எழுத்து MAN-ல் உண்டு, CAN-ல் இல்லை. இரண்டாவது ACE-லும் FAN-லும் உண்டு. மூன்றாவது RAT-ல் உண்டு, CAT-ல் இல்லை. நான்காவது SUN-ல் உண்டு, FUN-ல் இல்லை. நான் சூரியனைச் சுற்றும் ஒரு கோள்.
விடை MARS. இது ஒரு விளையாட்டு. ஆனால் அதே வினாவின் இரண்டாம் பகுதி:
இதுபோல் இரு புதிர்களை நீயே உருவாக்கு.
விளையாடு, பிறகு விளையாட்டையே உருவாக்கு. அதே பாடத்தின் கடைசி வினா:
இரவு வானத்தைப் பற்றி யோசித்து ஒரு கவிதை அல்லது கதை எழுது.
ஓர் அறிவியல் மதிப்பீட்டுப் பகுதியில் ஒரு கவிதை. இது வழிதவறல் அல்ல. ஒரு மதிப்பீட்டுப் பக்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தால் குழந்தை களைத்துவிடுகிறது. புதிரும் கவிதையும் இளைப்பாறும் இடங்கள்; அறிவியலை விட்டு விலகாமல், சுமையிலிருந்து விலகும் இடங்கள்.
கேள்வி கேட்பதை பழக்குதல்
தொடக்கத்தில் பார்த்த காலிக் கட்டம் ஒரு தனித் தீவு அல்ல. அதன் தொடர்ச்சி மதிப்பெண் தரப்படும் வினாக்களுக்குள்ளும் நுழைந்திருக்கிறது.
ஆறு வினாக்கள். மூன்று வகுப்புகளிலும். வடிவம் ஒவ்வொரு முறையும் ஒன்றுதான்: ஒருவர் ஒரு சரிபார்க்கப்படாத கூற்றைச் சொல்கிறார். மாணவனின் வேலை விடை சொல்வது அல்ல, அக்கூற்றைச் சோதிக்கும் கேள்வியை உருவாக்குவது.
- அனில், சுவாசித்தலும் மூச்சுவிடுதலும் ஒன்றே என்கிறான். அவன் தவறு என்பதை உணர்த்த சான்வி என்ன கேட்க வேண்டும்?
- ராஜ் தன் நண்பனிடம் “செம்பருத்தி ஒரு புதர்ச் செடி” என்று வாதிடுகிறான். சஞ்சய் என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?
- வகுப்பு விவாதத்தில் ஒரு மாணவர்: “ஒருவர் ஒரு தீங்கு விளைவிக்கும் பொருளை ஒருமுறை முயற்சித்தால், அவர் விரும்பும்போது நிறுத்திவிட முடியும்.” இக்கூற்றின் உண்மைத்தன்மையைச் சோதிக்க நீ என்ன கேள்வி கேட்பாய்?
இக்கேள்விகளை மீண்டும் படியுங்கள். இவை பயிற்றுவிப்பது ஒரு பழக்கத்தை: ஒரு கூற்றை நம்புவதற்கு முன் ஒரு கேள்வியை உருவாக்குவது.
இக்குழந்தைகள் நுழையும் உலகில் தினமும் நூற்றுக்கணக்கான கூற்றுகள் அவர்களைக் கடந்து செல்லும். போதைப்பொருள் பற்றி, மருந்து பற்றி, உணவு பற்றி. அவற்றை ஒவ்வொன்றாகப் பாடமாக நடத்த முடியாது.
முடிவது ஒன்றே: கேள்வி கேட்கும் அந்த ஒரு நகர்வைப் பழக்கமாக்குவது.
“அவள் எதைச் சோதிக்கிறாள்?”
இதுவே மிக அசாதாரணமான கண்டுபிடிப்பு. ஐந்து வினாக்கள், மூன்று பாடங்களில், மூன்று வகுப்புகளிலும்.
யது ஒரு சோதனையை நடத்தினான். இரு சோதனைக் குழாய்களில் ஒரு சிட்டிகை அரிசி மாவு, பாதி நீர். B-ல் மட்டும் சில துளிகள் உமிழ்நீர். 35-45 நிமிடங்கள் கழித்து இரண்டிலும் அயோடின். முடிவு படத்தில். அவன் எதைச் சோதிக்க விரும்பினான்?
ஸ்நேஹல் தன் தோட்டத்தில் இரு குழிகள் தோண்டினாள். A-ல் காய்கறிக் கழிவுகளுடன் காய்ந்த இலைகள். B-ல் அதே கழிவுகள், இலைகள் இல்லாமல். இரண்டையும் மண்ணால் மூடி மூன்று வாரம் கழித்துப் பார்த்தாள். அவள் எதைச் சோதிக்கிறாள்?
ரக்ஷிதாவின் சுண்ணாம்பு நீர். ஆனந்தியின் ஈஸ்ட்டும் பலூனும். தாராவும் விஜயும் அமைத்த ஒரு சோதனை.
இவ்வினாக்களில் விடை கேட்கப்படவில்லை. கருவி அமைப்பு தரப்படுகிறது; முடிவும் தரப்படுகிறது. குழந்தை மீட்டெடுக்க வேண்டியது கருதுகோள். ஒருவர் ஏன் இதை இப்படிச் செய்தார்?
இது ஒரு தற்செயலான வடிவம் அல்ல. PISA 2025-ன் அறிவியல் சட்டகம் மூன்று திறன்களை வரையறுக்கிறது.
முதலாவது: நிகழ்வுகளை அறிவியல் வழியில் விளக்குதல் — இயற்கை மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகளுக்கான விளக்கங்களை அடையாளம் கண்டு, உருவாக்கி, பயன்படுத்தி, மதிப்பிடுதல்.
இரண்டாவது: அறிவியல் ஆய்வுக்கான வடிவமைப்புகளை உருவாக்கி மதிப்பிடுதல், மேலும் தரவையும் சான்றையும் விமர்சனப்பூர்வமாக விளக்குதல். ஓர் ஆய்வு வடிவமைப்பு அதன் நோக்கத்திற்குப் பொருந்துகிறதா, அதை எப்படி மேம்படுத்தலாம், முடிவுகள் நியாயமானவையா என்று எடைபோடுதல். (முன்பிருந்த இரு தனித் திறன்கள் PISA 2025-ல் இப்படி ஒன்றாக இணைக்கப்பட்டன.)
மூன்றாவது: அறிவியல் தகவலைத் தேடி, விமர்சனப்பூர்வமாக மதிப்பிட்டு, முடிவெடுப்பதற்கும் செயலுக்கும் பயன்படுத்துதல். இத்திறன் PISA 2025-ல் புதிதாகச் சேர்க்கப்பட்டது — காரணம், இன்று ஒரு குடிமகனைச் சூழ்ந்திருப்பது டிஜிட்டல் தகவல் மூலங்கள்.
இப்போது நமது அட்டவணையை அதனருகில் வையுங்கள்.
“ஏன்” வினாக்கள் எழுபது, முப்பத்தொரு பாடங்களில் — முதல் திறன். அது வியப்பல்ல; ஒவ்வொரு அறிவியல் நூலின் வேலையும் அதுவே.
யது, ஸ்நேஹல், ரக்ஷிதாவின் வினாக்கள் இரண்டாவது திறன். அனிலின் தவறான கூற்றும், போதைப்பொருள் பற்றிய கூற்றும் மூன்றாவது. அதாவது PISA 2025-ன் மூன்று திறன்களும் இந்நூல்களின் மதிப்பீட்டுப் பக்கங்களில் ஏற்கெனவே அமர்ந்திருக்கின்றன – சர்வதேச அளவில் அச்சட்டகம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டில்!
இங்கே ஒரு வேடிக்கையான உண்மையும் இருக்கிறது. இக்கட்டுரையில் நாம் செய்ததும் இதுவேதான். ஓர் அமைப்பைப் பார்த்து, அதன் விளைவைப் பார்த்து, அதை உருவாக்கியவரின் நோக்கத்தை மீட்டெடுக்க முயன்றோம்.
அப்பாடநூல் குழந்தையிடம் எதைக் கேட்கிறதோ? அதையே, நாம் அப்பாடநூலிடம் கேட்டுக்கொண்டிருந்தோம்!
சில பக்கங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே
காலிக் கட்டத்திற்கு மதிப்பெண் இல்லை என்று பார்த்தோம்.
‘Do you know?’, ‘Know a scientist’ பெட்டிகளுக்கும் மதிப்பெண் இல்லை.
யோசித்துப் பாருங்கள். ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறு பெட்டி. ஒரு குழந்தை அதைப் படிக்கிறது. அது தேர்வுக்கு வராது என்று அக்குழந்தைக்குத் தெரியும்.
அப்படியானால் அக்குழந்தை ஏன் படிக்க வேண்டும்?
அதற்காகவே. வேறு எந்தக் காரணமும் இல்லாததால்.
ஒரு பாடநூல் தன் சில பக்கங்களை வேண்டுமென்றே தேர்விலிருந்து காப்பாற்றுகிறது. ஆர்வம், மதிப்பெண் என ஒன்று வந்தவுடன் நின்றுவிடும் என்பது அதற்குத் தெரியும்.
எண்களைச் சேர்த்து வைத்தால்
| வடிவம் | வினாக்கள் | பாடங்கள் |
|---|---|---|
| பல பகுதி (i)(ii)(iii) | 120 | 32 / 34 |
| படம் அல்லது வரைபடம் | 75 | 25 / 34 |
| “ஏன்” / காரணம் கோருதல் | 70 | 31 / 34 |
| மரபு வடிவம் | 54 | 26 / 34 |
| பெயருடன் கூடிய சூழல் | 36 | 18 / 34 |
| அட்டவணை / தரவு | 16 | 13 / 34 |
| வடிவமைப்பு / படைப்பு | 8 | 8 / 34 |
| கருவி இல்லா சூழல் வினா | 6 | 4 / 34 |
| புதிர் | 6 | 5 / 34 |
| மாணவரே கேள்வி உருவாக்குதல் | 6 | 5 / 34 |
| சோதனையின் நோக்கத்தை ஊகித்தல் | 5 | 3 / 34 |
| கூற்று-காரணம் | 2 | 2 / 34 |
அட்டவணையை மீண்டும் கவனியுங்கள்.
முதலாவதாக. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்கள், பொருத்துக மற்றும் சரியா? தவறா? ஆகிய மரபு வடிவங்கள் 54 வினாக்களில் உள்ளன. ஆனால் எந்தப் பாடத்திலும் அவை நான்கை மிஞ்சுவதில்லை, ஒன்பது பாடங்களில் ஒன்றுகூட இல்லை.
ஓர் உச்சவரம்பு எழுதப்பட்டிருக்கிறது. விதி “பயன்படுத்தாதே” என்பது அல்ல; “தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்படுத்துக” என்பதே. .
இப்போது இயல்பான அடுத்த வேலை: இவை சேர்ந்து 35 : 35 : 30-ஐ எட்டியுள்ளதா என்று சொல்வது. முயன்றோம்; முடியவில்லை. காரணம் அட்டவணையின் முதல் வரியில் இருக்கிறது.
மூன்றில் ஒரு வினா பல பகுதிகள் கொண்டது. கௌரவின் எலும்பு முறிவு வினாவை நினைவுகூருங்கள்: (i) ஏன் கால்சியம்? புரிதல். (ii) ஏன் வைட்டமின் D? பயன்பாடு. (iii) உன் மனதில் என்ன கேள்வி எழுகிறது? மேற்-சிந்தனை. ஒரே வினா, மூன்று நிலைகள். இதை எந்த நிலைக்குள் நாம் வகைப்படுத்துவது?
ஒரு வினாவை ஒரு வகைப்பாட்டுக்குள் அடைக்க முடியவில்லை என்பது தோல்வி அல்ல; ஒரு வடிவமைப்பு முடிவைக் கண்டறிந்ததன் விளைவு.
எனவே ஒரு துல்லியமான விகிதத்தை நாம் சொல்ல மாட்டோம்; சொன்னால் அது பொய்யான துல்லியம். உறுதியாகச் சொல்ல முடிவது ஒன்றே: 378 வினாக்களில் நினைவுகூர்தல் மட்டுமே போதுமான வினாக்கள் 43. ஒன்பதில் ஒன்று. நமது பாரம்பரியப் பயிற்சிப் பக்கத்திலோ இது எழுபதாகவோ, எண்பதாகவோ இருக்கும்.
சமையலறை அல்ல, சாமான்கள் வைக்கும் அறை…
மேல் நிலை வினாக்கள் இவ்வளவு அதிகமெனில் 35 : 35 : 30 என்னவாகும்?
அது ஒரு வினாத்தாளுக்கான விகிதம். ஒரு பாடநூலின் மதிப்பீட்டுப் பகுதி வினாத்தாள் அல்ல. இதை நாம் ஊகிக்கவில்லை; மூன்று நூல்களின் “About the Book” பகுதியிலும் NCERT ஒரே வரியைத் திரும்பச் சொல்கிறது: மதிப்பீட்டுக்கான வினாக்கள் இப்பகுதியில் உள்ளவற்றைப் போலவே இருக்க வேண்டும்.

அப்படியானால் அது ஒரு வினாத்தொகுப்பு. ஆசிரியர் அதிலிருந்து எடுக்கிறார்: சிலவற்றை விவாதத்திற்கு, சிலவற்றை வீட்டுப்பாடமாக, சிலவற்றை அலகுத் தேர்வுக்கு.
சாமான் அறையில் இருபது பொருட்கள் இருக்கின்றன. ஒரு நாள் சமையலுக்கு ஏழெட்டை மட்டுமே எடுக்கிறீர்கள். ஆனால் அறையில் இல்லாத ஒன்றை உங்களால் எடுக்கவே முடியாது அல்லவா?
எனவே தொகுப்பானது, வினாத்தாளை விட மேல் நிலையில் செழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு எதிர்ப்பக்கமும் உண்டு: ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகக் குறைவாக இருந்தால், சமநிலையான தேர்வுத்தாளை நூலிலிருந்தே உருவாக்க முடியாமல் போகும்.
ஆசிரியர் புதிதாக எழுத வேண்டியிருக்கும். அப்போது ஒரே பாடம், ஒரே வகுப்பு, ஆனால் வெவ்வேறு பள்ளிகளில் வெவ்வேறு தரங்கள் உருவாகிவிடும்.
மீட்டெடுக்கப்பட்ட குறிப்புகள்
1. ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 10–12 வினாக்கள்.
2. பக்கம் எளிதில் தொடங்கி, கடினத்தில் முடியட்டும். முதல் வினாவில் யாரும் தோற்கக் கூடாது.
3. ஒரு வினா ஒரே வகைப்பாட்டு நிலையில் நிற்க வேண்டியதில்லை. (i), (ii), (iii) எனப் பிரித்து பல வகைப்பாட்டுப்படி நிலைகளில் அமைக்கலாம்.
4. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது ஒரு படம் அல்லது வரைபடம் சார்ந்த வினா.
5. ஒரு பாடத்தில் குறைந்தது மூன்று வினாக்கள் ஒரு நியாயப்படுத்தலைக் கோரட்டும் — “ஏன்?”, “எப்படி அறிவாய்?”, “உன் விடையை நியாயப்படுத்து”. விடை மட்டும் போதாது; விடைக்கான காரணமும் மதிப்பிடப்பட வேண்டும்.
6. மரபு வடிவங்கள் பாடத்திற்கு நான்குக்கு மிகாமல், தேவைப்படும் இடத்தில் மட்டும்.
7. ஒவ்வொரு பாடத்திலும் பெயருடன் கூடிய குழந்தைகள்; நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், அனைத்துச் சமூகங்களிலிருந்தும்.
8. எப்போதாவது ஒரு கருவியைப் பறியுங்கள். “இது இல்லாமல் எப்படிச் செய்வாய்?” என்பது சிறந்த வினா.
9. குழந்தை விடை சொல்வதோடு நிற்காமல், ஒரு கேள்வியை உருவாக்கவும் வாய்ப்பு தாருங்கள்.
10. ஒரு சோதனையின் அமைப்பைக் காட்டி, “இவர் எதைச் சோதிக்கிறார்?” எனக் கேளுங்கள்.
11. ஒவ்வொரு பாடத்திலும் ஒரு புதிர். ஒரு கவிதைகூட இருக்கலாம் தவறில்லை.
12. சில பக்கங்களை மதிப்பீட்டிலிருந்து வெளியே வையுங்கள்.
இவற்றுடன் ஒரு வரி நமக்காக கூடுதலாக சேர்க்க வேண்டும். ஒரு வினா கோரும் செயல் பாதுகாப்பானதா என்று சரிபார்க்கவும். அழகான ஒரு வினா ஒரு குழந்தையை ஆய்வகத்தில் தவறான ஒன்றைச் செய்யத் தூண்டக் கூடாது. ஆயிரக்கணக்கான வகுப்பறைகளுக்குப் போகும் ஒரு பாடநூல் நூல் இதைத் தவறவிடக் கூடாது.
குறிப்பில் இல்லாத இரு வரிகள்
ஒன்று: வேறுபாட்டுக்கு ஒரு வரம்பு. ஒரு பாடத்தில் வினாக்கள் ஒன்பது, இன்னொன்றில் பதினாறு. ஒன்பது பாடங்களில் மரபு வடிவம் பூஜ்யம், சிலவற்றில் நான்கு. இந்த வேறுபாட்டுக்கு காரணங்கள் உண்டு. ஆனால் எவ்வளவு வேறுபாடு ஏற்கத்தக்கது என்று சொல்லும் வரி எங்கும் இல்லை. குழந்தை பெறும் பயிற்சியின் வகை, அது எந்தப் பாடத்தைப் படிக்கிறது என்பதைப் பொறுத்து மாறுகிறது.
இரண்டு: பின்னோக்கிய இணைப்பு. 378 வினாக்களில் ஒன்றுகூட முந்தைய பாடத்தையோ வகுப்பையோ திரும்பத் தொடவில்லை. ஏறுவரிசை ஒரு பாடத்திற்குள் அற்புதமாகச் செயல்படுகிறது; பாடங்களைக் கடந்து அது நீள்வதில்லை.
கற்றல் உளவியலின் இரு உறுதியான கண்டுபிடிப்புகள் இதற்கு எதிரானவை. கலப்புப் பயிற்சி (interleaving): வெவ்வேறு வகைப் பிரச்சினைகளைக் கலந்து பயிற்சி செய்வது, ஒரே வகையைத் தொடர்ச்சியாகச் செய்வதைவிட நீண்டகால நினைவைக் கூட்டுகிறது (Rohrer & Taylor, 2007). இடைவெளி விளைவு (spacing effect): ஒரே மொத்தப் பயிற்சி நேரத்தை இடைவெளிகளுடன் பரப்புவது கற்றலை நிலைநிறுத்துகிறது (Cepeda et al., 2006)..
இதைச் செயல்படுத்துவது கடினமும் அல்ல. ஒரு பாடத்தின் பன்னிரண்டு வினாக்களில் ஒன்றோ இரண்டோ முந்தைய பாடத்தையோ முந்தைய வகுப்பையோ தொடட்டும். வெப்பப் பாடத்தின் ஒரு வினா அளவீட்டுப் பாடத்தின் கருத்தையும் கோரட்டும். இது ஒரு புதிய பகுதி அல்ல; ஒரு வினாவின் சூழலை மட்டும் மாற்றுவது. ஆனால் அதன் விளைவு பெரியது — கற்றது மறையாமல் இருப்பது அதன் மீது மீண்டும் ஒரு முறை கை வைப்பதால் மட்டுமே.
முன்மாதிரியும் அமைப்பும்
கியூரியாசிட்டியின் இந்த மீட்டெடுத்த பன்னிரண்டு குறிப்புகளில் எண்களையும் வரம்புகளையும் சேர்ப்பது; விட்டுப் போன குறிப்புகளை எழுதிச் சேர்ப்பது. ஆகியவற்றைச் செய்து நாமும் நமக்காக ஒரு ஆவணத்தை உருவாக்கலாம். அந்த ஆவணத்திற்கு ஒரு பெயர் உண்டு: மதிப்பீட்டு விவரக்குறிப்பு (assessment specification).
இது ஒரு பாடநூல் குழுவுக்கானது என்று தோன்றலாம். ஆனால் ஓர் அலகுத் தேர்வை உருவாக்கும் ஆசிரியர் கேட்க வேண்டிய கேள்விகளும் இவையே — எத்தனை வினாக்கள், எந்த வடிவங்கள், எவ்வளவு நினைவுகூர்தல், எங்கே ஒரு காலியிடம்.
அந்தக் காலிக் கட்டத்திற்குத் திரும்புவோம்
கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு பாடநூல் தனது மதிப்பீட்டு பக்கத்தில் ஓர் இடத்தைக் காலியாக விட்டிருந்தது. ஒரு குழந்தை அதை தனது கேள்விகளால் நிரப்புகிறது.
நாமும் ஒரு காலியிடத்தை நிரப்பினோம். ஒரு தேசிய நூல் நமக்கு முன் வைத்திருந்தது ஒரு வினாத்தொகுப்பு மட்டுமல்ல; அதுவும் ஒரு காலிக் கட்டம்தான் – “இதுவரை நீ கண்டவற்றின் அடிப்படையில் உன் விதிகளை எழுது.”
ஆனால் ஒரு விஷயம். ஒரு பாடநூல் ஆசிரியர் அப்பக்கத்தை ஒரு முறை எழுதுகிறார்; ஒரு வகுப்பாசிரியர் ஒவ்வொரு நாளும் எழுதுகிறார். இவ்வினாக்களில் எவை வகுப்பில் கேட்கப்படும், எவை வீட்டுப்பாடமாகும், எவை ஒருபோதும் தொடப்படாமல் நிற்கும் – அது ஒவ்வொரு வாரமும் அந்த ஆசிரியரால் எடுக்கப்படும் முடிவு. அறிவியலில் மட்டுமல்ல; தமிழிலும், கணிதத்திலும், சமூக அறிவியலிலும்.
எஞ்சியிருப்பது ஒரு கேள்வி மட்டுமே. நமது பாடத்தின் இறுதியிலும், குழந்தைகளின் குரலுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கப்படுமா?
அல்லது அப்பக்கத்தை, அந்த நேரத்தை முழுவதுமாக நாமே பேசித் தீர்த்துவிட்டு, குழந்தைகளின் அகத்தில் எழும் கேள்விகளை மௌனமாக்கிவிட்டு வெளியேறுவோமா?
தொடர்ந்து பேசுவோம் — சாக்பீஸ்டைரி.
இந்த ஆய்வு எதைச் சொல்லவில்லை
இது வினாக்களை மட்டும் ஆய்வு செய்தது. பாட உள்ளடக்கத்தின் தரம், படங்களின் தரம், மொழி நிலை — எதுவும் மதிப்பிடப்படவில்லை.
வகுப்பறை நடைமுறை ஆய்வு செய்யப்படவில்லை. ஒரு வினா நன்றாக வடிவமைக்கப்பட்டிருப்பதற்கும், அது வகுப்பில் நன்றாகப் பயன்படுத்தப்படுவதற்கும் இடையே பெரிய தூரம் உண்டு.
ஆசிரியர் கையேடு சேர்க்கப்படவில்லை.
வடிவம் சார்ந்த எண்கள் அமைப்பிலிருந்து நேரடியாக எண்ணப்பட்டவை. அறிவாற்றல் நிலை சார்ந்த ஒரு முழுமையான விகிதம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது; காரணம் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள் காட்டப்பட்ட வினாக்கள் தமிழில் சுருக்கித் தரப்பட்டுள்ளன; மூலம் ஆங்கிலத்தில்.
மேலும் படிக்க
- மாணவனின் மூளையிடம் பேசும் இடம்
- வினாத்தாள் உங்களை அளவிடுகிறதா? ஏமாற்றுகிறதா?
- உலகின் சிறந்த பாடநூல்களின் வடிவமைப்பு இரகசியங்கள்
- கேள்விகளால் இயங்கும் வகுப்பறை — DQB
மூலங்கள்
- NCERT Curiosity — வகுப்பு 6, 7, 8 அறிவியல் பாடநூல்கள்; ‘About the Book’ பகுதி
- PARAKH, NCERT — சமநிலையான வினாத்தாள் தயாரிப்பு வழிகாட்டி நெறிமுறைகள்
- PARAKH — நடுநிலைப் பள்ளிக்கான முழுமை முன்னேற்ற அட்டை
- CBSE — சுற்றறிக்கை Acad-30/2024, வினாத்தாள் அமைப்பு
- NCF-SE 2023, பிரிவு 4.6.2; NEP 2020, பத்தி 4.34
- TIMSS 2023 Assessment Frameworks, IEA
- OECD, PISA 2025 Science Framework — Competency 2 மற்றும் Competency 3
- Rohrer, D. & Taylor, K. (2007). The shuffling of mathematics problems improves learning. Instructional Science
- Cepeda, N. et al. (2006). Distributed practice in verbal recall tasks. Psychological Bulletin
